முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"கால்கள்" நாவல் கிண்டில் பதிப்பு



"கால்கள்" என் முதல் நாவல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் விருப்பப்படி எழுதியது. அதன் கோளாறுகளும், நன்மைகளும் அதில் உண்டு. வெளியான முதல் ஆண்டு இது பரவலாக இலக்கிய உலகினுள் படிக்கப்பட்டது என்னை ஆச்சரியப்படுத்தியது. 2014ஆம் ஆண்டில் சாகித்ய அகாடெமி யுவ புரஸ்கார் இதற்கு கிடைத்தபோது இன்னும் வெகுவாக ஆச்சரியப்பட்டேன்.
"கால்கள்" நாவலுக்கு கிண்டில் பதிப்பு வர வேண்டும் என வாசக நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான்கு விதங்களில் இது உதவியானது:
1) "கால்கள்" எப்போதுமே அச்சில் இருக்காது. காலியாகும்போது திரும்ப அச்சுக்கு வர நேரம் எடுக்கும். ஆகையால் கிண்டில் பதிப்பு உபயோகமானது.
2) விலை - இப்போதைக்கு 250 ரூ வைத்திருக்கிறேன். இது அச்சு நூல் விலையை விடக் குறைவே. அடுத்த மாதத்தில் இருந்து அவ்வப்போது விலையை மேலும் குறைக்கலாம் என இருக்கிறேன். அதிக விலை கொடுத்து வாங்காதோருக்கு நாவலைக் கொண்டு சேர்க்க இது உதவும்.
3) பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அச்சுநூலில் படிக்க முடியாது - அவர்களுக்கு கிண்டில் பதிப்பே ஏற்றது. கிண்டில் பக்கங்களை படிக்கும் மென்பொருளை பயன்படுத்தி ஒலிநூலாக இதைக் கேட்டுக் கொள்வார்கள்.
4) வெளிநாடு-வாழ் வாசக அன்பர்களுக்கும் குறைந்த செலவில் உடனடியாக வாங்கிப் படிக்க இது உதவும்.

இப்போதைக்கு கிண்டில் அன்லிமிட்டட் எனும் விருப்பத்தேர்வையும் கொடுத்திருக்கிறேன். நூலகத்தில் கடனுக்கு எடுப்பதைப் போல தரவிறக்கி சில நாட்கள் படித்துக் கொள்ளலாம். இது சற்றே பெரிய நாவல் என்பதால் அப்படி என்னதான் இருக்கிறது என நூறு பக்கங்களை முதலில் படித்துப் பார்க்க விரும்புவோருக்கு இது ஏற்றது.

கிண்டில் பதிப்பின்போது நாவலைத் திருத்தி அதன் வடிவத்தை மாற்றிவிடலாமா என்றும் யோசித்தேன் - ஆனால் அது நியாயமாக இருக்குமா, அதற்கு அவகாசம் இருக்குமா என யோசித்து அம்முயற்சியைக் கைவிட்டேன். ஆனால் எதிர்காலத்தில் ஒரு குறும்பதிப்பைக் கொண்டு வருவேன். அப்போது இந்நாவலை வேறொரு வடிவில் மொழியில் எழுதிப் பார்ப்பேன். ஆங்கிலத்தில் முன்பு செவ்வியல் நாவல்களுக்கு அப்படியான வடிவங்கள் பிரசித்தமாக இருந்தன. இப்போது இல்லை.

இப்போதைக்குப் படியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

நாவலை வாங்குவதற்கான தொடுவழி: https://www.amazon.in/dp/B0F3PJYNTK

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...