முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் - 1

 ஆஸ்திரேலியாவின் ஹராகிரியும் இந்தியாவின் அதிர்ஷ்டமும்





சென்னையில் நடந்த இந்தியா-ஆஸி அணிகளின் முதல் உலகக்கோப்பை போட்டி சற்று விசித்திரமானது. சற்று மெதுவான, சொற்பமாகத் திரும்புகிற, முதல் 5 ஓவர்களில் ஸ்விங் ஆகிற, அங்கங்கே வெடிப்புகள் உள்ளதால் பந்து சில நேரங்களில் கூடுதலாக பவுன்ஸ் ஆகிற ஆடுதளம். ஆஸ்திரேலியா முதலில் மட்டையாட முடிவெடுத்தது அங்கு அண்மையில் ஆடப்பட்ட 8 போட்டிகளில் 6 போட்டிகளில் முதலில் மட்டையாடிய அணி வென்றுள்ள புள்ளிவிபரத்தின் அடிப்படையில். அது சரிதான், ஆனால் மாலையில் வானம் தெளிக்கும் பனித்துளிகளும், காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதும், பந்து ஈரமாவதும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும் என்பதால் சற்று கூடுதலாக ஓட்டங்களை எடுக்க வேண்டும் - 250இன் இடத்தில் 270 வேண்டும். ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டைக் கொடுத்தாலும் ஸ்மித்தும் வார்னரும் சேர ஒரு நல்ல கூட்டணி அமைந்தது. ரன்கள் வந்தன. ஆனால் துவக்கத்தில் இருந்தே இருவரும் இயல்பாக ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஆடாமல் ஒவ்வொரு பத்து ஓவருக்கும் ஒரு இலக்கை வைத்து அதை எட்டுவதற்கான பதற்றத்திலும், அதற்கான முயற்சியில் விக்கெட்டைக் கொடுக்கக் கூடாதே எனும் குழப்பத்திலுமே ஆடினர். ஒரு கட்டத்தில் சுழலர்களின் பந்து சற்றே திரும்பியதும் தடுப்பதா அடித்தாடுவதா எனக் கையைப் பிசைந்தனர். இரண்டையுமே செய்தனர் - அதனாலே 35 ஓவர்களுக்குள் அனேகமாக எல்லா மட்டையாளர்களையும் இழந்தனர். அதுவும் ஸ்மித், லேபுஷேன், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி ஆகியோர் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சுக்கு அல்ல, தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட நெருக்கடியின் பாரம் தாளாமல் ஹராகிரி செய்துகொண்டனர். கடந்த முறை இங்கு டெஸ்ட் போட்டித்தொடர் ஆட வந்த போதும் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒரு தற்காப்பு மனநிலையிலே இருந்து அதனாலே முதல் சில போட்டிகளை மோசமாக இழந்து பின்னர் இறுதிப்போட்டியில் ஸ்மித்தின் தலைமையில் அதிரடியாக ஆடி வென்றனர்.


சில ஆண்டுகளுக்கு ஸ்மித்தின் மீது பந்தின் தையலை வேண்டுமென்றே மோசமாக்கியதாக ஒரு புகார் எழுந்து, அதன் முடிவில் அவரும் வார்னரும் தடை செய்யப்பட்டனர். இது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் துவக்கம் - இதன் பிறகு ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆடும் அணுகுமுறையே தலைகீழானது. ஒருவித பயம், அதீத திட்டமிடல், தடுப்பாட்டம் என மாறினர். வேகவீச்சில்தடுப்பாட்ட நாயகனானபேட் கம்மின்ஸை ஒருநாள், டெஸ்ட் வடிவங்களின் அணித்தலைவர் ஆக்கினதும் இதன் நீட்சியாகத் தான். ஸ்மித்தை மன்னித்து மீண்டும் தலைவராக்கி இருந்தால் ஆஸ்திரேலியா இந்த உலகக்கோப்பையில் இப்படி கிணற்று மதில் மேல் குடிகாரனைப் போல ஆடியிருக்காது. ரெண்டாயிரத்தில் இருந்த ஆஸி அணியென்றால் நேற்றைய போட்டியில் சுழலர்களுக்கு பயத்தைக் காட்டியிருப்பார்கள். நிச்சயமாக 280 அடித்திருப்பார்கள்


மூன்றே மூன்று முழுநேர மட்டையாளர்களையும் அதிகமான பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களையும் ஆட வைப்பதனால் மட்டையாளர்கள் மீது போதுமான நம்பிக்கை இராமல் போய்விட்டது நிர்வாகத்துக்கு. அதனால் இந்த உலகக்கோப்பையில் அவர்கள் சில முக்கியமான போட்டிகளில் சுழல் ஆடுதளங்களில் ஆடப்போவது தெரிந்திருந்தும் ஒரே ஒரு முழுநேர சுழலருடன் வந்துள்ளார்கள். இன்னொருவரை எடுத்தால் மட்டையாட்டம் 9துடன் முடிந்துபோகும் என அஞ்சுகிறார்கள். எனக்குப் புரியவில்லை - 7 மட்டையாளர்களால் அடிக்க முடியாத ரன்களை 10வது எண்ணில் வரும் பந்துவீச்சாளர்கள் அடிக்கப் போகிறாரா? நேற்றைய போட்டியில் ஆடம் ஸேம்பாவை மட்டும் நம்பியிருந்தது கைகொடுக்கவில்லை. மேலும் ஸேம்பாவின் மெதுவான பந்துகள் சரியாகத் திரும்பவில்லை. ஜடேஜாவைப் போல நல்ல டெஸ்ட் நீளத்தில் வேகமாக பந்தை மோதும் போதே திரும்புகிறது, எகிறுகிறது. இதைச் செய்யும் பந்துவீச்சாளரை அவர்கள் தேர்வுசெய்யவில்லை.


இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆஸியினரின் குழப்பம் அவர்களுக்கு சாதகமாகியது. 200க்குள் பொட்டலம் மடித்தபின்னர், மட்டையாட வந்து மூன்று விக்கெட்டுகளை பூஜ்யத்துக்கு கொடுத்த போதும் (மிச்ச ரன்கள் பையில் வந்தன) மத்திய ஓவர்களில் அவர்களுக்கு பெரிய சவால் இருக்கவில்லை. ரன் ரேட்டும் குறைவு, பந்துவீச்சும் சுலபம். கோலியும் ராகுலும் எதிரணியை பொறுமையாக மிக்சர் போலத் தின்பதில் திறமையாளர்கள். கூட்டணியை சிரித்துக்கொண்டே ஆப்படிக்கும் அவர்களுடைய எடப்பாடி ஸ்டைல் மட்டையாட்டம் நேற்று இந்தியாவுக்கு வெற்றியை அளித்தது. அதுவும் கோலியின் அரை சதத்தை ஒரு மாஸ்டர் கிளாஸ் என்பேன். அரை இறுதி வரை கோலியால் இப்படி ஆட முடிந்தால் இந்தியா நிச்சயமாக இறுதிப்போட்டிக்கு செல்லும்.


கே.எல் ராகுலை எந்த ஆட்ட அனுபவமும் இல்லாமல் காயத்துக்குப் பின்னர் நேரடியாகக் கொண்டு வந்தது தவறாக அப்போது பட்டாலும் அவர் வந்த உடனேயே ஆசியக் கோப்பையில் மிக சரளமாக துணிச்சலாக பொறுமையாக ஆடினார். இந்தியாவுக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்தது அப்போதுதான். அடுத்து ஹர்த்திக்கின் ஆட்டநிலையும் மேம்பட இந்தியாவின் மத்திய வரிசைப் பிரச்சினை சரியானது. இப்போது உலகக்கோப்பை அணிகளிலே வலுவான மத்திய வரிசை இந்தியாவுக்கு உள்ளது. அக்ஸரின் காயமும் இந்தியாவுக்கு சாதகமாகியது - அஷ்வினை எடுக்காத தவறை இதை வைத்து சரிசெய்து அவரை உள்ளே கொண்டு வந்தார்கள். அவரும் வந்ததில் இருந்தே அற்புதமாக வீசுகிறார். இப்போது இந்தியா ஒரு கிட்டத்தட்ட சூப்பர் அணியாகத் தெரிகிறது. பெரும்பாலான ஆடுதளங்கும் (தர்மஷாலாவில் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியைத் தவிர) இந்தியாவின் முத்தரப்பு சுழல் படைக்கு சாதகமாக இருக்கும். ஆசியக் கோப்பைக்கு முன்பு இந்த அணியைப் பார்த்த போது கரகாட்டக்காரன் கோஷ்டியைப் போலத் தெரிந்தார்கள், ஆனால் ஒரே தொடரில் அப்படியேவிக்ரம்கமலைப் போல மாறிவிட்டார்கள். ஹர்த்திக்குக்கு எந்த காயமும் ஏற்படாமல், ஜடேஜாவின் மட்டையாட்ட நிலையும் மேம்பட்டு, அரை இறுதியில் கோலி இதே போல மீண்டும் ஒருமுறை இந்தியாவைக் காப்பாற்றினால், நடுவில் பதற்றம், குழப்பம், அன்புமணி ஏற்படாமல் இருந்தால் இறுதிப்போட்டிக்கு 232 மைல்ஸ் வேகத்தில் ரேஸ்காரிலேயே போய்விடலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...