நேற்று நண்பர் பௌத்த ஐயனாருடன் பெருமாள் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ப்பூர் புத்தக விழாவில் பெருமாள் முருகனின் மொழியாக்க நாவல்களை வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற (ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும்) வாசகர்களின் ஒரு நெடிய வரிசை நின்ற காட்சியைப் பற்றி ஐயனார் என்னிடம் குறிப்பிட்டார். இன்று பெருமாள் முருகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் தோன்றி விட்டார்கள். வாஷிங்டன் டைம்ஸில் அவருடைய நாவல்களுக்கு மதிப்புரை வருகிறது. இந்திய ஆங்கில படைப்பாளிகளான அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் கூட அடையாத இடத்தை ஒரு தமிழ் எழுத்தாளர் அடைந்திருப்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. நாம் இதை பொறாமையால் கவனிக்காததைப் போல் நடிக்கிறோம். ஆனால் அப்படி நடிக்காமல் இதை வைத்து என்ன கற்றுக் கொள்வது என நாம் யோசிக்க வேண்டும்.
தமிழ் தெரியாத என்னுடைய மாணவர்கள் நிறைய பேர் அவருடைய நாவல்களைப் படிக்கிறார்கள். அனேகமாக என் மாணவர்கள் எல்லாருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கிறது. நிறைய பேர் அவருடைய எழுத்துக்களைப் பற்றி ஆங்கிலத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்புகிறார்கள். இத்தனைக்கும் பெருமாள் முருகன் தொல்காப்பியம் கூறும் காலம், நிலம் குறித்த விதியை துல்லியமாக தன் கிராமிய புனைவுகளில் பின்பற்றுபவர். அந்தளவுக்கு தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய எழுத்து அவருடையது. ஆனால் தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ தெரியாதவர்களால் அவரை சுலபமாக ரசித்துப் படிக்க முடிகிறது. ஆங்கில, ஐரோப்பிய, ஜப்பானிய மொழியினராலும் நமது தமிழ் நிலத்தை, அதன் பிரச்சனைகளை, பாத்திரங்களை உள்வாங்க முடிகிறது. இது அவரது புனைவுகளின் வலிமையாலே. சர்ச்சையாலும், அந்த விளம்பரம் தந்த புகழினாலும் மட்டும் அவர் இந்த இடத்தை அடையவில்லை. ஆம், ஒரு வரலாற்று தருணம் அவரை இந்த பெரும் வெளிச்சத்தையும் இடத்தையும் நோக்கித் தள்ளியது, அதற்கான தகுதி இருந்ததால் அவர் அதை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அது அவரை ஒத்த திறமையான தகுதியான மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு உடனே அமையப் போவதில்லை. ஆனால் இங்கு பேச வேண்டிய விசயம் அது அல்ல.
இது மற்றொரு உண்மையையும் காட்டுகிறது: இந்நாள் வரை இப்படி ஒரு சந்தையே மொழியாக்கத்துக்கும் பிராந்திய எழுத்துக்கும் இல்லை; சந்தையை கவர ஆங்கிலத்தில் எழுத வேண்டும் அல்லது அகில இந்திய மனப்பான்மையை (pan Indian approach) கொண்டிருக்க வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் அது தேவையில்லை என பெருமாள் முருகனும் அவருடைய பதிப்பாளரான கண்ணனும் நிரூபித்திருக்கிறார்கள். எந்தளவுக்கு ஒரு படைப்பு பிராந்திய தன்மையுடன் இருக்குமோ அந்தளவுக்கு அது சர்வதேச தன்மை கொண்டதாகும் என்பது ஒரு பின்நவீனப் பார்வை. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க இலக்கியங்கள் அப்படியானவையே. அவற்றுக்கு நடந்தது ஏன் தமிழுக்கு நடக்கவில்லை என யோசித்துக் கொண்டிருந்தோம். இதோ நடந்தே விட்டது. இது ஒரு அசாதாரணமான சாதனை.
நமது எழுத்தாளர்கள், அவர்கள் பேசும் விசயம், அவர்களுடைய மொழிநடை, அவர்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் எதுவுமே, யாருமே சர்வதேச வாசகர்களுக்கும், சந்தைக்கும் தடை அல்ல, மாறாக இவையே தனியான தகுதியாக இன்று மாறி இருக்கிறது. பெருமாள் முருகன் கண்டைந்த உலகுக்கும் தமிழுக்குமான இந்த பாதையை எப்போது பிற தமிழ் எழுத்தாளர்களும் கண்டையப் போகிறார்கள்? அதற்கு ஊடகங்களும் ஆங்கில, சர்வதேச பதிப்பாளர்களும் உதவுவார்கள் எனில் நாம் தமிழில் புத்தகங்களை எவனும் வாங்குவதில்லை என கவலை கொள்ளத் தேவையில்லை. நேரடியாக பிரித்தானிய, அமெரிக்க, ஜெர்மானிய, ரஷ்ய, ஜப்பானிய வாசகர்களுக்காக நாம் எழுதலாம். அப்படியான ஒரு நாளும் வரக் கூடும்.
எஸ்.ராவிடம் பேசிய போது அவரது இரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று ஒரு பிரசித்தமான ஆங்கில பதிப்பகம் மூலமாக வர இருக்கிறது என்றார். அண்மையில் கீதாஞ்சலி ஸ்ரீ எனும் இந்தி நாவலாசிரியர் சர்வதேச புக்கர் பரிசை Tomb of Sand எனும் இந்தியில் எழுதப்பட்டு மொழியாக்கமான தனது பிராந்திய நாவலுக்காக வென்றார். எதிர்காலத்தில் இது தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவருக்கும் நடக்கக் கூடும்.
எப்போதும் உள்ளுக்குள்ளோ போர் புரிந்து கொண்டிராமல் நாம் நேர்மறையாக சிந்தித்து நம்பிக்கையோடு இருப்போம். தொடர்ந்து உழைப்போம். ஒருநாள் எல்லா கதவுகளும் திறக்கும்!

கருத்துகள்
மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
பெரும் புகழை எதிர்பார்த்து எழுதுபவரல்ல அவர். எனினும், அதற்கு அவர் தகுதியானவரே.
நடுத்தர வயதுக்காரர். தொடர்ந்து தரமான படைப்புகளைத் தருவாரேயானால், அவரின் உலக அளவிலான வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கும்; மேலும் புகழ் பெறுவார்.
அவர் பெறும் புகழ் தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.
தரம் வாய்ந்த படைப்புகளை வழங்கும் தாங்கள் ஒரு தரமான எழுத்தாளரைச் சிறப்பித்தது பாராட்டுக்குரியது.