கர்நாடகத்திற்கு வந்த பிறகு நான் காணும் ஒரு வித்தியாசமான போக்கு இங்குள்ள நான் கண்டவரையிலான (பெரும்பாலும் கத்தோலிக்க) கிறித்துவர்கள் பாஜகவை ஆதரிப்பதே. சிலர் கிறித்துவர்களாக இருந்தபடியே இந்து மதச்சின்னங்களை அணிகிறார்கள், இந்துப் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள். பாஜகவில் இல்லாத கிறித்துவர்களிடமும் கடுமையான இஸ்லாமிய வெறுப்புள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் விளையாட்டு மைதானங்கள், அவர்களுடைய மதக்கூட்டங்கள் சார்ந்து. என்னுடைய மாவட்டமான குமரியிலும் ஒரு பகுதி புரொட்டெஸ்டெண்ட் கிறித்துவர்கள் பாஜகவை ஆதரிப்பதாக, மத குருமார்கள் பாஜக தலைவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக அறிகிறேன். நான் சென்னையில் படித்த போது இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தது. அப்போது இதைக் கண்டித்து எங்கள் கல்லூரியில் கூட்டமும், பிரார்த்தனையும் நடந்தது. அப்போது கிறித்துவ மாணவர்களிடம் ஒருவிதமான இஸ்லாமிய வெறுப்பை, அதனாலேயே தீவிர அமெரிக்க ஆதரவைக் கண்டேன்.
வேறு மாநிலங்களில் என்ன நிலையெனத் தெரியவில்லை. இம்மக்கள் வெளிப்படையாக பாஜகவுக்கு ஆதரித்துக் கொண்டே தேர்தலில் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த இரு மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் வாக்களித்ததாக ஒரு புள்ளிவிபரம் சொல்லப்பட்டதே அதை எப்படிப் புரிந்து கொள்ள?
அதாவது மீண்டும் சொல்கிறேன் நான் பார்த்த அளவில் மட்டுமே இதைச் சொல்கிறேன். நான் பொதுமைப்படுத்த விரும்பவில்லை. கடந்த சில மாதங்களாகவே என்னை அலைகழிக்கிற குழப்பம் இது. உங்களுக்குத் தெரிந்த பதிலைக் கூறுங்கள்.
என்னுடைய கேள்விகள்:
1) நாம் சிறுபான்மையினர் எனப் பார்க்கப்படும் மக்கள் இந்துத்துவாவை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்கள் தம்மை பெரும்பான்மையின் பகுதி என நினைக்கிறார்களா?
2) அவர்கள் மதவாதத்தை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா?
தமிழகத்தினுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையினர் இடையே இந்துத்துவ எதிர்ப்பு ஒவ்வொரு அளவில் இருக்கிறதா?
3) இந்துத்துவா என்றால் இந்து பெரும்பான்மைவாதம் எனில் கிறித்துவர்கள் அதை ஆதரிக்க வழியே இல்லையே? எனில் இந்துத்துவா என்றால் அதில்லையா? இது நகைமுரண் அல்லவா, முதலீட்டியம் கம்யூனிஸத்தை ஆதரிப்பதைப் போல?
4) பாஜக கிறித்துவ மதமாற்ற முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதை, அதை ஒரு காரணமாகக் காட்டி சில மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதை அறிவோம். தமிழகத்திலும் பாஜக இம்மாதிரியாக சில கிறித்துவ கல்வி நிலையங்களை குறிவைத்து பிரச்சாரம் செய்ததை, ஒரு பள்ளிக்கு எதிராக இப்போது சி.பி.ஐ விசாரணை நடப்பதை அறிவோம். கர்நாடகத்திலும் யார் வேண்டுமெனிலும் தமக்குப் பிடிக்காத கிறித்துவ கல்வியாளர்கள் மீது இச்சட்டத்தின் கீழ் பொய்ப்புகார் அளிக்க முடியும். பெரிய ஆதாரம் ஒன்றும் தேவையில்லை. நல்லவேளை இதுவரை அப்படியான பிரச்சனைகள் வெடிக்கவில்லை. ஆனால் கிறித்துவ கல்வி நிலையங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீது பாஜகவினருக்கு ஒரு கண் உள்ளது வெளிப்படை. இதையெல்லாம் இந்துத்துவா ஆதரவு கிறித்துவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
5) இறுதியாக ஒரு விபரீதக் கேள்வி: அடுத்த சில பத்தாண்டுகளும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து, அதன் தாக்கம் காரணமாக நாளை இஸ்லாமியரும் இந்துத்துவாவை ஆதரிப்பார்களா? ஆதரித்தால் பின்னர் இந்துத்துவாவின் பொருள் தான் என்ன? ஹேனா ஆரெண்ட் ஜெர்மனியில் யூத அழித்தொழிப்பு நடந்த போது யூதர்கள் தமக்குள் இரண்டாக உடைந்து உள்புலம்பெயர்வுக்கு (inner immigration) ஆளானதாக சொல்லுவார். இதுவும் சிறுபான்மையினரின் உள் இடம்பெயர்தலா?
பி.கு: நான் இங்கு கிறித்துவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள் எனக் குறிப்பிடுவது ஒரு திரளைக் குறிக்கத் தானே ஒழிய இந்த அடையாளத்தின் கீழ்வரும் மக்கள் அனைவரும் ஒரு கொள்கை, நம்பிக்கை, செயல்பாடு கொண்டவரக்ள் எனச் சொல்ல அல்ல. இத்திரளுக்குள் பலவித முரண்பாடுகள் கொண்ட மக்கள் இருக்கலாம். ஒரு விவாதத்துக்காக மட்டுமே பொதுமைப்படுத்துகிறேன்.
கருத்துகள்