முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நுண்-வன்முறை

இந்த முறை இன்னொரு பரிதாபமான மனிதரையும் சந்தித்தேன். 67 வயதானவர். அரசுத்துறை ஒன்றில் சிறிய பதவியில் இருந்து ஓய்வுபெற்று சொற்ப ஓய்வுத்தொகையில் வாழ்பவர். திருச்சிக்காரர். 2001இல் அவரது மனைவி அவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து போனார். இவர் மனைவி திரும்ப வரக் கேட்டு வழக்குத் தொடுக்க நீதிமன்றத்தில் வைத்து நீதிபதியே “அவர் உன்னை துன்புறுத்தலியே, நல்லா தானே நடத்தினார், போய் அவர் கிட்ட சேர்ந்துக்கோம்மா” என்று கேட்டும் “என்னை அத்து விட்டிருங்க” என ஒப்பாரி வைத்திருக்கிறார். ஆனால் அவர் விவாகர்த்து கோரவில்லை. பதிலாக ஜீவனாம்ச வழக்கை மட்டும் போட்டிருக்கிறார். நீதிமன்றமும் ஒரு தொகையை இவரது சம்பளக் கணக்கில் இருந்து மாதாமாதம் எடுத்துள்ளது (இவர் ஜீவனாம்சத்தை செலுத்தாததால் என நினைக்கிறேன்.) இவர் ஓய்வுற்ற பின்னர் அப்படி எடுத்துக் கொடுக்கவில்லை என்பதால் அத்தொகையை மொத்தமாகக் கேட்டு (அரியர்ஸ்) இப்போது மனைவி மீண்டும் வழக்குத் தொடுத்திருக்கிறார். நீங்கள் ஏன் ஜீவனாம்சத்தைக் கொடுக்கவில்லை என்று நான் கேட்டதற்கு அவர் தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்ததில் தன்னிடம் இருந்த சேமிப்பு முழுக்க கரைந்துவிட்டது. இப்போதுள்ள சொற்ப ஓய்வூதியத்தைக் கொண்டு ஜீவனாம்சமும் கொடுப்பது சிரமம் என்றார். எனக்கு அந்த வாதம் நியாயமாகப் படவில்லை. அவர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஏதேதோ காரணம் சொல்லித் தட்டிக் கழித்திருக்கிறார் - குறிப்பாக தன் மனைவி தன்னை விட வசதியாக இருக்கிறார், தான் திருச்சியில் வாடகை வீட்டில் வசிக்க தன் மனைவியோ சென்னையில் அன்ணா நகரில் சொந்த வீடு கட்டும் அளவுக்கு வசதியுடன் இருக்கிறார் என்கிறார். இது உண்மையெனில் இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க அவர் ஏன் முயலவில்லை? அவர் முயன்றிருந்தால் அப்பீல் செய்து ஜீவனாம்சத்தை வெகுவாக குறைத்திருக்க முடியுமே என்றேன். அவர் அதற்கு வீட்டை தன் மனைவி கட்டினாலும் அதை சாமர்த்தியமாக தன் அம்மாவின் பெயரில் பதிவு பண்ணியிருப்பதாக சொன்னார். 


எனக்கு வேறொரு காரணம் தோன்றியது - இரு பத்தாண்டுகளுக்கு மேலாக இவர் எவ்வளவோ கெஞ்சியும் மனைவி இவருடன் வாழ மறுத்துவிட்டார். இது இவரது ஈகோவை காயப்படுத்தி விட்டது. தன்னை தனித்து விட்டுப் போனவளுக்கு எதற்கு தன் பணத்தைக் கொடுக்க வேண்டும் என நினைத்து முரட்டுத்தனமாக பிடிவாதமாக நீதிமன்ற ஆணையை சரிவர பின்பற்றாமல், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடவும் திராணியும் இல்லாமல் இப்போது சிக்கிக் கொண்டிருக்கிறார். நாம் எதை சரி என நினைக்கிறோம் என்பதல்ல சட்டம் என்ன சொல்கிறது என்பதே நடைமுறையில் மதிப்புள்ளது. உங்கள் நியாயம் சட்டத்திற்கு அநியாயமாக இருந்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு பணிய வேண்டியதுதான், வேறுவழியில்லை.

ஆனால் எனக்கு அவரது மனைவி இன்னும் சற்று மனித நேயத்துடன் விட்டுக்கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது. காரணம் அந்த மனிதரின் உடல் நிலை - அவருக்கு சிறுநீரகம் பழுதாகி விட்டது. வழக்கு விசாரணை நிலைக்கு வந்துவிட்டதால் வாய்தா கொடுக்க நீதிபதி மறுத்துவிட்டாராம். இவரும் அதற்காக சிறுநீரக அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார். அவர் திருச்சியில் வாடகை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு காரில் வரும் வசதி இல்லை. பஸ்ஸில் தான் திருச்சியில் இருந்து சென்னைக்கு மாதம் இருமுறை நீதிமன்ற ஹியரிங்காக வருகிறார். இங்கு 750 ரூபாய்க்கு விடுதி அறையை வாடகைக்கு எடுத்து சில மணிநேரங்கள் படுத்து ஓய்வெடுக்காவிடில் முதுகுவலி உயிர்போகிறது, அத்துடன் சிறுநீர கோளாறு தரும் வலி வேறு. அவரால் சரிவர நடக்கவோ மூச்சுவாங்காமல் பேசவோ முடியவில்லை என்பதை கவனித்தேன். அடிவயிற்றில் இருந்து எக்கியே பேசுகிறார். அந்த முகத்தைப் பார்த்த போது இவர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாழ மாட்டார் என்று எனக்குத் தோன்றியது. ஒரு அந்நிய மனிதனான எனக்கு ஏற்பட்ட இரக்கம் ஏன் அவரது மனைவிக்கு தோன்றவில்லை? இந்த வயதில் செயலிழந்த விட்டு சிறுநீரகம் கொண்ட மனிதனை இப்படி அலைய விட்டு சிகிச்சையெடுக்கவும் அனுமதிக்காமல் தொந்தரவு பண்ணி அவர் எதை சாதிக்கப் போகிறார்? அரியர்ஸ் தொகையை நாளை வாங்கி விட முடியும், ஆனால் இவர் செத்துப்போனால் எங்கிருந்து ஜீவனாம்சத்தை வாங்குவார்?  
இந்த கேள்விகளுக்கு ஒரே பதில் நம் சட்டமும் நீதிமன்ற நடைமுறையும் சகமனிதர் மீது அக்கறையோ கருணையோ காட்ட நம்மை அனுமதிப்பதில்லை என்பதே. அப்பெண் விரும்பினாலும் கூட இந்த சட்டமும் நடைமுறைகளும் அவரை மேலும் மேலும் கொம்பு சீவி விடவே செய்யும். நீதிமன்றம் ஒரு குத்துச்சண்டை அரங்கைப் போன்றது. பார்வையாளர்கள் “அவனைக் கொல், அவனைக் கொல்” எனக் கத்தி உங்களை ஊக்கப்படுத்துவதைப் போல இங்குள்ள சூழலும் அழுத்தமும் ஈவிரக்கமில்லாமல் எதிர்த்தரப்பை நசுக்கவே வழிவகுக்கும். அதாவது குத்துச்சண்டையிலாவது வன்முறை நேரடியாக வெளிப்படையாக இருக்கும். ஆனால் நீதிமன்றத்திலோ சிறுநீரகம் செயலிழந்த ஒருவரை நீண்ட தூரம் பயணிக்க வைப்பதைப் போல நுட்பமாக மறைமுகமாக ‘நாகரிகமாகவே’ வன்முறை இருக்கும். நீங்கள் அதற்கு ஆட்பட்டால் உங்களுக்கே தெரியாமல் சில நேரம் எதிர்த்தரப்பை காலால் நசுக்கிக் கொண்டிருப்பீர்கள். அவர் கூழான பின்னரே காலை எடுத்துப் பார்த்து “இவ்வளவு நேரமும் இவரை மிதிச்சிக்கிட்டா இருந்தேன்” என வியப்பீர்கள். நம் நீதிமன்ற இப்படியான நுண் வன்முறை சடங்குகளால் இயங்குவது. 
நீங்கள் உங்கள் மனைவியிடம் பேசி சமரசம் பண்ணலாமே என்று கேட்டால் “அவள் என் பேச்சைக் கேட்கவே தயார் இல்லை” என்கிறார். உங்கள் மகள்களிடம் தம் அம்மாவிடம் பேசக் கேட்கலாமே என்றேன். மகள்களும் அம்மாவின் பக்கம் நிற்பதாக சொல்கிறார். நான் என் மொத்த சேமிப்பையும் செலவழித்து கட்டிக்கொடுத்தேன், ஆனால் இப்போது எனக்கு ஆதரவாக அவரக்ள் இல்லை என்பதுடன், என் நிலை பற்றி எந்த இரக்கமும் காட்டாமல் மோசமாக் நடந்து கொள்கிறார்கள் என கசந்து கொண்டார்.

நீதிமன்றத்துக்கு மனசாட்சி இல்லை, அதை விடுங்கள். இவர் செத்துப்போனால் மனைவியாலோ மகள்களாலோ மனசாட்சி உறுத்தாமல் நிம்மதியாக உறங்க முடியுமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...