முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜய் மீது கடுப்பாகும் சீமான்?



சீமானின் “கர்வாப்ஸி” பேச்சைக் கேட்ட போது ஒருவிசயம் தெளிவாகியது: அவருக்கு தன்னுடைய சுயசாதி, தமிழ் தேசிய தொண்டர் படை தன்னை விட்டுப் போகிறதோ எனும் அச்சம் அவருக்கு உண்டாகி இருக்கிறது. அந்த பேச்சில் அவருடைய முகத்திலும், குரலிலும் அந்த பதற்றம், கசப்பு தெரிகிறது. இந்த அச்சம் விஜய்யின் ரசிகர் மன்றம் உள்ளாட்சி தேர்தலில் 120க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது மிகப்பெரிய கவனத்தை ஊடகங்களில் பெற்றது, நாம் தமிழர் கட்சி இன்னொரு பக்கம் இதே தேர்தலில் டவுசர் கழன்று போயுள்ளது குறித்த கேலி, கேள்விகளில் இருந்து வருகிறது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால், விஜய் தன்னுடைய சாதியை சேர்ந்த மற்றும் சேராத இளைஞர்களை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் விடுவாரோ என சீமான் பதறுகிறார். ஒருவேளை விஜய்யின் ரசிகர் மன்றம் ஒரு கட்சியாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் கண்டு இதே போல கணிசமான வாக்குகளைப் பெற்றால் அது சீமானின் வாக்குவங்கியை அரித்து விடும். 

ஆக சீமான் தமிழரின் பூர்வ மதம் இந்து மதம், கிறித்துவர்களும், இஸ்லாமியரும் அம்மதங்களை பின்பற்றும் வரையில் தமிழர்களாக அவர்களை ஏற்க முடியாது என்கிறார். இந்து மதம் என்று சொன்னால் தான் பாஜகவுடன் நேரடியாக அடையாளப்படுத்தப் படுவோம் என பயப்படும் அவர் சைவமும், மால்யமும் இந்து மதங்கள் அல்ல என்கிறார். கவனியுங்கள், சைவமும் வைணவமும் வைதீக மதங்கள் அல்ல என்று அவர் கூறவில்லை. வில்லியம் ஜோன்ஸ் சட்டமியற்றி தமிழர் மதங்களை இந்து மதம் என பெயர் மாற்றி விட்டார், அப்பெயரை நீக்கினால் அவை தமிழர் மதமாகி விடும் என குழப்புகிறார். வரலாறும், மெய்யியலும் அறிந்த எவரும் இந்த அபத்தமான விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். இந்து மதம் என அறியப்பவடுகிற பிரதான இரு கிளைகள் வைணவமும் சைவமும். இரண்டுமே அத்வைதத்தின் மெய்யியல் படி தொடர்ந்து விளக்கப்பட்டு வருகின்றன. தொன்மங்களும் அவ்வாறே வடிக்கப்பட்டுள்ளன. சீமான் வழிபடும் வடபழனி முருகனும் தான். சிவனையோ விஷ்ணுவையோ வைதீக பூச்சுகளை ஒழித்து பழங்குடி தெய்வங்களாக்கும் எந்த முயற்சியையோ சீமானின் கட்சியினர் எடுக்கவில்லை. சைவத்தை பக்தி காலகட்டத்தில் எப்படி முன்வைத்தார்களோ அப்படித்தான் சீமானும் பார்க்கிறார். சொல்லப் போனால் சிவனை வைதீக எதிர்ப்புக் கடவுளாக மறுகட்டமைப்பு பண்ணுவதும் அவருடைய நோக்கமல்ல; அவர் மதநம்பிக்கையும் சுயசாதி பாசமும் கொண்ட ஒரு மக்கள் திரளை தமிழ் தேசிய முலாம் பூசி தன் வசம் இழுக்க இப்போது முயல்கிறார். இந்து என்று சொன்னால் எடுபடாது என்றால் சைவம் எனும் தமிழர் மதம் என ஒரு புதிய கதையாடலை எடுத்து விடுகிறார். இங்கு தான் விஜய்க்கும் ஒரு செக் வைக்கிறார்:


விஜய்யை ஏற்கனவே கிறித்துவ வந்தேறி என பாஜக எதிர்க்க முயன்று தோற்றது. இப்போது சீமான் அதையே விஜய்யின் பெயர் சொல்லாமல் செய்கிறார். விஜய் நம்முடைய சாதி நடிகர் என்று எண்ணி பின்னால் போகாதீர்களடா, அவர் கிறித்துவர், அதனாலே அவர் தமிழர் அல்ல என்று தன் தம்பிகளை கையைப் பிடித்து இழுக்கிறார்.

சீமான் இதற்கு முன்பும் அவ்வப்போது விஜய்யை “என் தம்பி” என்று கூறுவது, பின்னர் தாக்குவது என இருந்திருக்கிறார். குறிப்பாக, தன்னுடைய 6% வாக்குகளுக்கு பங்கு வந்து விடுமோ என பயம் வரும் போது அவர் “அரசியல் செய்யாமல் நேரடியாக தேர்தலில் போட்டியிடும் நடிகர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று விஜய்யையும் சேர்த்து சாடுவார். இப்போது ஒரு படி மேலே சென்று “அந்நிய மிஷினரி” என்று தாக்கி விட்டு கூடவே இருக்கட்டும் என “அரபு வந்தேறிகள்” என இஸ்லாமியரையும் சாடி இருக்கிறார். கோபத்தில், அச்சத்தில் நிதானத்தை இழந்திருக்கிறார்.

 ஆனால் இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் சீமானின் வீழ்ச்சி வரும் பத்தாண்டில் வேகமெடுக்கும் எனத் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...