முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Metooவும் மத-ஒழுக்கவாதிகளும்: அப்பாலே போ சாத்தானே! (2)


Image result for metoo india

செக்ஸை ஒரு ஒடுக்குமுறை ஆயுதமாய் பார்க்கும் நோக்கு பெண்ணியத்தை ஒழுக்கவாதிகளின் அணியில் கொண்டு சேர்த்தது. ஒழுக்க யுத்தத்தில் விக்டோரிய தலைமுறையினர் செயல்பட்டது போன்றே அமெரிக்காவில் எழுபது, எண்பதுகளில் பெண்ணியவாதிகள் நடந்து கொண்டனர். அவர்கள் போர்னோகிரபியை தடை செய்ய கோரினர்; விபச்சாரத்தை முடக்க போராடினர். திறந்தவெளி செக்ஸ், ஓரின செக்ஸ் ஆகியவற்றை எதிர்த்தனர். இதை இரண்டாம் அலை பெண்ணியத்தின் செக்ஸ் யுத்தம் என அழைக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பெண்ணியம் இரண்டாய் பிரிந்ததுநேர்மறை-செக்ஸ் பெண்ணியவாதிகள் மற்றும் போர்னோகிராபி-எதிர்ப்பு பெண்ணியவாதிகள். நேர்மறை-செக்ஸ் பெண்ணியவாதிகள் போர்னோகிராபியை ஒரு மாற்று பாலியல் வழியாய், விபச்சாரத்தை ஒரு பாலியல் தொழிலாய், தனிமனித உரிமையாய் அவர்கள் கண்டனர். ஆனால் போர்னோகிரபி-எதிர்ப்பு பெண்ணிவாதிகளோ போர்னோ மற்றும் பாலியல் தொழிலை பெண்ணுடல் மீது செலுத்தப்படும் ஆணாதிக்க ஒடுக்குமுறையாய், வன்முறையாய் மட்டுமே கண்டனர்.


சுவாரஸ்யமாய், குடும்ப அமைப்புக்குள் பெண்கள் கிட்டத்தட்ட பாலியல் தொழிலாளியாய் நடத்தப்படுவதுண்டு; எத்தனையோ பெண்கள் விருப்பமற்று பாலுறவில் ஈடுபடுவதும், கணவனின் பார்வை இச்சைக்கு தம் உடலை விருந்தாக்குவதும், தொடர்ந்து குழந்தைப் பேறில் ஈடுபடுவதும் காலங்காலமாய் நடந்து வரும் ஒன்று. தாம்பத்யத்திலும் பெண்ணுடல் ஒரு துய்ப்புக் கருவி தானே. ஏன் பெண்ணியவாதிகள் தாம்பத்ய பாலுறவுக்கு, குழந்தைப்பேறுக்கு எதிராய் கிளர்ந்தெழுந்து போராட்டங்கள் நடத்துவதில்லை? தாம்பத்ய பாலுறவு பெண்ணின் விருப்பத்துடன் நடைபெறுகிறது என ஒரு பெண்ணிவாதி வாதிட்டால், அதையே நாம் விபச்சாரத்துக்கும் சொல்லலாம் தானே என திரும்ப கேட்க முடியும். விபச்சாரம் அடிப்படையில் ஆணின் துய்ப்புக்கானவளாய் பெண்ணை அடையாளப்படுத்துகிறது என்பதே போர்னோ-எதிர்ப்பு பெண்ணியத்தின் பிரதான வாதம். இதே காரணத்துக்காகவே அவர்கள் strip club, sadomasochism ஆகியவற்றையும் எதிர்க்கிறார்கள். நேர்மறை-செக்ஸ் பெண்ணியவாதிகளோ விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் அதை வன்முறையற்றதாய், பாதுகாப்பானதாய் மாற்றலாமே என வாதிட்டார்கள். ஆனால் விபச்சாரம் என்பது போர்னோ-எதிர்ப்பு சாராருக்கு ஒரு அருவருக்கத்தக்க விசயமாகவே எண்பதுகள் வரை தொடர்ந்தது.
அமெரிக்காவில் பெண்ணியத்துக்கும் மதவாத ஒழுக்கவியலுக்குமான தொடர்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தே துவங்கி விட்டது. அமெரிக்க பெண்களை பெருமளவில் பால் சமத்துவத்துக்கான போராட்ட களத்திற்கு வரவழைத்தது The Women’s Christian Temperance Union என்ற அமைப்பு. Temperance என்றால் மது, மாது, இறைச்சி ஆகியவற்றை அன்றாட வாழ்வில் தவிர்ப்பது. கிறித்துவ மத நோன்பாக இதைப் பார்க்கிறார்கள். ஆண்கள் மிதமிஞ்சி மதுவருந்துவது குடும்பத்துக்கும் பெண் நலனுக்கும் கேடானது எனும் பார்வையின் அடிப்படையில் மதுவை தடை செய்யக் கோரி Temperance Union அமைப்பு அமெரிக்கா முழுக்க பெண்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தியது. இந்த கிறித்துவ அமைப்பின் போராட்டங்களே பின்னர் ரேடிக்கல் பெண்ணியத்தின் எழுச்சிக்கு வழிகோலியது, முறைமையை ஏற்படுத்திக் கொடுத்தது என்கிறார்கள் அறிஞர்கள்.
 பெண்களுக்கான ஓட்டுரிமைக்காய் இந்த Temperance அமைப்பு போராட வேண்டுமென கோரிக்கை எழுந்த போது அதை ஆரம்பத்தில் அந்த அமைப்பினர் மறுத்தனர். பெண் உரிமை, பெண் சமத்துவம் ஆகியவற்றை ஆண்-பெண் உறவு, குடும்பம் ஆகிய கட்டமைப்புகளைத் தாண்டி சிந்திக்க இந்த ஆரம்ப கட்ட பெண்ணிய போராளிகளுக்கு பெரும் தயக்கம் இருந்ததை முக்கிய பெண்ணியவாதியான சூசன் பலூதி சுட்டிக் காட்டுகிறார்.
 மதவாதிகளுக்கும் பெண்ணியவாதிகளுக்குமான இந்த கைகோர்ப்பு தற்சமயம் வேறு வடிவம் எடுத்துள்ளது: ஆண்களை சாத்தான் என்றும் பெண்களை ஆண்களால் ஏமாற்றப்பட்டு ஏய்க்கப்படும் தேவதைகளாகப் பார்ப்பதும் இன்று வரை metoo இயக்கத்தில் தொடர்வதை சூசன் பலூதி உணர்த்துகிறார் (“The Patriarchs are Falling. The Patriarchy is Stronger than Ever” கட்டுரையில்). சாத்தான்சாத்தானால் வீழ்த்தப்பட்ட ஏவாள் எனும் இருமை கிறுத்துவத்துக்கே உரித்தான ஒன்று. இன்று பெண்ணியவாதம் பரந்துபட்ட அரசியல் சமூக போராட்டங்களாக மலர்வதற்கு, அனைத்து மக்கள் தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக சீர்திருத்தங்களை நோக்கி ஒரு விரிவான களத்தில் வளர்வதற்கு இந்த இருமை தடையாக உள்ளதை அவர் சுட்டுகிறார். உதாரணமாய், டிரம்பின் அரசாங்கம் அமெரிக்காவில் பெண்களுக்கான வரிச்சலுகைகளை ரத்து செய்துள்ளதை எதிர்த்து ஏங்கல் மற்றும் டிஸ்லர் எனும் போராளிகள் தம்மை போர்ட் நிறுவன அலுவலக வாயிலில் தம்மை சங்கிலியால் பிணைத்து போராடினர். ஆனால் metoo வெளிப்பாடுகளுக்கு கிடைக்கும் கவனத்தில் 10% கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை. பல கோடிப் பெண்களை இந்த சலுகை ரத்து அடிவயிற்றில் அடிக்கப் போகிறது. ஆனால் கண்ணுக்குத் தெரியாத அரசியல் பொருளாதார எதிரியை எதிர்ப்பதில் பெண்ணியவாதிகளுக்கு பெரிய ஆர்வம் இல்லை. நேரடியான எளிய ஆண் இலக்குகளே அவர்களுக்கு சௌகர்யமாக உள்ளது. ஆணாதிக்கவாதம் என்பதை ஆண்கள் என சுருக்கிக் காண்பது பெண்ணிய அமைப்புகளுக்குபோர் போர் போர்என முழக்கமிடவும், பெரும் ஆதரவாளர் படையை திரட்டவும் சுலபமாக உள்ளது. ஆனால் சாத்தான் vs ஏவாள் எனும் கிறுத்துவ உருவகத்தை விட்டு வெளியே வராத வரையில் பெண்ணிய போராட்டம் ஆணாதிக்கவாதத்தை முறியடிக்க இயலாது என்கிறார் சூசன் பலூதா. அமெரிக்காவில் டிரம்புக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் ஜனாதிபதி பதவிக்கான போட்டி நிலவிய போது சில பெண்ணியவாதிகள் ஹிலாரியை ஒரு சுவாரஸ்யமான காரணத்துக்காக கடுமையாய் எதிர்த்தார்கள்: கிளிண்டனின் பாலியல் மீறல்கள், கள்ள உறவு குறித்த சர்ச்சைகளின் போது ஹிலாரி கிளிண்டனை கடுமையாய் எதிர்த்து விவாகரத்து செய்திருக்க வேண்டும், மாறாக அவர் கிளிண்டனை மன்னித்து ஏற்றிருக்கக் கூடாது, சமரசம் பண்ணியிருக்கக் கூடாது என இந்த ரேடிக்கல் பெண்ணியவாதிகள் கருதினார்கள். ஏன் அப்படி நினைத்தார்கள்?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...