முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (1)



50 பில்லியன் வளர்ச்சியுடன் இந்த ஆண்டு அதானி உலகப் பணக்காரர்களில் முதலிடத்தை எட்டி விட்டார். இத்தனைக்கும் அவர் இரு பத்தாண்டுகளில் மட்டும் அடைந்துள்ள பிரமாண்ட வளர்ச்சி இது. கௌதம் அதானி பரம்பரைப் பணக்காரர் அல்ல. அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. குஜராத்தில் வைரம் வெட்டும் தொழிலில் சிறிது காலம் வேலை பார்த்து விட்டு, தன் சகோதரர் நடத்திய சிறிய பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இணைந்து கொண்டார். அதன் பிறகு அங்கே இங்கே பிடித்து அரசியல் தொடர்புகளை உருவாக்கி, சிறிய ஒப்பந்தப் பணிகளை வாங்கி, அதற்கு முதலீடாக வங்கி நிர்வாகங்களை கையில் போட்டு நிறைய கடன் வாங்கி கடன் வாங்கி ராவோடு ராவாகதொழிலதிபர்’ ஆனார். ஆனால் அவருடைய வணிகம் ஏறுமுகம் காணத் தொடங்கியது குஜராத்தில் மோடி முதல்வர் ஆன போது தான். ஜியின் முழுமையான நம்பிக்கைக்குரிய பினாமியாக அவர் ஆன பிறகு ஒரு முக்கிய சம்பவம் நடக்கிறது - 2002இல் குஜராத் கலவரங்களில் ஆயிரத்துக்கு மேலானோர் கொல்லப்படுகிறார்கள். கலவரங்கள் அப்போதைய முதல்வரான ஜியின் அனுமதியுடன் தேர்தல் வெற்றிக்காக நடத்தப்பட்டவை, இவற்றில் கணிசமான இஸ்லாமியர் கொல்லப்பட்டனர் என்பதை பல முற்போக்கு அமைப்புகளும் அம்பலப்படுத்தினர். விளைவாக, உலகம் முழுக்க மோடிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. உள்ளூரிலும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார், வணிக கூட்டமைப்புகள் அவருக்கு எதிராக பேசின, ஜி தனிமைப்படுத்தப்பட்டார். ஜிக்கு அப்போதே பிரதமர் ஆகும் ஆசையும் தெளிவான திட்டமும் இருந்தபடியால் இந்த களங்கம் அவருக்கு பெரிய தலைவலியாகியது. அப்போது அதானி வெளிப்படையாக ஜியை ஆதரித்து பேசியதுடன், பாஜக ஆதரவு வணிக கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கி காட்டினார். “குஜராத் ஒளிர்கிறது” பிரச்சாரத்துக்கும் பெரும்பளவு முதலீடு செய்தார். இக்கட்டத்தில் வெளிப்படையான அரசு ஆதரவுடன் துறைமுக ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுவங்கிகளில் கணிசமான கடன்களையும் வாங்கி (அதை அவர் இன்னும் திரும்ப செலுத்தவில்லை) அவர் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தம் சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பினார். அவர் எதிர்பார்த்தது போன்றே ஜி 2014இல் பிரதமர் ஆனார். அத்துடன் அதானி கட்டற்ற, வேறு யாரும் கனவு காண முடியாது 230% வளர்ச்சியை அடுத்தடுத்த ஆண்டுகளில் அடைகிறார். இயற்கை எரிவாயு, துறைமுக கட்டமைப்பு, நிலக்கரி சுரங்கங்கள், ராணுவ தளவாடங்கள் என அவரது தொழில் வளர்ச்சி தன் அடிப்படையான வலிமையை (ஒப்பந்த திட்டங்கள்) கை விடாமலே இன்று உலகம் முழுக்க பரவி உள்ளதுஇந்த ஆண்டில் மட்டுமே 50 பில்லியன் வளர்ச்சியை அதானியின் நிறுவனம் அடைந்துள்ளது. Adani Groupஇன் வளர்ச்சியானது பாஜகவை இன்று உலகின் மிகப்பெரிய பணக்கார கட்சியாக மாற்றியுள்ளது என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில் தான்மொத்த நாடும் பொருளாதார சோர்வில் இருக்கையில் அதானிக்கு மட்டும் எப்படி பணம் கிடைக்கிறது, அவர் மட்டும் எப்படி கொழுக்கிறார்?” என ராகுல் காந்தி அண்மையில் கேள்வி எழுப்பினார். இது ஒரு தொழிலதிபரை கேள்விக்குட்படுத்த அல்ல - அவரது வளர்ச்சி தர்க்கபூர்வமாக இல்லை, இதில் எதுவோ உதைக்கிறது எனக் காட்டத்தான். இது நாட்டின் ஜனநாயக மாண்பை, சுதந்திர வாழ்வை குழி தோண்டி புதைக்கும் ஒரு போக்கு என சுட்டுவதற்கு தான் (அது எப்படி என்பதற்கு பின்பு வருகிறேன்).

 அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராக்பெல்லர் அரசாங்கத்தை கைப்பாவையாக ஆட்டுகிற ஒரு வலிமை மிக்க கார்ப்பரேட் முதலாளியாக இருந்தார். இப்போது அயல்நாட்டு சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் அதானியைமோடியின் ராக்பெல்லர்என்கிறார்கள். பூஜ்யத்தில் இருந்து எப்படி இருபதே ஆண்டுகளில் அதானி எலோன் மாஸ்கை விஞ்சும் உலகப்பணக்காரர் ஆனார்? அரசுப் பணம் (வங்கிக் கடன்கள்), அரசின் வளங்கள், அரசின் கட்டமைப்பு பணிகள், அரசு ஆதரவுடன் சர்வதேச முதலீடுகளைப் பெறுவது என அனைத்து ஆயுதங்களுடனும் அவர் இந்த வளர்ச்சியை அடைந்தார். இவ்வருட துவக்கத்தில் பிரான்ஸின் மிகப்பெரிய கார்ப்பரேட்டான Total SA 2.5 பில்லியன் டாலர்களை அதானியின் நிறுவனத்தில் முதலீடு செய்தது. எந்த நம்பிக்கையில்? அரசு இந்நாட்டின் மொத்த எரிசக்தி வளத்தை சுரண்டி வியாபாரம் செய்யும் உரிமையை அதானிக்கு மட்டுமே அளிக்கும் என அறிந்தே, அதானியிடம் பணம் கொடுப்பது அரசிடம் கொடுப்பதற்கு இணை எனத் தெரிந்தே இம்முதலீடுகள் அதானியின் உண்டியலில் நிறைகின்றன. 2019இல் சாகர் அதானி தம் நிறுவனத்துக்கு 12 வெளிநாட்டு வங்கிகளின் முதலீடு வரப் போகிறது எனும் சேதியை ஒட்டி இப்படி ஒரு பேட்டியில் சொல்லுகிறார்: “முதலில் இந்திய வங்கிகளிடம் இருந்து முதலீட்டைப் பெற்று உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வோம். அடுத்த கட்ட செலவுகளுக்கு நாங்கள் வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து முதலீட்டை பெறுவோம்.” ஆக, எதுவுமே இவர்களுடைய சொந்த முதலீடு அல்ல. 2019 நவம்பர் வரையிலான கணக்குப்படி 30 பில்லியன் கடன் தொகையை அதானியின் நிறுவனங்கள் வைத்துள்ளன. இவற்றில் கணிசமானவை இந்திய வங்கிகளின் பணம் என்றால் பாஜகவின் ஆத்ம நிர்பார் திட்டம் எப்படி செயல்படுகிறது என யோசியுங்கள். முன்பு நீரவ் மோடி பயன்படுத்திய அதே தந்திரத்தை தான் கௌதம் அதானி அம்பானி அதை விட வெற்றிகரமாக பயன்படுத்துகிறார். அதாவது கையில் இருந்து சல்லிக்காசு செலவு பண்ணாமல், முதலீட்டை தாமாக சட்டைப் பையில் இருந்து எடுக்காமல், வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை வாங்கி பெரும் நிறுவனங்களைத் தொடங்கி வளர்வது. சரி, ஏன் இந்திய, வெளிநாட்டு வங்கிகள் பணத்தைக் கொண்டு வந்து அதானிக்கு கொட்டுகின்றன?

 இந்திய வங்கிகளைப் பொறுத்தமட்டில் அரசின் அழுத்தம் காரணம். வெளிநாட்டு வங்கிகளைப் பொறுத்தமட்டில் எந்த போட்டியும் தடையும் இன்றி, அதானி எனும் ஆளும் அரசின் கரத்தைக் கொண்டு இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது, லாபமும் உறுதியானது எனும் நம்பிக்கை. 2015இல் Credit Suisse எனும் சர்வதேச நிறுவனம் ஒன்று மிகப்பெரிய கடன் சுமையில் தத்தளிக்கிற நிறுவனங்களில் ஒன்றாக அதானியின் நிறுவனத்தை அறிவித்தது. ஆனால் அவர் மேலும் மேலும் கடன் வாங்கி தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவடைய செய்வதற்கு எந்த தடையும் இதனால் ஏற்படவில்லை. இதுவே நீரவ் மோடிக்கும் அதானிக்குமான முக்கிய வித்தியாசம் - நீரவ் தனிமனிதர், ஆனால் அதானியோ மோடியின் ராக்பெல்லர். அதாவது ஜியின் பினாமி முதலீட்டாளர்.


அண்மையில் கிரேட்டா தன்பெர்க் போராடும் விவாசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் போட்ட போது பாஜக அரசு கொதித்து கிளர்ந்தெழுந்தது. ஏன் ஒரு டிவீட்டுக்குப் போய் இப்படி பதற்றப்பட வேண்டும் என பலரும் குழம்பினார்கள். ஆனால் பாஜகவுக்கும் கிரேட்டாவுக்குமான பஞ்சாயத்து பழையது - அதானி ஆஸ்திரேலியாவில் Carmichael நிலக்கரி சுரங்க புரோஜெக்ட் ஒன்றில் 16 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் செய்து பணமீட்ட முயன்ற போது, அங்கு அதற்கு எதிராக சூழலியலாளர்கள் ஒரு பெரிய போராட்டத்தை, பரப்புரையை முன்னெடுத்தார்கள். இதற்கு பெரும் சர்வதேச சமூக கவனத்தை பெற்றுத் தந்தது கிரேட்டா அப்போது StopAdani எனும் ஹேஷ்டேக்குடன் இட்ட டிவீட் தான். அப்போது கடுப்பான அதானி இப்போது விவசாய நிலங்களை ஆட்டையப் போடலாம், விளைபொருட்களை கொள்ளையடித்து பெரும் லாபத்தை ஈட்டலாம் என கனவு காணும் போது மீண்டும் அதே கிரேட்டா வந்து விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்ய பீதியாகி விட்டார் என நினைக்கிறேன். அதனாலே பாஜக அரசு தனது சினிமா, விளையாட்டு செலிபிரிட்டிகள் மூலம் கண்டனத்தை தெரிவித்து, கிரேட்டாவுடன் தொடர்பில் இருக்கும் இந்திய போராளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. ஏனென்றால் கிரேட்டா எதிர்த்தது அதானியை அல்ல, பாஜகவின் சர்வதேச, உள்ளூர் முதலீடுகளையே. இன்னும் சொல்லப் போனால் அப்போதும் இப்போதும் கிரேட்டா எதிர்த்தது ஜியின் அயல்நாட்டு, உள்நாட்டு முதலீடுகளையே. அதானி மீது கை வைப்பது ஜியின் 56 அங்குல மார்பை நோக்கி சேற்றை வீசுவதற்கு சமம். அது அவருடைய, பாஜகவின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குவதற்கு சமம்.  



 அதானி அளவுக்கு இல்லையென்றாலும், முகேஷ் அம்பானியும் ஒரு பாஜக பினாமி தான். இன்னொரு பக்கம், ஒரு மத்திய வர்க்க பின்னணியில் இருந்து (ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நெருக்கமான குடும்பத்திலிருந்து) தோன்றி முழுக்க முழுக்க பினாமி பணத்தைக் கொண்டு பிரமாண்ட வளர்ச்சியை கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் அடைந்துள்ள விஜய் ஷேகர் சர்மா (Paytm நிறுவனர்) மற்றொரு சிறிய அளவிலான பினாமி. இந்த தொழில் வளர்ச்சியானது நல்லது தானே, அது சமூகத்திற்கு பயனளிக்கக் கூடியது தானே என நீங்கள் கேட்டால் அது தான் இல்லை. அரசு ஆதரவுடன், அரசின் பணத்துடன், அரசுக்காக பினாமியாக செயல்படும் கார்ப்பரேட்டுகள் தாராளமய சந்தைக்கு விரோதமாக செயல்பட்டு ஒரு முழுநிறை அதிகார அமைப்பாக, monopolyஆக செயல்படுகின்றன. இது குறித்த கசப்புகள் பிற தொழிலதிபர்களுக்கு உண்டெனினும் அதை வெளியே சொல்வதற்கான துணிச்சல் தான் இல்லை. இத்தகைய சூழல் பொருளாதார சந்தையை விட நமது ஜனநாயக அமைப்பை, தனிமனித உரிமைகளை, கருத்துரிமைகளை நாசமாக்குகிறது என்பதே மிகப்பெரிய பிரச்சனை.

 யோசித்துப் பார்த்தால், crony capitalism என இப்போக்கை நாம் விமர்சித்தாலும், உண்மையில் நமது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக அதானி விசயத்தில் தான் ஒரு அரசே ஒரு பினாமியை பயன்படுத்தி முழுமையான கார்ப்பரேட்டாக செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஏனென்றால், இதன் பொருள் அதானியின் இந்த வளர்ச்சியானது மக்களின் அத்தனை செல்வங்கள், வளங்களையும் பயன்படுத்தி பாஜக மறைமுகமாக இன்று உலகின் மிகப்பெரிய பணக்கார கட்சியாக வளர்ந்துள்ளது என்பதே. இதற்கு முன்பு ஒரு கட்சி பல்வேறு ஊழல்கள் மூலம் தனக்கான சொத்தை பெருக்கிக் கொள்ளும். அச்சொத்தானது கட்சியின் தலைமையிடம் அதிகமாகவும், பல்வேறு மாநிலங்களில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்களிடம் சிறுபகுதிகளாகவும் இருக்கும். தேர்தல் சமயத்தில் இந்த பணத்தை மொத்தமாக திரட்டி பிரச்சாரத்துக்கும், கையூட்டுக்கும், பேரம் பேசுவதற்கும் பயன்படுத்துவார்கள். இது நமது முந்தைய பேரரசுகள் பயன்படுத்திய முறை - அரசுக்கு என பிரம்மாண்டமான படையை வைத்திராமல் குறுநில மன்னர்களிடம் அதை சிறு பகுதிகளாக வைத்து நிர்மாணிக்க அனுமதித்து, போர் வரும் போது மட்டும் சிறு படைகளை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு சண்டை போடுவது. இந்த நிலையே பின்னர் சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சிக்கு, குறிப்பாக வெள்ளையர்களின் படை நவீன ஆயுதங்களுடன் வந்த போது, காரணமாகியது. இதுவே 2012-14 காலத்தில் காங்கிரஸும் தனது முதலீடுகள், படைகள் கைவிட்டுப் போவதை, பாஜகவின் படை முன்பு அனைத்து முதலீட்டாளர்களும் சரணடைவதைக் கண்டது. ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக காங்கிரஸின் தோல்விக்கு காரணமான பழைய செல்வம் குவிக்கும் பாணியை மாற்றி புதிய ஒரு பாணியை கொண்டு வந்தது. நேரடி பினாமிகளைக் கொண்டு தொழில்களை தாமே நடத்தி சொத்துக்களை, முதலீட்டை தம் கையில் வைத்துக் கொள்வதே கட்சியின் வளர்ச்சிக்கு சாதகமானது, நாட்டின் மொத்த தொழில் உற்பத்தியையும் தம் கைகளில் கொண்டு வந்து விட்டால் பின்னர் தேர்தல் பிரச்சாரத்துக்கும், கட்சிப்பணிகளுக்கும் செலவு செய்ய தமக்கிணையாக மற்றொரு கட்சி இருக்க முடியாது, எல்லாம் தம் வசம் இருக்கும் போது பணமில்லாமல் மற்ற கட்சிகள் (காங்கிரஸ் அல்லாத மாநில எதிர்க்கட்சிகள்) ஒன்று தம்மிடம் சரணடையும் அல்லது மெல்ல மெல்ல வயிறு வாடி சாகும் (காங்கிரஸே தான்) என பாஜக ஒரு புதிய செயல்திட்டத்தை வகுத்தது. இதுவே அவர்களின்காங்கிரஸ் முக்த் பாரத்திட்டம். இது வெறுமனே இந்தியா முழுக்க இந்துத்துவவசப்படுத்தும் திட்டமல்ல. அதை அத்தனை சுலபமாக செய்ய முடியாது என அவர்கள் அறிவார்கள். இது தேசத்தின் மொத்த பணத்தின், அரசு, அரசு சாரா அமைப்புகளின் உள்கட்டமைப்பு வசதிகளின் மொத்த ஆதாரத்தையும் தம்மிடம் தொடர்ந்து வைத்திருப்பதன் வழி தேர்தல் அரசியலை கேலிக்கூத்தாக்கி நிரந்தர ஆட்சியாளர்கள் ஆகும் திட்டம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...