ஜெ.டி.எஸ் வேட்பாளரும் தேவ கௌடாவின் பேரனுமான பிரஜ்வால் ரேவண்ணா ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் வேட்டையாடிய காணொளிகளை வெளியிடப் போவதாக அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் மிரட்டிய போது பிரஜ்வால் தன்னுடைய கௌரவத்துக்கு இழுக்கு செய்யும் வண்ணம் இந்த பிரச்சினை எழுப்பப்படுகிறது என்று சொல்லி நீதிமன்றம் சென்று வாதாடினார். சாமான்யர்கள் நீதி கேட்டு சென்றால் வருடக்கணக்கில் அலைகழிக்கும் நீதிபதியோ ஒரு சில நாட்களிலே இந்த வழக்கு சம்மந்தமான எந்த செய்தியையும் ஊடகங்களில் வெளியிடக் கூடாது என தடையுத்தரவு வழங்கினார். (சினிமா நீதிபதிகள் மட்டுமே பொதுமக்களுக்காக முழங்குவார்கள்.) ஏதோ ஒரு காரணத்துக்காக காங்கிரஸ் அரசு இதை வழக்காக்கி விசாரிக்க விரும்பவில்லை. ஆனால் அண்மையில் இதை தேர்தலுக்கு பயன்படுத்தும் நோக்கில் பாஜகவினுள் ஜெ.டி.எஸ்ஸின் கூட்டணியை விரும்பாதவர்களோ அல்லது கௌடா குடும்பத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவர்களோ அல்லது ஹஸன் தொகுதியை பிரஜ்வாலுக்கு கொடுத்ததால் கடுப்பான பாஜகவினர்களோ அல்லது பி.எல் சந்தோஷிடம் இருந்து மாநிலப் பொறுப்பை விஜயேந்திர எடியூரப்பாவிடம் கொடுத்ததை விரும்பாதவர்களோ பிரஜ்வாலின் பல்லாயிரம் காணொளித் துண்டுகளை பென்டிரைவில் போட்டு அதை ஆயிரக்கணக்கில் வினியோகித்தார்கள். தடை ஊடகத்துக்கு தானே, மக்கள் தனிப்பட்ட முறையில் பகிர்வதற்கு அல்லவே. இது வேலை செய்ய ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இதைக் கண்டித்து பேச பிரச்சினை தீயாக எரிந்தது. பாஜகவோ இது காங்கிரஸின் சதித்திட்டம், இந்த பிரச்சினையை ஏன் இவ்வளவு நாள் விசாரிக்கவில்லை என நியாயமான கேள்வியை எழுப்பியது. சிவக்குமாருக்கு இந்த காணொளிகளை கொடுத்தது ஓட்டுநர் கார்த்திக் தான் என பாஜகவின் விஜயேந்திராவின் தரப்பு சொல்ல கார்த்தி தான் அந்த பென் டிரைவ்களை பாஜக தலைவர் தேவராஜெ கௌடாவிடம் தான் கொடுத்ததாக சொன்னார். தேவராஹெ கௌடாவோ தான் இதைப் பற்றி விஜயேந்திராவுக்கு கடிதம் எழுதியதாகவும், விஜயேந்திரா தனக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை என மறுத்துவிட்டதாகவும் சொன்னார். இதற்கு நடுவே பிரஜ்வால் தப்பித்து ஜெர்மனியில் செந்தேன் மலர்களுடன் நடனமாட சென்றார். கடைசியில் காங்கிரஸ் பெண்கள் அணி இதை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்து உருவ பொம்மையை எரித்து அதன் குஞ்சிலேயே மிதித்து போராட்டம் நடத்த பிரஜ்வாலுக்கு எதிராக விசாரணை துவங்கியது. ஜெ.டி.எஸ்ஸின் ஹெச்.டி குமாரசாமியோ “உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தான ஆகணும், என் உறவினர் என்பதால் அவரை ஆதரிக்கவெல்லாம் முடியாது” கைகழுவினார். பிரஜ்வால் கட்சியில் இருந்தே இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே இந்த பாலியல் பலாத்காரங்கள், கேளிக்கைகள் ஐந்தாண்டுகள் பழையவை, இப்போது அரசியலுக்காக மிகைப்படுத்தி என் மகனை மானபங்கம் செய்கிறார்கள் என பிரஜ்வாலின் அப்பா ஹெச்.ஜி ரேவண்ணா கூறினார். என்ன வேடிக்கையெனில் சில காணொளிகள் அப்பாவும் சம்மந்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். ரேவண்ணா தன் வீட்டில் வேலை செய்த பெண்கள், ஆண்கள் என எல்லாரையும் பலாத்காரம் பண்ணியிருக்கிறார் (பைசெக்ஷுவல் போல). அப்பெண்களில் ஒருவர் மூத்த வேலைக்காரர். அவர் ஒரு காணொளியில் “நான் உன் தாத்தாவுக்கு சோறு போட்டிருக்கிறேன். உன் அப்பாவுக்கு சோறு போட்டிருக்கிறேன். உன்னை வளர்த்திருக்கிறேன். என்னை விட்டுவிடு.” என கெஞ்சுகிறார். ஆனால் ரேவண்ணா விடவில்லை. எனக்கு அவர் வெறும் குற்றவாளி அல்ல, உணர்ச்சி மேலிட்டு பலாத்காரம் பண்ணுகிறவரோ, அதில் சுவை கண்டதால் பெண்களைத் துன்புறுத்துகிறவரோ அல்ல எனத் தோன்றுகிறது. இந்த எண்ணிக்கையும், கண்மூடித்தனமான பாய்ச்சலையும் பார்க்கும் போது அவர் ஒரு பாலியல் போதை அடிமை (செக்ஸ் அடிக்ட்) எனத் தோன்றுகிறது. மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின்றி மோசமாகி சீரியல் கொலைகாரர்களாகும் சிலரைப் போன்றவர் ரேவண்ணா. அவரிடம் பணமும் அரசியல் செல்வாக்கும் உள்ளது என்பது மட்டுமே வித்தியாசம். பாலியல் போதை அடிமைகளுக்கு பாலியல் உறவில் எந்த மகிழ்ச்சியும் இராது. திருப்தியின்மையே அவர்களை மேலும் மேலும் நாட வைக்கும். அதுவே வன்முறையாளர்களாக அவர்களை மாற்றும். இந்த நோய் ஆண் பெண் இரு பாலினத்தாரிடமும் உண்டு. என்ன பெண்களை விட ஆண்கள் ஆபத்தானவர்களாக மாறுவார்கள். மத்திய வர்க்கத்தினர், மேல் மத்திய வர்க்கத்தினரிலும் இத்தகையோர் இருப்பார்கள். பாலியல் தொழியாளிகளிடம் போய், உறவுக்காரர் பெண்களிடம், காதலியரிடம் போய் வன்மத்தைக் காட்டி அடிவாங்கி வருவார்கள். பிரச்சினை வெளியே வந்து குடும்பத்துக்கு தெரிந்தாலும் மானம் போய்விடும் என மறைத்து கல்யாணம் பண்ணி வைப்பார்கள். மணப்பெண்ணை தினமும் பலமுறைகள் தொடர்ச்சியாக வற்புறுத்தி அவள் சாகும் நிலைக்குப் போகும் போது எதாவது பொய்க்காரணம் சொல்லி பெற்றோர் வீட்டுக்கு அனுப்புவார்கள். அங்கு உண்மையை அப்பெண் சொன்னால் விவாகரத்துக்குப் போனால் மாப்பிள்ளை விட்டார் உடனடியாக ஒப்புக்கொண்டு நைசாக முடித்து வைப்பார்கள். அடுத்த மணப்பெண்ணைத் தேடுவார்கள். ஏனென்றால் தினமும் பல மணிநேரங்கள் ஒரு பெண்ணை வதைக்காவிட்டால் இவர்களுக்குத் தூக்கம் வராது. குடிக்காமல், போதை மருந்து எடுக்காமல் சிலருக்கு பைத்தியம் பிடிக்குமே அதைப் போல. இது ஒரு ஒழுக்கப் பிறழ்வோ பணக்கார திமிர்த்தனமோ அல்ல. இது ஒரு நோய்.
ஒன்று பாலியல் போதை அடிமை நோய் அவரது அப்பாவிடமும் இருந்திருக்க வேண்டும், அல்லது மகனை எப்படி சரி பண்ணுவது என அவருக்குத் தெரியாமல், வடிகால் கொடுத்தால் அவன் அமைதியாகி விடுவான் என அவர் நினைத்திருப்பார். ஆனால் சரியான மருத்தவரிடம் அனுப்பி சிகிச்சை அளித்திருந்தால் பிரஜ்வாலும் ஆயிரக்கணக்கான பெண்களும் காப்பாற்றப்பட்டிருப்பர்கள். ஏனென்றால் அப்பெண்கள் அனுபவித்த துன்பம் பன்மடங்கு வலுவானது என்றாலும், பிரஜ்வாலும் மகிழ்ச்சியாகவோ திருப்தியாகவோ ஒருநாளும் இருந்திருக்கவோ இருக்கவோ முடியாது. வெளியே பார்க்கத் தான் பளபளப்பாக இருக்கிறார், உள்ளுக்குள் தினமும் துன்பத்தில் திளைக்கும் ஒரு நோயாளி.
மருத்துவம் சொல்வதைப் பாருங்கள்: Sexual addiction is an intense focus on sexual fantasies, urges or activities that can’t be controlled and cause distress or harm your health, relationships, career or other aspects of your life. It’s an overwhelming compulsion or temptation that’s so strong you feel that you have to have it. It’s an out-of-control feeling, never feeling satisfied feeling or a constant battle to take control of something that’s on autopilot.
அடுத்து கவனிக்க வேண்டியது இவர்களில் 88% மேலாவர்களுக்கு வேறு மனநோய்களும் இருக்கும். ஒ.ஸி.டி, எடி.ஹெச்.டி, எளிதில் போதைக்கு ஆட்படும் மனநிலை. இவர்களுக்கு மன அழுத்தமும் தற்கொலை எண்ணமும் அதிகமாக இருக்கும். இது நோயா இல்லையா என்பது குறித்த விவாதம் இருந்தாலும் இதை அவ்வாறு கருதித்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். மூளையின் உயிரிவேதியலில் வரும் சமநிலைக்குறைவு, வேறு மனநோய்கள், சிறுவயதில் நிகழ்ந்த பாலியல் தாக்குதல்கள், பெற்றோருடனான மோசமான உறவு இதை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள்.
பிரஜ்வால் மட்டுமல்ல அவரைப் போன்ற நோய் கொண்ட வன்முறையாளர்களை உருவாக்கி சமூகத்துக்கு பாதகம் செய்வது அவர்களுடைய பெற்றோர் தான் என நினைக்கிறேன். அரசு இவர்களை பள்ளி வயதிலேயே அடையாளம் கண்டு, பெற்றோருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். பல்லாயிரம் பேர்களை வேட்டையாடி அழித்த பின்னர் சிறையில் தள்ளுவதால் பயனில்லை.
Comments