இந்த போட்டிக்குள் வரும் போது ஆஸி மட்டையாளர்கள் என்ன நடந்தாலும் அடித்தே ஆடுவது என முடிவெடுத்திருந்தனர். அதனாலே விக்கெட்டுகளைத் தொடர்ந்து பறிகொடுத்தாலும் சிறிய கூட்டணிகளில் ரன்கள் அடித்த போது அவர்கள் 40 ரன்களுக்குப் பதில் 80 எடுத்தனர். அவர்களுடயை ரன் சராசரி 3.5-4 ஆக இருந்தது. இந்த உத்தி அவர்கள் 263 அடிக்க வெகுவாக உதவியது - ஏனென்றால் இந்த ஆடுதளத்தில் ஒற்றை ரன்கள், தடுப்பாட்டம் என ரொம்ப நேரம் ஆட முடியாது. எதாவது ஒரு பந்து ஆடுதளத்தில் சற்று மென்மையான / விரிசலான பகுதியில் பட்டால் எகிறும், திரும்பும், ரொம்ப தாழ்வாக வரும் அல்லது நேராகப் போகும். அதாவது உங்கள் பெயரெழுதப்பட்ட பந்தொன்று வந்தே தீரும். அது மட்டுமல்ல, நாக்பூர் ஆடுதளத்தை விட இதில் சற்று வேகமாகவே பந்து வருவதால் பந்தை அடிப்பது ரொம்ப சிரமம் அல்ல. இதனாலே ஆஸி அணுகுமுறை இந்த ஆடுதளத்துக்கு ரொம்ப பொருத்தமானது.
ஆனால் இந்திய மட்டையாளர்கள் ஆட்டச் சூழலைப் பொருட்படுத்தாமல் தமது வழக்கமான தடுப்பாட்டத்தையே எடுத்து வந்தனர். அது மட்டுமல்ல அடித்தாடுவது என்றாலும் நமது துவக்க வீரர்களில் இருந்து மத்திய வரிசை வரை மோசமான ஆட்டநிலையில் இருக்கும் சீனியர்கள் கடும் அழுத்தத்தில் இருப்பதால் எளிதல்ல. அவர்கள் சற்று சுயநலமாக தடுத்தே ஆடினர். இப்போது இரண்டாவது நாளன்று கோலி அவுட் ஆனதுடன் இந்தியா கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்புக்கு வந்து விட்டார்கள். ஒருவேளை நம் மட்டையாளர்கள் தமது எதிர்மறையான தடுப்பாட்ட அணுகுமுறையை மாற்றினால் ஒருவேளை மீள்வருகை சாத்தியப்படலாம். ஆட்டம் மிக நெருக்கமாக மாறலாம். ஆனால் அதை யார் செய்வார்கள்? பூனைக்கு யார் மணிகட்டுவது?
இந்த ஆடுதளத்தின் வரலாற்றைப் பார்க்கும் போது ஐந்தாவது நாள் இதில் மட்டையாடுவது சற்று சுலபம். சராசரியாக ஐந்தாவது நாளன்று 4 விக்கெட்டுகளே விழுகின்றன. ஏனென்றால் அப்போது இப்போதுள்ள வேகமும் பவுன்ஸும் குறைந்து ஆடுதளம் சாந்தமாகி விடும். ஆக நாளை மதியம் வரை நாம் முதல் இன்னிங்ஸை நீடித்திருந்தால் நம்மால் இரண்டாவது இன்னிங்ஸை 5வது நாள் வரை கொண்டு போயிருக்க முடியும். நாம் அடிக்கும் ரன்கள் மட்டுமல்ல இரண்டாவது இன்னிங்ஸை நாம் சரியான நாளின் போது ஆடுவதும் முக்கியம். அந்த விசயத்திலும் இந்தியா படுதோல்வி அடைவதாகத் தெரிகிறது.
சின்னச்சின்ன விசயங்கள் தாம், ஆனால் அவையே ஒரு போட்டியின் முடிவைத் தீர்மானிக்கின்றன. ஆஸி அளவுக்கு இந்தியர்கள் இந்த ஆடுதளத்துக்கான தயாரிப்புடன் வரவில்லை. நாக்பூரில் ஆடுதளம் சற்று மெதுவானது என்பதால் அங்கு உருட்டி உருட்டி ஆடலாம், அங்கு உருட்டினாலே ரன் வரும், அங்கு ஆஸியினரில் சில அடித்தாடி விக்கெட் இழந்ததைப் பார்த்தோம். ஆனால் இந்த ஆடுதளத்தில் ஆஸியினரின் மட்டையாட்ட அணுகுமுறை கச்சிதமாக இருந்தது. இந்தியர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது மல்லாக்கப் படுத்துக்கொண்டு துப்புகிறார்கள் (சுயநல ஆட்டம் ஆடுகிறார்கள்).
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்