முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிகரெட் புகைக்கும் பெண் (5)


Related image
இன்றைய பெண்களும் சிகரெட்டும்
பெண்களுக்கும் சிகரெட்டுக்குமான உறவு இரு முகங்கள் கொண்டது:
1)   நான் சென்னையில் மாணவிகள் புகைத்து பார்த்ததில்லை. ஆனால் வேலைக்குப் போகும் இளம் பெண்கள் சாலையில் நின்று சிலாக்கியமாய் சிகரெட் ஊதுவைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அப்போது எனக்கு சில விசயங்கள் பட்டன. ஒரு பெண் சிகரெட் புகைப்பது அவளை முரட்டுத்தனமாய், ஆண்மை கொண்டவளாய் காட்டுவதில்லை. கற்பனையில் நாம் அப்படியே நினைத்தாலும் நிஜத்தில் சிகரெட் புகைக்கும் பெண் அழகானவள். அதற்கு பெண்களின் சிகரெட்டின் நீளமும் நளினமும் அவர்கள் சிகரெட்டை கையில் வைத்திருக்கும் தோரணையும் ஒரு காரணம். இப்பெண்கள் நன்றாய் மேக் அப் செய்து தம்மை வசீகரமாய் காட்டக் கூடியவர்கள். லிப்ஸ்டிக் உதடுகள் நடுவே மெல்ல புகையும் அந்த நீள சிகரெட் ஒரு ப்ளோ ஜாப் பிம்பமாய் ஒரு ஆணுக்கு உருமாறுகிறது; இதை அவன் நேரடியாய் கற்பனை பண்ணாமல் இருப்பான். அது அவனுக்கு சற்று விகாரமானது. தான் ரசித்து நேசிக்கும் பெண்ணை அவ்வாறு ஒரு போர்ன் நடிகையாய் பார்ப்பதை விட ரொமாண்டிக்காய் காணவே அவன் விரும்புவான். ஆனால் சிகரெட்டை மெதுவாய் இழுத்து அவள் ஊதுகையில் அக்காட்சிக்கு பின்னணியில் ப்ளோஜாப் காட்சி அவனது பிரக்ஞை மனத்துக்கு வெகு கீழே நிகழ்கிறது (சிகரெட் குறியாகவும் புகை விந்தாகவும் மாறுகிறது). அதுவே ஒரு பெண் சிகரெட் புகைப்பதை கிளர்ச்சியாய் அவனுக்கு மாற்றுகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கையில் ஒரு மத்திய வயது நண்பர் எனக்கிருந்தார். ரொம்பவும் அப்பிராணி. பெண்களை தலை தூக்கிப் பார்த்து பேச மாட்டார். காபி, சிகரெட் பழக்கம் இல்லை. ஆனால் மாலையில் பிரேக் நேரத்தில் அவர் பேருந்து நிறத்தத்தில் வரும் ஒன்றிரண்டு பெண்கள் சிகரெட் இழுப்பதை காண்பதற்காக செல்வார். நான் ஒருநாள் ரகசியமாய் விசாரிக்கையில் அவர் தனக்கு அக்காட்சி ஏன் ஈர்க்கிறது என்பதற்கு மேற்கண்டவாறு சொன்னார். அவர் வெளிப்படையாய் சொன்னதே என் ஆழ்மனமும் அந்நாள் வரை உணர்ந்திருக்கிறது என்பதை நான் அப்போது புரிந்து கொண்டேன்.

2)   நான் பெங்களூர் வந்த பின் ஆணின் அதே எதிர்நிலை மனப்பான்மையுடன், சமூகத்தின் முகத்தில் காறி உமிழ்கிற தோரணையில் சிகரெட் பிடிக்கும் இளம் பெண்களையும் கண்டேன். இவர்களுக்கு சிகரெட் என்பது அழகையும் ஸ்டைலையும் சுட்டும் ஒரு வஸ்து அல்ல. சிகரெட் இவர்களுக்கு தேநீர் போல. மனத்துக்கு தெம்பளிக்கும் இறுக்கத்தை தளர்த்தும் ஒரு மென்-போதைப் பொருள். இத்தகைய மேற்தட்டு மற்றும் உயர் மேற்தட்டுப் பெண்களின் சிகரெட் பழக்கம் கவர்ச்சியானது மட்டுமல்ல, அது கவர்ச்சியற்றதும், பெண்மை நளினத்தை மறுக்கக் கூடியதும் தான். இவர்களை அங்கீகரிக்கும் பொருட்டே பிக்பாஸ்வீட்டில் பொதுவான புகை பிடிக்கும் அறையொன்றை வைத்திருக்கிறார்கள். பெண்கள் புகை பிடிப்பதை இந்நிகழ்ச்சியில் காட்டுவதில்லை என்றாலும், ஸ்மோக்கிங் ரூமில் இருந்து அவர்களின் பேசும் வம்பு, அரட்டைகளை ஒலிபரப்பி தமிழ் ஊடகங்களில் முதன் முறையாய் பெண்கள் அன்றாடம் சிகரெட் பிடிப்பார்கள், தலைப்பின்னிக் கொண்டும், குழாயில் நீர் பிடிப்பதபடியும் மட்டுமல்ல, சிகரெட் ஊதியபடியும் தான் வம்பு பேசுவார்கள், இதில் விநோதமோ கலாச்சார விரோதமோ ஒன்றுமில்லை என மறைமுகமாய் சுட்டிக் காட்டியது விஜய் டி.வி. இந்த பெண்களை நான் எண்பதுகளின் கலகக்கார ரஜினி பிம்பத்துக்கு அருகில் கொண்டு வைப்பேன்.

சிகரெட் எப்படி ஒரு சுதந்திர, கலக, எதிர்ப்பண்பாட்டு குறியீடானது?
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சிக்ரெட் புகைக்கும் பழக்கம் பரவலானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான். முதல் உலகப்போருடன் இது உச்சம் பெறுகிறது. அப்போது இருந்த சித்திரம் சிகரெட் என்பது ஆண்மையின், ஆண் ஆதிக்கத்தின், துணிச்சலின் குறியீடு. ராணுவ வீர்ர்கள் புகைக்கும் பிம்பமானது அப்போது வலுப்பெற்றது. பெண்களும் புகைத்தார்கள்ஆனால் அவர்கள் மேற்தட்டை சேர்ந்த, ஆணுக்கு இணையாய் தம் சுதந்திரத்தை பேண விரும்பிய சீமாட்டிகள்; 1920-40களில் சிகரெட் நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிகழ்ந்த ஒரு முக்கிய மாற்றத்தை கவனித்தனஉலகப்போரில் ஆண்கள் கணிசமாய் உயிரிழக்க மத்திய வர்க்க பெண்கள் பலர் தனியார் நிறுவனங்களில் அதுவரை ஆண்கள் வகித்து வந்த பணிகளில் அமர்ந்தனர். இது பெண்களுக்கு பொருளாதார ரீதியாக சமத்துவத்தையும் சமூக அதிகாரத்தையும் ஓரளவுக்கு வழங்கியது. பெண்ணிய இயக்கத்துக்கு ஒரு பெரும் ஊக்கியாக இது அமைந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள விழைந்த சிகரெட் நிறுவனங்கள் பெண்களை முன்வைத்து பல விளம்பரங்களை உருவாக்கினர். இவற்றில் சிகரெட் என்பது நவீன, சுயசார்புள்ள, ஸ்டைலான, சமூக இணக்கம் கொண்ட பெண்ணுக்கான குறியீடாகியது. வேலை செய்து சம்பாதிக்கும் ஒரு நவீனப் பெண் ஆணுக்கு இணையாக தன்னை கலாச்சார ரீதியாக முன்வைக்க சிகரெட் புகைப்பது உதவும், பெண் சுதந்திரம் பெற சிகரெட் புகையுங்கள் என இந்த விளம்பரங்கள் குறிப்புணர்த்தின என்கிறார்கள் ஆய்வாளர்கள் ஆமோஸ் மற்றும் ஹேக்லண்ட். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான சிகரெட் விளம்பரங்களில் போரில் இருந்து திரும்பும் கணவனை எதிர்பார்த்திருக்கும் பெண் சிகரெட் விளம்பரங்களில் தோன்றத் துவங்கினாள்; சில விளம்பரங்களில் தேனிலவுக்கு செல்பவர்கள் சிகரெட்களை நிறைய வாங்கி பெட்டியில் கொண்டு செல்வதாய் காட்டினர் என்கிறார் ஆய்வாளர் கிரீவ்ஸ். விலைமாது என்பதில் இருந்து, சமத்துவம் பெற்ற நவீனப் பெண்ணாகி, அதில் இருந்து தற்போது விளம்பரங்களில் சிகரெட் புகைப்பவள் ஆணை கவர்ந்திழுக்கும் இயல்பு கொண்ட அழகியாக தொடர்ந்து இப்பிம்பம் மாறி வந்துள்ளதாய் அவர் கூறுகிறார்.
ஹாலிவுட்டில் மார்லின் பிராண்டோ சிகரெட்டை ஒரு கலக பாவனையாக வலுப்படுத்தினார். ஓவியங்களில் சிகரெட் ஆரம்பத்தில் மரணத்தின் குறியீடாக இருந்து பின்னர் நவீனத்தின், இளமையின், துடிப்பான இயல்பின் குறியீடானது என்கிறார் பெத் கிப்சன். இந்த பரிணாம மாற்றமோ விளம்பர நிறுவனங்களுக்கு சுலபமாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு மார்ல்போரோ சிகரெட்டை எடுத்துக் கொள்வோம். மார்ல்போரோ இங்கிலாந்தை சேர்ந்த ஒரு சிகரெட் உற்பத்தி நிறுவனம். இதன் நிறுவனர் பிலிப் மோரிஸ். 1924 வரை மார்ல்போரோ பெண்களுக்கான சிகரெட்டாக பிரசித்தமாக இருந்தது. பெண்களை ஈர்க்கும் பொருட்டு இது மென்மையான கார வாசனை கொண்டதாக, பில்டர் கொண்டதாக, இந்த பில்டரில் லிப் ஸ்டிக் கறை படியாதிருக்கும் பொருட்டு சிவப்பு பட்டி அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் 1924க்குப் பிறகு சிகரெட் புகைப்பதன் ஆரோக்கிய கேடு குறித்து விழிப்புணர்வு வலுப்பட மார்ல்போரோ விற்பனை சரிந்தது. இனி ஆண்களை குறி வைத்தாலே விற்பனையை ஈடுகட்ட முடியும் என புரிந்து கொண்ட பிலிப் மோரிஸ் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
 பில்டர் வைத்த சிகரெட் உடல்நல தீங்குகளை மட்டுப்படுத்தும் என அப்போது நம்பப்பட்டது. ஆண் வாடிக்கையாளர்கள் பில்டர் சிகரெட்டை வாங்கத் தயார். ஆனால் அவருக்கு இருந்த பிரதான சிக்கல் சிகரெட்டின் பெண்மை பிம்பத்தை எப்படி மாற்றுவது என்பது. இதற்காக அவர் மேற்கில் விளிம்புநிலையில் உள்ள உதிரியான, அலட்சியமான ஆண்களாய் கருதப்படும் கவ்பாய் ஆணின் பிம்பத்தை பயன்படுத்தினார். கப்பற்காரர், ராணுவ செய்தியாளர், பளுதூக்கும் வீரர் போன்ற வலுவான முரட்டு ஆண்களையும் விளம்பரங்களில் அடுத்தடுத்து கொணர நினைத்தார் பிலிப் மோரிஸ். இந்த விளம்பரம் பற்றிக் கொண்டது. விரைவில் உலகில் அதிகம் விற்கப்படும் சிகரெட்டுகளில் நான்காம் இடத்துக்கு மார்ல்போரோ வந்து சேர்ந்தது. மார்ல்போரோவின் வணிக வெற்றிக்கு முக்கிய காரணம் பிலிப் மோரிஸின் முக்கியமான அவதானிப்பு ஒன்றுசிகரெட்டை மக்கள் விரும்பக் காரணம் அது முரட்டுத்தனமான வலுவான ஆணுடலை பிரநுத்துவப்படுத்துகிறது என்பதால் அல்ல, அதில் ஒரு கலகத்தன்மை, பொதுப்போக்குக்கு நேர் எதிரான போக்கு அடையாளப்படுத்தப்படுகிறது என்பதே. இதையே ரஜினிகாந்த் தன்னை அறியாமல் தமிழில் வெற்றிகரமாய் செயல்படுத்தினார். இதையே இன்னும் வேறெவராலும் காப்பிடிக்க முடியாமல் உள்ளதுதன்னை ஹெர்குலிசாக காட்டுவது சுலபம், ஆனால் பொதுப்போக்கில் இருந்து பிறழ்பவனாக காட்டியபடியே, மரபான விழுமியங்கள் படி ஒழுகி வாழும் மக்கள் இதயத்தில் இடம்பெறுவது சுலபமல்ல. ரஜினியால் முடிந்த அது வேறெவராலும் இன்று வரை முடியவில்லை.
நம் சினிமாவில் பெண்கள் புகைப்பவர்களாய் முன்னிலை பெறாததற்கான காரணம் என்ன?
சிகரெட்டை உதட்டில் பொருத்திய பெண் உண்மையில் குட்டைப்பாவாடை பெண்ணை விட கவர்ச்சியானவள். ஆனால் கவர்ச்சி மட்டுமே நாயகி பிம்பம் அல்ல. இன்றும் நாயகி என்பவள் ஒரு காதலியாகவோ மனைவியாகவோ மரபான கட்டமைப்புக்குள் பொருந்தக் கூடியவளாக இருக்க வேண்டும். கலகம் செய்ய அவளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள சுதந்திரம் நாயகனுக்கு உள்ளதை விட மிக மிக குறைவே. இன்று மேற்தட்டில் பெண்கள் புகைப்பது வெளிப்படையாகி விட்ட நிலையிலும் சினிமாவில் அவர்கள் சிகரெட்டை பற்ற வைக்காததற்கு இதுவே காரணம்.

கூடுதல் வாசிப்புக்கு:
Amos, A. and Haglund, M. (2000). From social taboo to torch of freedom: the marketing of cigarettes to women. Tobacco Control93–8.

Greaves, L. (1996Smoke Screen: Women’s Smoking and Social Control. Scarlet Press, London.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...