முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொருளாதாரம் சரிவடையும் போது யார் பலனடைகிறார்கள்?


விலைவாசி உயரும் போது வேலைப்பளுவும் அதிகமாகிறது. அப்போது ஊழியர்களின் உழைப்பு, உற்பத்தி (வேலையின் வெளிப்பாடு, பொருண்மையாகவோ அல்லாமலோ) அதிகமாகிறது. சம்பளமும் அதிகமாகிறது. ஆனால் இந்த சம்பளத்தை வைத்து வசதியாக வாழவோ சேர்த்து வைக்கவோ முடியாது. முன்பு ஏழெட்டு மணிநேரம் வேலை செய்தவர்கள் 12-14 மணிநேரங்கள் உழைக்கிறார்கள். முன்பு 20,000 சம்பாதித்தவர் 40,000 சம்பாதிப்பார். தாம் அதிக வேலை செய்வதற்கு ஈடாக கூடுதல் பணம் கிடைக்கிறதே என நினைப்பார். ஆனால் விலைவாசி அனைத்துக்கும் மூன்று நான்கு மடங்கு அதிகரிக்கும். அவர் செலவு செய்து அதே அளவுக்கே பொருள் வாங்குவார். அவரது சேமிப்பும் அதிக அளவுக்கே இருக்கும். அவருக்கு ஒரே மாயமாக இருக்கும். முன்வாசல் வழியாக புன்னகையுடன் ஒருவர் மூட்டை நிறைய பணத்தைத் தருவார்; உடனே பின்வாசல் வழியாக மற்றொருவர் கோபத்துடன் வந்து அதைப் பறித்துக் கொண்டு போய் விடுவார். இவரும் அவரும் ஒரே போல தோன்றுகிறாரே என அவருக்கு குழப்பமாக இருக்கிறது. என்னதான் நடக்கிறது?


பொருளாதாரம் தடுமாறும் போது, பணவீக்கம் ஏற்படும் போது வேலையிழப்பு, அது குறித்த பதற்றம், நெருக்கடியும் அதிகரிக்கிறது. இவ்வளவு சம்பாதித்தும் பயனில்லையே என அவர் வேலைகுறித்து ஏமாற்றமடைந்து ஆர்வமிழப்பார். இப்போது அவரால் வேலையிடத்தில் சுணக்கம் காட்டவோ புது வேலையைத் தேடவோ முடியாது. வேலையைத் தக்க வைக்க அவர் கூடுதல் நேரங்கள் மாரடித்தே ஆக வேண்டும். உடல்நலமில்லாமல் போகும் போதும் அவரால் விடுப்பெடுக்க முடியாது. எல்லா வித வேலையிட அதிகார துஷ்பிரயோகங்கள், ஒடுக்குமுறைகளையும் அவர் தாங்கிக் கொள்ள வேண்டும்.

பொருளாதாரம் சீரழியும் போது அரச வன்முறை, கொடுங்கோன்மை, பாசிசம் ஆகியவையும் அதிகரிக்கின்றன. வேலையிடத்தில் அடிமையாக இருக்கிறோமே வெளியிலாவது சற்று உண்மையாக இருக்கலாமே என ஒருவர் நினைத்தால் அது சற்றும் சாத்தியப்படாது. அவரது ஒவ்வொரு சிறு அசைவும் கண்காணிக்கப்படும். அவர் குற்றம் செய்யுமுன்னே அரச அதிகாரம் அவனைத் தண்டிக்கும். சமீபத்தில் இந்திய-சீன தலைமைகள் தமிழகத்தில் சுற்றுலா சந்திப்பு நடத்திய போது சீனாவுக்கு எதிராக திபெத்திய மாணவர்கள் சென்னையில் போராட்டம் நடத்தக் கூடும் என ஐயப்பட்ட உளவுத்துறை சீன பிரதமர் வரும் முன்பே என் திபெத்திய நண்பர் ஒருவரை கைது செய்தது. அவர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டதாகக் கூட ஆதாரம் இல்லை. திபெத்திய கலகக்கரார்களின் தலைவர் அவர் என ஒரு குருட்டுத்தனமான குற்றச்சாட்டை வைத்து அவரையும் வேறு சில மாணவர்களையும் காவல்துறை புழல் சிறையில் தள்ளியது. அத்துடன் அவர் வேலை செய்த கல்லூரிக்கு செய்தி அனுப்பி அவரை வேலையில் இருந்து நீக்கவும் வழிவகை செய்தது. மற்றொரு நண்பர் முன்பு முதுகலை மாணவராக இருக்கையில் பல மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். அவர் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்த நிலையில் அவர் போராட்டங்கள் நடத்தக் கூடும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் தூக்கப்பட்டார். இப்போதெல்லாம் நீங்கள் அரசரைப் பற்றி, அவரது சர்வாதிகார செயல்களைப் பற்றி அரை வினாடி யோசிக்கும் போதே வாயில் மணி அடிக்கும்; தூக்கி புழலில் போட்டு விடுவார்கள். எப்படி வேலையிடத்தில் நிர்வாகத்தை கேள்வியின்றி பின்பற்றுகிறோமோ அப்படியே சமூகத்தில் அரசரையும் அடிபணிந்தாக வேண்டும்.

 பொருளாதார வீழ்ச்சி பற்றி யோசிக்கும் போது ஊடகங்கள் முன்வைப்பது என்ன? பெருமுதலாளிகளின் நெருக்கடி, பல நூறு கோடிகள் நஷ்டமாவது பற்றி, தொழில் நிறுவனங்களின் நசிவு பற்றி கண்ணீர் சிந்துகின்றன ஊடகங்கள். காபி டே நிறுவனர் தற்கொலை செய்ததை வைத்து ஒப்பாரி வைக்கிறது. ஆனால் பெருமுதலாளிகளுக்கு இதில் லாபம் அதிகம். கூடுதல் வேலை நேரம், கேள்வியற்ற அடிபணிவு, அதிக உற்பத்தி, குறைவான சம்பளம், சம்பளத்தைக் கூடுதலாகக் கேட்டு கிடைக்காத நிலையில் புது வேலையை நாடும் துணிச்சலின்மை என முதலாளித்துவத்துக்கு சாதகமான சூழல் அமைகிறது. பொருளாதாரம் நசிந்து விட்டது எனக் காட்டி ஆட்குறைப்பை செய்யவும், மேலும் ஆட்குறைப்பு செய்ய நேரும் என மிரட்டி, கார்ப்பரேட் வரியை குறைக்க அரசை நிர்பந்திக்கவும் முடியும். சிறுவியாபாரிகளும் சிறுமனிதர்களும் தாம் தவிக்கிறார்கள்; பணம் எங்கே போகிறது எனப் புரியாமல் குழம்புகிறார்கள்

அரசுக்கும் இந்த சூழல் பயனளிக்கிறது. பொருளாதார நெருக்கடியின் வெக்கையை அவர்களால் திசை திருப்பி விட முடிகிறது. மற்றமைகளை உண்டுபண்ணி அவர்களைத் தாக்கி மக்களுக்கு செயற்கையான திருப்தியை, நம்பிக்கையை, அதிகாரத்தைத் தர முடிகிறது. அதாவது ஆட்சியை முழுக்க ஒரு ஆக்‌ஷன் சினிமாவாக மாற்றி நாட்களை கடத்தவும் நல்ல பெயர் வாங்கவும் முடிகிறது. எந்த பிரச்சனையையும் தீர்ப்பதற்காக மண்டையை போட்டு உடைக்கவோ, தீர்வுகளை வகுக்கவோ தேவையில்லை. அரசியல் எதிரிகளே இருக்க மாட்டார்கள். .தா., இந்திய பொருளாதாரம் மிக மிக மோசமான நிலைமையில் இருக்கும் போது தான் இந்திய பிரதமர் மக்களின் நாயகனாகவும் கொண்டாடப்படுகிறார். வில்லனே இல்லாத சினிமாவின் நாயகன் அவர். வில்லன்கள் அவரது காலடியில் பணிந்து அவர் காலடி மண்ணைத் தொட்டு வணங்குகிறார்கள்.


மனிதன் ஒரு விசித்திரமான மிருகம். அவன் கடுமையான நெருக்கடியில், எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருக்கும் போது முழுக்க பணிந்து, அமைதியாகி விடுகிறான். ஒரு மிருகம் கூட பயத்தில் அதிக வன்முறை கொண்டதாகும்; அதை நெருங்க அஞ்சுவார்கள். ஆனால் மனிதனுக்கு வெறுப்பை, கோபத்தை நேரடியாகக் காட்டத் தெரியாது. அவனது வன்மத்தை மடைமாற்றி விடுகிறவனை அவன் தலைவனாக ஏற்று காலில் பணிவான். அவர் காட்டுகிற திசையில் மொத்த கொலைவெறியையும் பிரயோகிப்பான். இரண்டாம் உலகப்போரின் தறுவாயில் ஜெர்மனியிலும் இப்போதும் ஒவ்வொருமுறை உலகம் முழுக்க பொருளாதாரம் சரியும் போது வலதுசாரிகள் எழுச்சி பெறுவது இப்படித் தான்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...