முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அல்லிக்கேணி



அண்மையில் வாசித்ததில் ஒரு மறக்க முடியாத அனுபவம் ராம்ஜியின் “அல்லிக்கேணி”. அவர் இதை பேஸ்புக்கில் எழுதும் போது துண்டுத்துண்டாக வாசித்த போது என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் நூலாக வாசிக்கையில் இவரை இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே எனத் தோன்றியது. இந்த நூலில் அப்படி என்ன பிடித்திருக்கிறது?

1) நகைச்சுவை - தனியாக படிக்கையில் பல இடங்களில் சத்தம் போட்டு சிரித்தேன், கூட்டத்தின் நடுவே இருக்கையில் மௌனமாக புன்னகைத்தேன். தமிழில் நகைச்சுவை எழுத்து என ஒரு வகைமை உண்டெனில் நிச்சயமாக ராம்ஜியின் எழுத்து மேல்தளத்தில் இருக்கும். அவர் தன்னை, தன் நண்பர்களை, தோழிகளை, அம்மாவை, அப்பாவை, பிடித்தவர்களை, பிடிக்காதவர்களை என விதிவிலக்கில்லாமல் பகடி பண்ணுகிறார். ஆனால் இவர்களை அவர் தட்டையான கோட்டோவியமாக்குவதில்லை. குள்ளமாக இருந்து தாவித் தாவிட அடிக்கிற அவரது அம்மாவின் பாத்திரம் வேறு சில இடங்களில் அழுத்தமான, முதிர்ச்சியானவராகத் தெரிகிறார். அழகான, கவர்ச்சியான, புத்திசாலித்தனமான தோழியரையும் அபத்தமானவர்களாக காட்டத் தவறுவதில்லை. அவர் யாரையெல்லாம் மகத்தானவர்களாக காட்டுகிறாரோ அவர்களுடைய ஏதாவது ஒரு கோணலையும் காட்டி விடுகிறார். 


2) எழுத்தாளுமை - சிலருக்கு வசீகரமான ஆளுமை இருக்கும், அது எழுத்தில் தெரியாது. சிலருக்கு எழுத்தில் மட்டுமே வெளிப்படும் ஒரு தனி ஆளுமை இருக்கும். ராம்ஜி அப்படியானவர். இந்த நூல் நெடுக கதைசொல்லியின் அப்படியான ஒரு தனித்த இயல்பு துலங்குகிறது. அந்த குரலைக் கேட்கவே நூலை விடாமல் படிக்கிறோம். அதனாலே ரௌடிகள், தாதாக்கள், விசித்திரமான வழக்கறிஞர் என சுவாரஸ்யமாக சில அத்தியாயங்கள் செல்லும் போதும் நமக்கு அலுப்பேற்படுகிறது; ஆனால் ராம்ஜியும் அவரது நண்பர்கள், தோழியர் திரும்பும் போது எழுத்து மீண்டும் சூடு பிடிக்கிறது.  


3) பெண் பாத்திரங்கள். பெண்களை அவ்வளவு அணுக்கமாக இருந்து பார்த்து புரிந்து கொண்டவரைப் போல சில பாத்திரங்களை வடித்துள்ளார். ஒரே சமயம் அன்பும் புரிதலும் குரூரமும் குழப்பங்களும் மிக்கவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். Male gaze என்று சொல்வார்களே அந்த ஆண் நோக்கு, அது இல்லாமல் இப்பெண்கள் உயிரோட்டமாக இருக்கிறார்கள். 


ராம்ஜியின் எழுத்தில் உள்ள பலவீனம் அசோகமித்திரன், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் சாயல். இதைக் கைவிட்டாரெனில் அவரால் சொந்த ஸ்டைலுடன் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளராக வர முடியும் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...