முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#metoo பிரச்சாரம்: பெண்ணியம் என்பது ஆண்களை வேட்டையாடுவதா? (1)


(மின்னம்பலத்தில் வெளியான கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம் இது)



தற்போது காட்டுத்தீயை போல பரவி வரும் #metoo பிரச்சாரம் ஒரு முக்கியமான போராட்டம். அதே சமயம் குற்றம் செய்கிறவர்கள் பிடிபடுகிறார்கள் என இதில் குற்றம் சாட்டப்படும் ஆண்களைப் பற்றி நாம் கறுப்பு-வெள்ளையாய் பேசி விட்டுப் போகவும் முடியாது. மிக சிக்கலான ஒரு தளம் இது. எப்படி என சொல்கிறேன்.


#metoo பிரச்சாரத்தில் மூன்று வகையான நபர்கள் மாட்டுகிறார்கள்.
1)   நேரடியாய் பாலியல் பலாத்காரம் செய்தோர் / முயன்றோர். வைரமுத்து மீது இரு பெண்கள் டிவிட்டரில் வைத்திருக்கும் குற்றச்சாட்டை நாம் இந்த வகையில் சேர்க்கலாம். வைரமுத்துவுக்கு எதிராய் போதுமான ஆதாரத்தை அப்பெண்கள் தராத பட்சத்தில் நாம் அவரை தெருமுனையில் நிறுத்தி காறி உமிழக் கூடாது. ஒருவேளை அவர்களால் நிரூபிக்க முடியுமென்றால் அவர் ஒரு இளம்பெண்ணை தழுவி முத்தமிட முயன்றதை நான் அத்துமீறல் என நிச்சயம் முத்திரை குத்துவேன். சினிமாத் துறை, பத்திரிகை, அலுவலகம் எனும் இடங்களில் நிகழ்வதாய் சொல்லப்படும் குற்றங்களை முழுக்க மொட்டையாய் பலாத்காரம் எனச் சொல்லக் கூடாது. இவை ஒருவித மீறல்கள். பாலுறவுக்கான அழைப்புகள். அல்லது பாலியல் சுரண்டல்கள். வைரமுத்து நிச்சயம் ரேப்பிஸ்ட் அல்ல. இக்குற்றச்சாட்டு உண்மையெனில் அவர் ஒரு இளம்பெண்ணிடம் தன் விருப்பத்தை தவறான வகையில் காட்டி இருக்கிறார். அவர் அவளை உடல்ரீதியாய் காயப்படுத்தவோ வற்புறுத்தி / மிரட்டி உறவுகொள்ளச் செய்யவோ இல்லை. அது குற்றமே, ஆனால் பலாத்காரம் அல்ல. அவர் அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும்; அத்துடன் அப்பிரச்சனையும் முடிந்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக அவரை கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப அதிகம். இன்று நாம் (மீடியா பரபரப்புக்காக) சிறிய குற்றங்களையும் பெரிய அத்துமீறல்களையும் இவ்வாறு ஒரே பட்டியலில் அடைக்க முயல்கிறோம்.
2)   பரஸ்பர உறவில் இருந்து விட்டு பின்னர் உறவு கசந்து போக பெண்களால் குற்றம் சாட்டப்படுபவர்கள்.
ஜலந்தரில் செயல்பட்ட ரோமன் கத்தோலிக்க ஆயர் பிராங்கோ முலக்கல் விவகாரத்தை இவ்வகையில் சேர்க்கலாம். கடந்த ஜூலை மாதம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஆயர் பிராங்கோவுக்கு எதிராய் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். 2014-16 காலகட்டத்தில் ஆயர் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாய் அவர் கூறினார். ஆனால் இத்தனைக் காலம் அப்பெண் ஏன் அமைதியாய் இருந்தார்? ஏன் முதல் முறை குற்றம் நடந்த போதே அவர் புகார் தெரிவிக்கவில்லை எனும் கேள்விகள் முக்கியமானவை. ஆனால் ஆயரின் அதிகாரம், பணபலம், கன்னியாஸ்திரிக்கு அவர் ஏற்படுத்த சாத்தியமுள்ள இழப்புகள் குறித்தும் சிந்தித்தோமானால் அப்பெண்ணின் தரப்பில் நியாயம் உள்ளதாய் தோன்றும். இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. ஆயர் இப்போதும் அதே அதிகாரம் மற்றும் பணபலம் கொண்டவரே. இப்போது மட்டும் எப்படி வந்தது இந்த துணிச்சல்? ஆயருக்கு எதிரான அரசியல் குழுவொன்று இப்பெண்ணுக்கு ஆதரவு அளிக்கிறதா? அத்துணிச்சலா? இருக்கலாம்.
இந்த வழக்கில் ஒரு சிக்கல் இது: ஒருவேளை ஆயருக்கும் இந்த கன்னியாஸ்திரிக்கும் ஒரு உறவு இரு வருடங்களாய் இருந்து அது கசந்த நிலையில் / அவர் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்ட நிலையில் இந்த குற்றச்சாட்டு அப்பெண்ணிடம் இருந்து எழுந்திருக்கலாம் இல்லையா? இந்த சாத்தியத்தை நாம் மறுக்க முடியாது.
சரி, இதுவும் நியாயமா? அப்பெண்ணை அவர் பயன்படுத்தியிருக்கலாமா? ஆனால் இது பயன்படுத்தல் மட்டுமே என எப்படித் தெரியும்? முழுக்க இருவர் விருப்பமின்றி, இருவருக்கும் பலன்றி இது நடந்திருக்கும் என எப்படித் தெரியும்?
ஒரு துறவி இப்படி செய்யலாமா? ஒரு துறவியும் மனிதரே. மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று செக்ஸ். ஒரு அமைப்பு இதை மறுத்தால் அந்த அமைப்புக்குள் மாட்டிக் கொண்ட உடல் நிச்சயம் அதைத் தேடி அடைய வழிகளைக் காணும். செக்ஸே இன்றி ஒருவர் வாழ நேர்வது தான் துயரம்.
ஒருவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணை பணிய வைக்கலாமா?
செக்ஸை பொறுத்தமட்டில் இது ஒரு குழப்பமான ஏரியா. செக்ஸுக்கும் அதிகார விழைவுக்கும் பணிதலுக்கும் நுணுக்கமான ஒரு தொடர்பு உண்டு, அதிகாரத்தை, பணத்தைக் காட்டி இணையை உறவுக்குத் தூண்டுவதும் திறமையை அழகைக் காட்டி அதையே செய்வதும் ஒன்று தான்.
மேலும் செக்ஸின் போது எந்த பெண்ணும் அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்து படுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு கதவாய் நீங்களாய் முட்டி மோதி நுழைய வேண்டி இருக்கும். சிலநேரம் இது குறுகிய கால மூர்க்கமாகவோ சிலநேரம் நீண்ட நேர foreplayயாகவோ காதல் மன்றாடலாகவோ இருக்கும். சில நேரம் ஒரு பெண்ணை ஒரு ஆண் மீதான தன் இச்சையை உடனடியாய் வெளிப்படையாய் காட்டி அவனை தன் மீது உடனடியாய் செலுத்துவாள். ஆணுக்கு உணர்வுரீதியாய் விருப்பமில்லாமல் போனாலும் அவன் தன்னையறியாது உடன்பட்டே ஆவான், ஆனால் இந்த விசயத்தில் ஜனநாயக விழுமியம் என்பது சுத்தமாய் இல்லை. எந்தளவு சமத்துவம் இல்லையோ அந்தளவுக்கு செக்ஸ் அதிக இன்பமூட்டும்.
ஒரு பெண் தனக்கான துணையை நாடும் போது அதிகாரத்திலும் பெயரிலும் பணத்திலும் மேம்பட்ட ஒருவனை நாடலாம்; அல்லது இனிய சுபாவமுள்ள கனிவான அன்பான ஆணுக்கு தன்னை அளிக்கலாம். இருவகையாகவும் நடக்கிறது. சில அலுவலகங்களில் மேலதிகாரிகளும் / முதலாளிகளுக்கும் அவர்களின் கீழ் பணி செய்யும் பெண்களுக்கும் இடையில் பாலியல் தொடர்புகள் ஏற்படுகின்றன. அரிதாகவே பெண்ணை கடத்திச் சென்று கத்தியைக் காட்டி கற்பழிக்கிறார்கள். சிலநேரம் வற்புறுத்துகிறார்கள். ஆனால் நிறைய சந்தர்பங்களில் பெண்களும் ஆண்களின் தேவையை அறிந்து அவர்களை பயன்படுத்துகிறார்கள் அல்லது அத்தகைய ஆண்கள் பால் ஈர்க்கப்படுகிறார்கள். என் தோழி ஒருவர் ஒரு சிட்பண்ட நிறுவனத்தில் பணி புரிகிறார். அவர் விவாகரத்தானவர். ஒரு குழந்தை உண்டு. அந்நிறுவனத்தில் ஒவ்வொரு வாரமும் அவர் எட்ட வேண்டிய இலக்கு உண்டு. தன் முதலாளியின் சபலத்தைக் கண்டு இப்பெண் பாலுறவுக்கு ஒப்புக் கொண்டார். இப்போது அவர் கட்டாயமாய் இலக்கை எட்ட வேண்டியதில்லை. குழந்தையின் பள்ளிக்கட்டணம் உள்ளிட்ட வீட்டுச் செலவுகளை முதலாளி பார்த்துக் கொள்கிறார். இவ்விசயத்தில் அந்த ஆண் மட்டுமே இவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை; தானும் அவரை பயன்படுத்திக் கொள்வதாய் தோழி என்னிடம் வெளிப்படையாய் சொல்கிறார். இவர் எல்லா ஆண்களையும் பயன்படுத்துபவர் இல்லை. ஆனால் அந்த சூழல் அப்படி அமைந்து விட்டது. நாளை என் தோழியும் metoo# பிரச்சார பேரணியில் இணைந்து கொண்டால் நாம் அனைவரும் அந்த முதலாளியைபொம்பள பொறுக்கிஎன வைவோம் தான். ஆனால் உண்மை அப்படி கறுப்பு-வெள்ளை அல்ல.
3)   மூன்றாவது வகை பெண்களிடம் பாலியல் விருப்பம் தெரிவிக்கும் ஆண்கள். வணிக எழுத்தாளர் சேத்தன் பகத் தன்னிடம் வழிந்ததாய், தன்பால் விருப்பம் தெரிவித்ததாய் ஒரு பெண் இப்போது metoo# பிரச்சார கொடி உயர்த்தி உள்ளார். “நீங்கள் மணமானவர், இப்படி என்னை அணுகலாமா?” எனக் கேட்டு அப்பெண் அதை மறுத்ததாய் சொல்லி உள்ளார். பகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்களை அப்பெண் வெளியிட, பகத் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதை எப்படி பாலியல் தாக்குதல் / சுரண்டல் எனக் கூறலாம், இது மிகையான குற்றச்சாட்டு அல்லவா என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். இங்கு தான் நாம் பெண்களின் மொழியை புரிந்து கொள்ள வேண்டும்.
அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் சென்று நீங்கள்உன் துப்பட்டாவை ஒழுங்கு பண்ணிக்கோஎனச் சொன்னால் அவள் காயப்படுவாள். தன்னை நீங்கள் தவறாய் பார்ப்பதாய் நினைப்பாள். நீங்களோநான் அவள் நன்மைக்காகத் தானே சொன்னேன்? என் மீதே குற்றச்சாட்டை வைப்பதா?” என ஒரு ஒழுக்கவியல் மனநிலையில் கவலைப்படுவீர்கள். ஒரு ஆணிடம் உன் சட்டையில் அழுக்கு ஒட்டி இருக்கிறது என்பதும், “ஏன் தலையை கோதவில்லையா?” எனக் கேட்பதற்கும் பெண்ணிடம் கேட்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு பெண் உங்களை கடந்து செல்லும் போது அவளை தொலைவில் இருந்தே கவனித்து நீங்கள் கையசைத்து புன்னகைத்தால் நீங்கள் பாலியல் இச்சையை வெளிப்படுத்துவதாய் அவள் நினைக்கக் கூடும். துப்பட்டா, சட்டையில் அழுக்கு, தலை கலைந்துள்ளதே என எப்படியான அக்கறை காட்டினாலும் அப்பெண்ணின் புரிதல் வேறுவகையாக இருக்கும். பெண்ணின் மொழியில் ஒவ்வொரு சிறு சைகைக்கும் மிகப்பெரிய அர்த்தங்கள் உண்டு. ஒரு பெண்ணை நீங்கள் ரெண்டு வினாடிகள் பார்த்திருப்பீர்கள், அவளோ அதைஅவன் நீண்ட நேரமாய் என்னை ஒருமாதிரி பார்க்கிறான்என புரிந்து கொள்வார். ஒரு பெண் சாலையை கடந்து செல்லும் போது தன்னை எத்தனை பேர்கள் கவனிக்கிறார்கள் (பத்து நிமிடத்தில் 20 பேர்) என ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். ஆண் சாலையை கடக்கிறான் என்றால் அவன் எதிரே வரும் லாரியை கூட சரியாய் கவனிக்க மாட்டான். என் தோழி ஒருவர் தனக்கு தினமும் முகநூலில் வரும் நட்பு அழைப்புகளின் கணக்கை ஒப்பிப்பார். “என்னை ஏன் இத்தனை பேர் வளைத்துப் போட முயல்கிறார்கள்? இன்றைக்கு அதற்கு ஏற்ப என் செயலில் என்ன தான் இருந்தது?” என்றெல்லாம் அவர் எனக்கு எரிச்சல் வரும் வரை வியந்தபடியே இருப்பார். என் முகநூல் கணக்கில் நட்பு அழைப்பு விடுத்தவர்களில் நான் ஏற்காதவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உண்டு (என் நட்பு எண்ணிக்கை லிமிட்டை தாண்டி விட்டதே காரணம்). எனக்கும் தினமும் நட்பு அழைப்பு வருகிறது. தோழியை விட அதிக எண்ணிக்கையிலே. பெண்களிடம் இருந்தும் வருகிறது. ஆனால் நான் அப்பெண்ணி நட்பழைப்புகளை பாலியல் அழைப்பென ஒரு நொடி கூட அர்த்தப்படுத்தி எரிச்சலானதில்லை. ஆனால் பெண்கள் அப்படித் தான். அவர்களின் மொழி வேறு, ஆண்களின் மொழி வேறு. பெண்கள் அதி-கவன, அதி-நுணுக்க பார்வைத் திறன் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் ஒரு நுண்பெருக்கியை கையில் கொண்டே திரிகிறார்கள்.
ஒரு பெண் நம்மைக் கடந்து போகும் போது தொலைவில் இருந்து பார்த்ததும் புன்னகைக்கக் கூடாது. கடந்து போகும் அந்த மைக்ரோ வினாடியில் சின்னதாய் ஒரு பார்வை பரிமாற்றம், மிக சன்னமாய், இருந்தும் இல்லாதது போல ஒரு புன்னகைஇதுவே பெண்களின் மொழியில்ஹை”. நீங்கள் இதே பெண்ணிடம் இளித்துப் பார்த்து புட்டபர்த்தி பாபா ஆசி புரிவது போல கையை உயர்த்தி தொடர்ந்து சைகை செய்தால் அப்பெண்ணின் மொழியில் நீங்கள் அவள் மீது விருப்பம் காட்டுகிறீர்கள், அவள் உடலை ரசிக்கிறீர்கள் என ஆகி விடும். “புது டிரஸ்ஸா, நல்லா இருக்கேஎன்றாலும் அதுவே பொருள். நீங்கள் ஒரு உயரதிகாரியாக இருந்து உங்கள் கீழ் பணி செய்யும் பெண்ணிடம் இதைச் சொன்னால் அப்பெண் நீங்கள் பாலியல் தொந்தரவு செய்வதாய் கருதிக் கொண்டு டிவிட்டரில் ஹாஷ் டேக் உங்களுக்கும் போட்டு தெருமுனையில் சாத்தும் வாய்ப்புண்டு. நான் பெண்களை குற்றம் சொல்ல மாட்டேன். ஆண்களுக்குத் தான் அவர்களின் மொழி இன்னும் புரியவில்லை.
 உன் ஹேர்ஸ்டைல் சூப்பர்ம்மாஎன்றாலே ஒரு பெண்ஐ லவ் யூரேஞ்சுக்கு அதை அர்த்தப்படுத்துவார் எனில் சேத்தன் பகத்ஐ லவ் யூசொன்னால் அப்பெண் அதைபடுக்க வருகிறாயா?” என்றே அர்த்தப்படுத்துவாள். நான் அவளை குறை சொல்ல மாட்டேன். அது பகத்தின் குற்றமே. பெண்களிடம் பேச நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. அதில் நானும் நீங்களும் பகத்தும் அடக்கம்.
பெண்களிடம் எப்படி பேசுவது?
ஒரு பெண் அழகாய் ஆடையணிந்து சுட்டியாக தெரிகிறார். அதை பாராட்ட நினைக்கிறீர்கள் என்றால் அவள் அருகே சென்றுபேனா இருந்தா கொடுங்க / ஸ்டேப்பிளர் பின் உள்ளதா?” என கண்ணியமாய் பளிச்சென்று முகத்தை வைத்துக் கொண்டு கேட்டால் போதும். அவர் புரிந்து கொள்வார். அவர் அருகே பத்து நொடி நீங்கள் ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு நின்றாலேஅழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறதுஎன நீங்கள் சொல்வதாய் அர்த்தம். இந்த மறைமுக மென்மையான உணர்த்தல்கள் பெண்களுக்கு அவசியம். விருப்பத்தை நேரடியாய் காட்டுவதை அவர்கள் வன்முறையாக, பாலியல் அத்துமீறலாகவே பார்ப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...