இலக்கிய கூட்டத்திற்கான வருகையாளர் எண்ணிக்கை குறித்த என் மதிப்பீடு தலைகீழானது. மிகக்குறைவான ஆட்கள் என்றால் அது செறிவான தீவிரமான விவாதம். ஐம்பது பேர் என்றால் அது வகுப்பறை. நூறு என்றால் அது சராசரி இலக்கிய கூட்டம். எண்ணிக்கை அதையும் தாண்டினால் ஜாலி கூட்டம். "ஜல்லிக்கட்டு" படம் போல ஆகி விடும்.
என்னைப் பொறுத்த வரையில் ஆகச்சிறந்த நூல் வெளியீட்டுகள் என் பதின் வயதில் தக்கலையில் கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் நடந்தன. எட்டு பேருக்கு மிக மாட்டார்கள். அருமையான உரையாடல்கள். ஒவ்வொருவரும் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிப் போவார்கள்.
இலக்கிய நூல்கள் மிகச்சிறிய குழுக்களுக்கு அறிமுகமாகி அங்கிருந்து பின்னர் சற்றே பெரிய குழுக்களுக்கு சற்றே எளிமைப்படுத்தப்பட்ட அறிமுகங்களுடன் போக வேண்டும். அதற்கு மிகச் சிறிய கூட்டங்களே பொருந்தும்.
Comments