முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியாட்சியும் மன்னராட்சியும்




குடியாட்சியின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று அது கார்ப்பரேட் லாபியிங் எனப்படும் மறைமுக ஊழலை, பெருவியாபாரிகள் அதீதமாக அரசைக் கட்டுப்படுத்துவதை அது குற்றமாகக் கருதுவதோ தடுப்பதோ இல்லை என்பது. இதனால் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்நான் குடியாட்சியே தவறென்று சொல்லவில்லை; குடியாட்சி அடிப்படையில் ஏற்றத்தாழ்வை அனுமதிக்கும் இயல்பைக் கொண்டிருப்பதே தவறென்கிறேன். பொருளாதார ஏற்றத்தாழ்வு என வந்துவிட்டால் அங்கு எல்லாரும் சமம் அல்ல. இங்கு 130 கோடி மக்களை விட அதானியும் அம்பானியுமே அதிக அதிகாரம் பெற்றவர்கள். ஏனென்றால் அவர்கள் சட்டத்தை வளைத்து அநியாயமான வகையில் கோடானுகோடி சொத்துக்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள். குடியாட்சி அமைப்பு தனியார் சொத்திற்கு கட்டுப்பாடு விதிப்பதில்லை. அதனாலே சட்டத்தை வளைக்கும் அதிகாரத்தை அது தனியாருக்கு வழங்குகிறது. விளைவாக அவர்கள் ஆளும் அரசைத் தம் கைப்பாவையாக்கவும் அனுமதிக்கிறது. அதாவது குடியாட்சி முதலீட்டியத்திற்கு தரும் அபரிதமான சுதந்திரமே நிதி ஓரிடத்தில் குவியவும், அந்த இடத்தில் உள்ளவர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இதன் பெயர்தான் கார்ப்பரேட் லாபியிங். அமெரிக்காவில் இது ஒரு மிகப்பெரிய தீமையாக உருவெடுத்திருக்கிறது - அங்கு மருந்து நிறுவன லாபியினால் மருந்து விலையை மிகமிக அதிகமாகி விட்டது. நோயினால் வாடும் மத்திய வர்க்கம் மருந்தில்லாமல் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல மருத்துவக் காப்பீடு இருந்தாலே முடியும். காப்பீட்டு நிறுவனங்களின் லாபி அரசைக் கட்டுப்படுத்துவதால் காப்பீட்டுத் தொகையும் காப்பீட்டு நிறுவனங்களின் தன்னிச்சையான செயல்பாடும் அதிகரித்து மக்களால் காப்பீட்டை நம்பி சிகிச்சைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இப்போது தனிநபர்களின் வசமுள்ள வாடகை வீடுகளை கார்ப்பரேட்டுகள் விலைக்கு வாங்கி வாடகையைப் பரவலாக உயர்த்தி (அதாவது செயற்கையாக வீங்க வைப்பதால்) ஏற்கனவே வேலையிழந்தவர்களும் பெரிய தொகையைக் கொடுக்க முடியாதவர்களும் பரவலாக நடைபாதைகளிலும் வேனிலும் காரிலும் வாழும் நிலை ஏற்பட்டு வருகிறது என்று ஆவணப்படமொன்றில் பார்த்தேன். உலகின் மிகப்பெரும் பணக்கார தேசத்தில் 11.6% பேர் வறுமையில் தவிக்கிறார்கள். பேஸ்புக், கூகிள் போன்ற சமூகவலைதள, தேடற்பொறி பெருநிறுவனங்கள் இணையப் பரிவர்த்தனையில் உள்ள தரவுகளைத் தம் வசம் வைத்துக்கொள்ளவும், அவற்றைக்கொண்டு அரசியல் கதையாடல்களைத் தீர்மானிக்கவும், தம் செல்வாக்கைக் கொண்டு மேலும் அரசியல் அதிகாரத்தையும் பணத்தையும் திரட்டவும் லாபியிங்கை பயன்படுத்துகிறார்கள். இன்று பேஸ்புக்கும் கூகிளும் நமது அந்தரங்கத் தரவுகளை வெளிநிறுவனங்களுக்கு விளம்பரத்துக்காக விற்பதை எந்த அரசும் கட்டுப்படுத்தாதது இதனாலே. அமெரிக்காவில் ராணுவ ஆயுத, தளவாட உற்பத்தியாளர்களின் (லாக்ஹீட் மார்ட்டின், போயிங்) தரகர்களின் அழுத்ததாலே பெரும் தொகை ராணுவச் செலவுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு அதனாலே அமெரிக்காவின் யுத்தவெறி செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது, அவர்கள் நேரடியாக யுத்தத்தில் பங்களிக்காதபோதும் மறைமுகமாக ஆயுதங்களையும் ஆதரவையும் தம் ஆதரவு நாடுகளுக்குக் கொடுப்பது இந்த முதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும்தான் என விமர்சிக்கப்படுகிறது. இப்போது நடந்து வரும் ஆட்சியில் டிரம்ப் நிழல் மட்டுமே, அவருடைய கட்சிக்கு பெருந்தொகையை நிதியளித்த எலான் மஸ்க் தான் நிஜ ஜனாதிபதி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்


நம்மூரில் கார்ப்பரேட் லாபியிங்கின் மோசமான தாக்கத்தை நாம் தேர்தல் பத்திரங்களின் வழியாக பாஜகவுக்கு பணத்தை அள்ளி இறைத்த நிறுவனங்கள் அரசிடம் பல்வேறு சலுகைகளைப் பெற்று தாம் செலவழித்த பணத்தை பின்னர் பலமடங்கு லாபமாக (அரசின் ஒப்பந்தப் பணிகள், ஊழலுக்கும் கறுப்புப்பணத்துக்குமான அனுமதி) பெருக்கியதைப் பார்த்தபோது உணர்ந்தோம். நீதிமன்றம் தலையிட்டு அந்த மறைமுக கார்ப்பரேட் ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்தது. கொரோனோ காலத்தில் கார்ப்பரேட்டுகளின் வரிகளை பெருமளவு குறைத்திட ஒரே ஆண்டில் அவர்களுடைய லாபம் மும்மடங்காகியது. அவர்களால் ஏற்பட்ட லட்சங்கோடி நட்டத்தை ஈடுகட்ட அரசு மத்திய வர்க்கத்தின் வரியை அதிகரித்தது. இது எந்தளவுக்குச் சென்றது என்றால் நாம் வாங்கும் பொருட்களுக்கான வரியை விற்பவர்களிடம் இருந்து வாங்காமல் வாடிக்கையாளர்களான நம்மிடமே வாங்குகிறார்கள். இவ்வருட பட்ஜெட் அறிவிப்பின்போது அண்மையில் நிர்மலா சீத்தாராமன் தனியார் ஆய்வொன்றில் பெரும்பாலான பெருமுதலாளிகள் ஜி.எஸ்.டி விசயத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டதை கவனிக்க வேண்டும்

இன்று நாம் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் நூறு ரூபாயில் 60 ரூபாயை வரியாகச் செலுத்துகிறோம். நாம் மாதம் இருபதினாயிரத்திற்கு பொருட்களை வாங்கினால் அதில் ஐயாயிரமாவது மறைமுக வரியில் போய்விடுகிறது. அதாவது 40,000 சம்பாதிக்கிறவருக்கு சம்பாத்தியத்தில் 10-20% மறைமுக வரியில் போகிறது. இப்போது அரசு ஊழியர்கள் சேமிப்புப் பணத்தை 80 சியில் திரும்பக் கோருவதையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக செய்தியில் படித்தேன். அதாவது நீங்கள் எங்குமே சேமிக்கக் கூடாது என்கிறார்கள். சரி செலவழித்தால்தான் சந்தையில் பணம் புழங்கும் என்று சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்பணத்தை அவர்கள் நம்மிடம் திரும்பத் தந்தால்தானே செலவழிக்கவே முடியும். அரசு சொல்வது செலவழிக்கவும் கூடாது, சேமிக்கவும் கூடாதென்பதே. 12 லட்சம் வரையில் சம்பாதிக்கிறவர்களுக்கு வரியில்லை என்று மக்களவையில் சொல்லிவிட்டு அதே பகுப்பினருக்கு 10% வரியென்று ஆவணத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்கள் என்று தயாநிதி மாறன் விமர்சித்திருப்பது கவனிக்கத்தக்கது. இன்று இந்தியாவில் உள்ள 130 சொச்சம் கோடி மக்களில் 3 கோடி பேர்களே வருமான வரி செலுத்துகிறார்கள். அரசுக்கு வேண்டிய நான்கைந்து பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை கடுமையாக 12-14 மணிநேரம் உழைக்கும் மத்திய, உயர்மத்திய வர்க்கத்தை செலுத்த வைக்கிறார்கள். அதாவது, ஐந்து சதவீதத்திற்கும் கீழே உள்ளவர்கள் கார்ப்பரேட்டுகளின் சுமையைச் சுமக்கிறார்கள். மீதமுள்ள 95% மக்களின் பணத்தையும் மறைமுக வரி மூலமாகவும், விலைவீக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், கார்ப்பரேட் வரியைக் குறைத்து அதன் காரணமாக வாழும் செலவை அதிகமாக்கியும் பறித்துக் கொள்கிறார்கள். வரி ஏன் இந்தளவுக்கு அநியாயமாக இருக்கிறதென்றால் கடந்த 15 ஆண்டுகளில் கார்ப்பரேட் லாபியின் ஆற்றல் வலுத்துவிட்டது. அவர்கள் நேரடியாக அரசைக் கைப்பாவையாக்கி தம் விருப்பப்படி நடத்துகிறார்கள். வாக்களிப்பது நாம், ஆனால் அரசு செயல்படுவது அவர்களுக்காக. அதெப்படி தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் உலகம் முழுக்க ஏற்படும்போது பெருமுதலாளிகள் அரசை விட வலுவானவர்களாக வளர்ந்து உலகை தம் கைக்குள் கொண்டு வருகிறார்கள்? வளர்ச்சி என்பது நல்லதெனில் அது ஏன் மக்களுக்கு கெடுதியாக மாறுகிறது


இதைக் குறித்து விரிவான விவாதங்கள் மேற்கில் நடந்துள்ளன - ஜேம்ஸ் மேடிஸன் இந்த முதலீட்டிய அரசியல் ஆதரவுக் குழுக்கள் (special interest groups) மக்களாட்சி அமைப்பை கபளீகரம் பண்ணும் ஆபத்தைப் பற்றி ஆராயும்போது உலகில் எந்த அரசியலமைப்புச் சட்டத்தாலும் இவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை என்கிறார். அதற்குப் பரிகாரமாக அவர் மக்களவையில் பல்வேறுபட்ட மக்கள் பிரதிகள், குழுக்கள் இடம்பெறும்போது, அவர்களுடைய சமூக அதிகாரமும் செல்வாக்கும் அரசின் மீது அழுத்தம் செலுத்தி அரசியல் ஆதரவு நாடும் முதலீட்டிய பிரதிநிதிகளை, தரகர்களைப் பின்னுக்குத் தள்ளவும், அதிகாரத்தைச் சமநிலைப்படுத்தவும் கூடும் என்றார். ஆனால் நவீன யுகத்திலோ இந்த சமநிலையாக்கம் நிகழ்வதில்லை. ஒருசில பெருமுதலாளிகள் ஒன்று சேர்ந்து ஆளும் கட்சியினரை விலைக்கு வாங்கி சட்டங்களை வளைத்தும், வரியைச் செலுத்தாமலும், மோனோபொலி செய்தும் கட்டற்ற அதிகாரக் குழுமங்களாக மாறுகின்றனர். அரசு நினைத்தால் கூட அவர்களை எதிர்க்க முடியாத நிலை தோன்ற, மக்களாட்சியும் தேர்தலும் கேலிக்கூத்தாகின்றன. இதைப் பற்றி Scientific Research எனும் ஆய்விதழில் எழுதும் ஸ்டீபன் மெக்கீயும் க்வாங் யூவும் தொழில்நுட்ப யுகத்தில் தேச இறையாண்மைகள் பலவீனமாகி, மக்கள் குரலுக்கு ஆற்றல் இல்லாமலாகிட, பழைய முதலீடிய அமைப்புகள் காணாமல் போய் அவ்விடத்தில் புதிய பின்காலனிய பெருமுதலீட்டியம் தோன்றிட கார்ப்பரேட் தரகுக் குழுக்களின் செல்வாக்கு மக்களாட்சி அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டுகிறது என்கிறார்கள். அதாவது இணையமும் உலகமயமாதலும் மக்களாட்சியை தம் பெருவிரலால் நசுக்கும் தன்மை கொண்டவை. அடுத்து மானுட சமூகமே வலுத்தவன் பலவீனர்களை முறியடித்து மேலெழுகிற வேட்டை விலங்கு மனப்பான்மையைக் கொண்டது, இன்றைய புதிய பொருளாதாரச் சூழலில் இது தவிர்க்க முடியாதது என்கிறார்கள்.


ஆனால் வலுத்தவர்கள், சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைக்கும் நபர்களின் வெற்றியே பெருமுதலாளிகளின் வெற்றி என்று எனக்குத் தோன்றவில்லை. “மூலதனத்தில்மார்க்ஸ் சொல்வதைப் போல, பணம் எனும் பொருளே நம் முன்னுள்ள அநீதியை, மாய்மாலத்தைக் காணவிடாமல் தடுக்கும் திரைதான். பணமென நிலையற்ற மதிப்புள்ள, பொருண்மையற்ற அரூப மதிப்புள்ளபோதே சமூகத்தில் ஏற்றத்தாழ்வு பெருகி, பணமும் அதன்வழியாக அதிகாரமும் ஓரிடத்திலும் குவிந்து பெரும்பான்மையினர் அடிமையாவார்கள். அதைத் தடுக்க ஒரேவழி பணம், சொத்திற்கு ஒரு உச்சவரம்பைக் கொண்டு வருவதுதான். இதைப் பற்றி பெர்னாட் ஷா அன்றே சொல்லியிருக்கிறார்: “எனது அரசியல் செயல்திட்டத்தின் முதல் நோக்கமே செல்வத்திற்கு உச்சவரம்பைக் கொண்டு வருவது.” “ஒருங்கிணைக்கப்பட்ட (முதலாளிகளின்) குழுக்களின் பணத்தால் நடத்தப்படும் அரசு கும்பல் ஆட்சிக்கு நிகரானதுஎன்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெட்ல் கூறினார். “21ஆம் நூற்றாண்டில் முதலீட்டியம்நூலின் ஆசிரியர் தாம்ஸ் பிக்கெட்டி உலகளாவிய செல்வ வரி விதிப்பின் மூலம் செல்வத்தை மறுவினியோகம் பண்ணாமல் ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியாது என்று மென்மையான தீர்வை முன்வைக்கிறார். ஆனால் அதிக செல்வ வரி மட்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. முதலீடுகள் அயல்தேசங்களுக்குப் பாயக் கூடும். அதனால் அரசு உற்பத்தியிலும் வணிகத்திலும் கட்டாயப் பங்குதாரராக இருப்பதை சட்டம் வழியாக உறுதிப்படுத்துவதே மறைமுகமாக தனிநபர் சொத்து வரம்பை சாத்தியப்படுத்தி, கறுப்புப் பணத்தையும் ஒழிக்க உதவும். மெல்லமெல்ல வரியற்ற சமூகமாகவும் நாம் மாற முடியும்.


இது சாத்தியமா என்றால் ஆம் என்பேன். குவைத் நல்ல உதாரணம். அங்கு அரசின் 90% நிதி கெ.பி.ஸி எனப்படும் அரசின் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் இருந்தே வருகிறது. அவர்கள் மக்களிடமோ தனியாரிடமோ வரிவசூலிக்கத் தேவையில்லை. மற்ற பெருநிறுவனங்களான வங்கிகள், உள்கட்டமைப்பு கட்டுமானத்துறைகள், தொலைதொடர்பு நிறுவனங்கள் முழுமையாகவோ ஓரளவுக்கோ அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. குவைத் வலுவான மக்கள் நல அரசாகவும் உள்ளது. அங்கு அரசு தன் சொந்த ஊதியத்தினாலே மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவை, குடியிருக்க வீடுகளை பெரும் சலுகை விலையில் அளிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகமும், சிங்கப்பூர், சீனாவும் (இரு நாடுகளிலும் அதிக வரி இருந்தாலும்) கூட இப்படியானஅரச முதலாளியத்தின்உதாரணங்களே. முக்கியமான விசயம் என்னவெனில் இந்த நாடுகளில் அரசு முழுமையாக மக்களை தனியாரிடம் கைவிடவில்லை. மானியத்தின் வழியாக செலவில் பெரும்பகுதியை அரசே எடுத்துக்கொள்கிறது (இந்தியாவோ விரைவில் அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனைகளை மூடவோ பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கவோ துடித்துக்கொண்டிருக்கிறது). 


நாம் எங்கு சுதந்திரமும் பேச்சுரிமையும் அதிகம் என நினைக்கிறோமோ அங்கு மக்கள் அன்றாடச் செலவுகளுக்காக மூச்சுத்திணறிக்கொண்டிருக்கிறார்கள். எங்கு இவையெல்லாம் குறைவு எனப் பழிக்கிறோமோ அங்கு மக்களை அரசு நன்றாக கவனித்துக் கொள்கிறது. எனில் மக்களாட்சியின் கோளாறுதான் என்ன? அது யாருக்கானது?    


மேலும் தெரிந்து கொள்ள:


Why The U.S. Can’t End Poverty. CNBC. Youtube.com


Homeless Crisis: Middle-Class Americans on the Brink of Homelessness. Our 50 States. youtube.com


"Lobbying Is a Biologically Necessary Transaction Cost in a Democracy

written by Stephen P. Magee, Kwang-Yeol Yoo

published by Modern Economy, Vol.10 No.6, 2019


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...