முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்

 சினிமாவில் புர்கா குறித்த சித்தரிப்புகளைப் பற்றி நான் சொன்ன கருத்தொன்று இஸ்லாமிய வட்டாரங்களில் சுற்றி வருவதாக சில நண்பர்கள் சொன்னார்கள். அதைப் பற்றின சிறுவிளக்கம் இது:

நோக்கு (gaze) என்றொரு கோட்பாட்டு சொல் உண்டு - நாம் ஒருவரை பார்க்கிறோம் என்பதல்ல எப்படிப் பார்க்கிறோம் என்பதில் ஒரு இச்சை, அதிகார விழைவு உள்ளது, அது பார்க்கப்படுபவரின் உடலை, அவர்களுடைய தன்னிலைக் கட்டமைப்பை பாதிக்கிறது, அவர்களும் பின்னர் இந்த நோக்கின் தவிர்க்க இயலாத கண்ணியாகிறார்கள் என்பதே இக்கருத்தின் விளக்கம். இதற்கு ஆண் பெண் பேதம் பெரிதாக இல்லை. ஆண் நோக்கை ஒரு பெண்ணும் வெளிப்படுத்த முடியும். இந்த நோக்கானது ஒரு இயல்பு பிறழ்ந்த (மாற்றுத்திறனாளி) உடல் மீதும் செயல்பட முடியும், இது ஒரு ஒடுக்கப்பட்ட சமூக ஆளின் உடல் மீதும் செயல்பட முடியும். இது யார் மீதும் செயல்பட முடியும். இஸ்லாமிய பெண்கள் என்று வரும் போது இதில் சிறிது கிளர்ச்சி, கிளுகிளுப்பு, அவர்கள் வழியாக அச்சமூகத்தின் மொத்த உடல்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகார விருப்பமும் சேர்ந்தே வருகிறது. அதனாலே சினிமாவிலும் ஊடகங்களிலும் ஒரு இஸ்லாமிய ஆணின் தாடியை விட பெண்ணின் முகத்திரையே அதிகமாக பதிவாகிறது, கவனப்படுத்தப்படுகிறது, துய்க்கப்படுகிறது. ஏனென்றால் அது ஒரு குறியீடு. அதை வைத்து நீங்கள் இஸ்லாமியர் பிற்போக்காளர்கள் என்றும், நாங்கள் முற்போக்காளர்கள் என்றும் சொல்லிவிட்டு உடலரசியல் அதிகார இன்பத்தையும் துய்க்க முடியும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.
புர்கா அரசியல் படங்களின் வியாபார பார்முலா இது தான் - ஒரே சமயம் பார்வையாளர்களின் கவனமும் அறிவுச்சமூகத்தின் புரட்சியாளர்களின் முற்போக்காளர்களின் பாராட்டும் கிடைக்கும். நீங்கள் மணிரத்னத்தின் "பம்பாய்" படத்தில் மனிஷா கொய்ராலாவின் சய்ரா பானு பாத்திரம் எங்கெல்லாம் புர்கா, முகத்திரை இன்றி வருகிறார், எங்கெல்லாம் அவர் "வெளிப்படுத்தப்படுகிறார்" என்பதை வைத்து ஒரு ஆய்வு பண்ணினால் நான் சொல்ல வருவது புரியும். அதில் உள்ள பாலியல் நோக்கு இன்பத்தையும், முற்போக்கு அரசியல் லாபத்தையும் மணிரத்னம் ஒரே கல்லில் கொய்திருப்பார். அடுத்தடுத்த வந்த எல்லா படங்களிலும் இதுதான் நடக்கிறது. நான் இஸ்லாமிய பெண்களின் புர்கா குறித்து பொதுசமூகம் கொள்ளும் ஆர்வத்தை இந்த மேற்சொன்ன 'நோக்கின்' அடிப்படையிலே 'பார்க்கிறேன்'. உங்கள் பெண்களை மற்ற சமூகத்தினர் கவரப் பார்க்கிறார்கள் என 'எச்சரிப்பது' என் நோக்கமல்ல. அது அவ்வாறு புரிந்து கொள்ளப்படக் கூடாது என்பதாலே இவ்விளக்கம். பொதுமொழியில் எழுதுவதன் சிக்கல் அது.
இன்னொரு விசயம்: இந்த புர்காவை நான் ஆதரிக்கிறேனா? அதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...