முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுஷாந்த் சிங் வழக்கில் நடக்கும் அரசியல் - பாஜகவும் சிவசேனாவும்




முன்பு ஒரு வழக்கு விசாரணையில் பெரிய தலைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால் போலீசாரால் குறித்த தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும், அதன் பின் ஒரு அப்பாவியை விசாரித்து துன்புறுத்தி ஆதாரம் இல்லாமல் வழக்கைப் புனைந்து அது நீதிமன்றத்தில் தூசுபடியும் போது நாமெல்லாம் அதை மறந்திருப்போம். ஆனால் இப்போதோ போலிசார் மிகுதியான சம்மந்தமில்லாத தகவல்களை பரப்பி நம்மை குழப்புகிறார்கள். அதோடு சமூகவலைதளப் போராளிகள், சினிமா, அரசியல் நட்சத்திரங்களும் இணைந்து வழக்கை குழப்பி நம்மை கண்ணைக் கட்டி எங்கெங்கோ அழைத்துப் போவார்கள். சுஷாந்த் வழக்கில் கங்கனா ரனவத் போன்றோர் பாலிவுட்டில் நெப்போட்டிசம், அது இதுவென சொல்லி திசை திருப்பினார்கள். தம்முடைய கோபங்களை யார் யார் மீதோ தீர்த்துக் கொண்டார்கள். சுஷாந்தின் இறுதிக் காலத்தில் அவர் நடிக்கவிருந்த சில படங்கள் ரத்தானதும், அவரது கடைசியாக வந்த படங்கள் சரியாகப் போகாததும் உண்மையே. ஆனால் அதெல்லாம் தற்கொலைக்குக் காரணமென்றால் இங்கு பல நடிகர்கள் தொங்க வேண்டியதுதான். தோல்விகளும் வெற்றிகளும் மாறி மாறி வருவது சகஜம் தானே? அதை விடுங்கள் பாலிவுட்டிலே கூட ஒரு வெற்றி கூட கொடுக்காத ஹீரோ நடிகர்கள் உண்டு தானே


அடுத்து, காதலி ரியாவுடன் அவர் பிரிய நேர்ந்தது ஒரு காரணம் என்றார்கள். இதை ஒட்டி ரியா சமூகவலைதளங்களில் தாக்கப்பட்டார். மகேஷ் பட்டுக்கும் ரியாவுக்கும் கள்ள உறவு இருந்ததாகவும், அவரே ரியாவை சுஷாந்திடம் இருந்து பிடித்ததாக, பின்னிருந்து தற்கொலையை இயக்கியதாக கதை எழுதினார்கள்


இந்த அடிதடிகள் நடுவே நம்பத்தகுந்ததாக அமைந்த குற்றச்சாட்டுகள் சல்மான் கான் மற்றும் அவரது அடிபொடியான நடிகர் சூரஜ் பாஞ்சோலி மீதானவை. சல்மான் ஏற்கனவே 2013இல் சி.பி.ஐயிடம் பேசி பாஞ்சோலியை  ஜியா கான் எனும் நடிகையின் தற்கொலை வழக்கில் இருந்து காப்பாற்றிக் கொடுத்ததாக, அவருக்கு சுஷாந்த் மீது பாஞ்சோலி விஷயத்தில் இருத மனஸ்தாபத்தை, கோபத்தைப் பற்றி, மேலும் சல்மானுக்கு மாபியா, பாலிவுட் திரையுலகம் ஆகியற்றில் உள்ள பெரும் செல்வாக்கைப் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் இதுவும் ஒரு நம்பகக் கூடிய காரணமாக இல்லை. சல்மான் நினைத்தால் சுஷாந்தின் சினிமா வாய்ப்புகளை இல்லாமலாக்க முடியும் என்றால் அது போதுமே, கொல்லும் அளவுக்கு இது ஒன்றும் பெரிய விரோதம் இல்லையே?


இந்த சமயத்தில், சுஷாந்தின் முன்னாள் மேலாளரான தியா சாலின் ஜூன் 9 அன்று (சுஷாந்தின் மரணத்துக்கு 5 நாட்கள் முன்பு) தன் வீட்டின் 14வது மாடியில் இருந்து குதித்து / தள்ளப்பட்டு இறந்த வழக்கு சுஷாந்தின் மரணத்துடன் முடிச்சிடப்பட்டு செய்திகள் வந்தன. முதலில் பாஞ்சோலிக்கு தியாவுடன் பாலியல் உறவு இருந்ததாகவும், அதை மறைக்கும் பொருட்டு சுஷாந்த் வற்புறுத்தி தியா கேட்காததால் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது (தியாவுக்கு ஏற்கனவே வேறு ஒரு காதலர் / லிவ் இன் பார்ட்னர் உண்டு). இந்த தற்கொலை வழக்கு மீண்டும் சல்மான் கான் - பாஞ்சோலி என ஒரு சுற்று வந்தது. இப்போது ஓரளவுக்கு நம்பகத் தன்மை கிடைத்தது.


ஆனால் அண்மையில் சுப்பிரமணியம் ஸ்வாமி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவே இந்த வழக்கில் முக்கிய புள்ளி என குற்றம் சாட்டி வருகின்றனர். தியா மரணமடைந்த அன்று அவர் வீட்டில் ஒரு பார்ட்டி நடந்திருக்கிறது. அதில் கலந்து கொண்ட முக்கிய புள்ளிகளில் ஆதித்ய தாக்கரேவும் ஒருவர் என்றும், அன்று நடந்த எக்குத்தப்பான ஒன்று தான் தியா தற்கொலை / கொலைக்கு காரணம் எனச் சொல்கிறார்கள். வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ் தாக்கரே குடும்பத்தின் விருப்பத்தின் படி உண்மையை மறைப்பதாய், இவ்வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோருகிறார்கள். உச்சநீதி மன்றமும் அவ்வாறே ஆணையிட்டுள்ளது. இப்போது தாக்கரேக்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்.


 ஆதித்ய தாக்கரேவா? ஒரு அமைச்சர் ஏன் ஒரு சிறிய வீட்டுப்பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும்? அவருக்கும் இது போன்ற பார்ட்டிகளுக்கும் என்ன தொடர்பு? எது எப்படியோ, போலிசார் தொடர்ந்து இவ்வளவு மெத்தனமாக இந்த வழக்கை நடத்துவதற்கான காரணம் ஏதோ அரசியல் பெருந்தலை இதில் சம்மந்தப்பட்டிருப்பதனால் தான் எனும் எண்ணம் எனக்கும் இருந்தது. அதோடு மகாராஷ்டிர சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து சுஷாந்த் தற்கொலை பண்ணினார்கள் என வலியுறுத்த் வந்ததும்எங்கப்பாகுதிருக்குள்ள இல்லஎன்கிற மாதிரி இருந்ததுஅந்த பின்னணி இப்போது பட்டவர்த்தமாகி விட்டது.  


எனக்கு சுவாரஸ்யமாகப் படுவது இந்த வழக்கில் பாஜக பின்னிருந்து சதிராடுவதே. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் (பவாரின்) தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா ஆண்டு வருகிறது. ஆரம்பத்தில் பாஜகவுடன் ஏற்பட இருந்த கூட்டணி பாஜக அதிகாரப் பகிர்வு விசயத்தில் முரண்டு பிடித்ததால் உடைந்தது. தாம் கூட்டணி அமைத்து ஆள வேண்டிய மாநிலத்தை காங்கிரஸ் கோழியை போல அமுக்கிக் கொண்டு போனது பாஜகவின் ஈகோவை காயப்படுத்தி விட்டது. எப்படி இந்த கூட்டணியைக் கலைப்பது என முயன்று வந்தார்கள் - நடுநடுவே இரு கட்சிகளுக்கு இடையிலும் தொடர்ந்து பரஸ்பரம் சீறுவது, பல்லைக்காட்டி உறுமுவது, பதுங்குவது என நடந்து வந்தது. இப்போது இந்த வழக்கு, அதில் முதல்வரின் மகனே சம்மந்தப்பட்டிருப்பது, ஒரு தங்க முட்டையிடும் வாத்தாக சங்கிகளிடம் மாட்டி உள்ளது. சி.பி. விசாரணை துவங்கியதும் ஒவ்வொரு முட்டையாக அது போட ஆரம்பித்து விடும். அடுத்து சில மாதங்களில் என்ன நடக்கும்?

ஒன்று, ஆதித்ய தாக்கரேவுக்கு எதிராக சாட்சியங்களை திரட்டி பின்னர் உத்தவ் தாக்கரேவுடன் சமரசப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்கள். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுப்பார்கள். முடிவில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும், துணை-முதல்வர் பதவியைக் கூட பெறுவார்கள்.  

இரண்டாவதாக, இந்த வழக்கில் சாட்சியங்கள், ஆதாரங்கள் முழுக்க கலைக்கப்பட்டு சி.பி.ஐயால் கிடுக்கிப் பிடி போட முடியாதாகும்.


எப்படிப் பார்த்தாலும் இந்த வழக்கின் முடிவு குற்றம் செய்தவர், சிவசேனாவை விட காங்கிரசுக்கே பாதகமாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...