எனக்கு தமிழில் மருத்துவக் கல்வியை வழங்க ஓரளவுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. மருத்துவத்தில் ஆய்வு செய்வதை, தேர்வு எழுதுவதை சற்றே சுலபமாக்கும். கலைச்சொற்கள்? இப்போதைக்கு ஆங்கில கலைச்சொற்களைக் கலந்து பாடநூல்களை உருவாக்கலாம். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அனைத்து ஆங்கில நூல்களையும் நிமிடத்தில் தமிழாக்கலாம். புனைவுக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு மொழியாக்கம் சரிவராது, ஆனால் அபுனைவுக்கு, அதுவும் தகவல்சார்ந்த நேரடி மொழியாக்கத்துக்கு அது ஏற்றது. ஆனால் ஆசிரியர்கள் இதற்குப் பழகியிருக்க மாட்டார்கள் என்பதால் மெல்லமெல்ல கொண்டு வரலாம். எதிர்காலத்தில் வெருள வைக்கும் ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்து நேரடியாகத் தமிழில் படிப்பது மத்திய வர்க்க, கீழ்வர்க்க சிறுநகர மாணவர்களுக்கு உதவும். மருத்துவர்களும் தமிழில் விளக்கினால் நோயாளிகள் புரிந்துகொள்வார்கள்.
மோடி எதைச் சொன்னாலும் திட்ட வேண்டியதில்லை. ஆங்கிலமே உலக மொழி, அதைக் கொண்டே நாம் வளர்ந்தோம் என அதை மிகைப்படுத்த தேவையில்லை. ஆங்கிலம் வழி படித்து வெளிநாட்டில் பணியாற்ற விரும்புவோரும் உள்ளூரில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்புவோரும் அவரவருக்கு ஏற்ப பயிலும் மொழியைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தால் நல்லது. இன்னும் சொல்லப் போனால் தமிழ்வழி படித்த ஒரு மாணவரால் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் முடியாது என்று தீர்மானிக்க முடியுமா? ஆங்கில வழியில் படித்தோர் எல்லாரும் இங்கு ஷேக்ஸ்பிராக இருக்கிறார்களா? இரு மொழிகளில் ஒரு திறம்படைத்த மருத்துவரால் இயங்க முடியாதா? அப்படியே இரு சாராருக்கும் வேறுபாடு தோன்றினால், தமிழில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் மருத்துவப் பணிகளில் அரசு ஒட இதுக்கீடு தந்தால் அது சமத்துவத்தை ஏற்படுத்தும்.
Comments