முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்கள் - ஆர். அபிலாஷ்

 Art Break: Blindness Doesn't Hinder Visual Artists | Newcity Art


கடும் தலைவலியினூடாக அவனுக்குத் தோன்றியது

கண் மருத்துவர் 

சுமாராகத்தான் இருக்கிறார் என்று.

அறை இருட்டு.

பல்லைக் கடித்து முனகும் ஏஸி எந்திரம்.

ரத்தம் வடிந்த தம் வெளிறி

உடலின் வழியாக ஆன்மாவைப் பாய்ச்சும்

நீள்சதுரக் குழல் விளக்குகளின்

ஆத்ம தரிசனம்.

வலி தன் மீது 

ராட்சதத் துளை தோண்டும் எந்திரத்தைப் போல

இறங்கி பூமிக்குள் பாய்வதாக

அவனுக்குத் தோன்றியது.

சுற்றிலும் வெளிச்சச் சிறகுகள் பறக்க

அமானுஷ்ய தோற்றங்கள்.

மரணம் நெருங்கிவிட்டதாகவும்

அன்றாடத்தின் துன்பங்களில் இருந்து விடுதலை

கிடைக்கப் போகிறதென ஒரு நம்பிக்கை,

அதைக் குறித்த அவநம்பிக்கை அடுத்து,

தப்பிக்கவே முடியாது எனும் 

எச்சரிக்கை சமிக்ஞைதான் இவ்வலி.

அம்மாவின் கையில் இருந்து பறிக்கப்படும்

குழந்தையின் கதறல்கள்.

அம்மாவிடம் செல்வதே 

முழுமையான நிம்மதியான துயில்.


கண்மருத்துவர் மீண்டும் அவனைத் தனது

மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து நேராகப் பார்க்கக் கேட்டார்.

அவர் தன் காதை கவனிக்கச் சொன்னார்.

இடக்காது.

உருகிய சுடர்.

இருளைத் திரையென அகற்றி 

முழுமையாகி நிலைகொள்ளும் சுடர்.

மலைமுகட்டில் எழுந்து 

பூமியை உயிர்கொள்ள வைக்கும் சுடர்.  

சிறிய மென்மையான சுடர்.

தெய்வத்தின் காது.

உலகத்துப் பேரழகின் மொத்த வடிவம்.

பொன்மஞ்சள் மயிர்கள் துல்லியமாகத் தெரிகின்றன

சிறு காது துளையின் அழகு.

அவனுக்கு அக்கணமே 

உலகின் மொத்த அன்பையும் அழகையும் தான்

அள்ளிக்கொள்வதாகத் தோன்றியது.

அவர் அடுத்தடுத்து ஸ்லைடுகளை மாற்றினார்.

தங்கத்தால் இழைக்கப்பட்ட காது

தன் வண்ணங்களையும் வடிவத்தையும் இழந்து

அவனைத் தடுமாற வைக்கிறது.

ஒரு பெண்ணை அடையும்போது

மெல்லமெல்ல இப்படித்தான் சிதைக்கிறோம்,

சிதைத்தலே ஸ்பரிசத்தின் பார்வை.


பரிசோதனை முடிந்தது

சோதனை லென்ஸ்களை

 அணியச் செய்து

தெளிந்த தெளிவற்ற பிம்பங்கள் காட்டப்பட்டு

அவனுக்கான சிகிச்சையும் தீர்வுகளும்

முடிவாகின்றன.


மறுசோதனைக்கான நாள்.

பழைய தலைவலி இல்லை.

மிதக்கும் தேவதைகள் 

துணைவரவில்லை.


கண்ணாடி அணிந்த கண்களுக்கு

பந்துகளாகத் துள்ளி வரும் 

தினசரி பிம்பங்களின் வண்ணங்கள் 

அள்ளிக் கொஞ்சத் தோன்றும் உலகு.

எவ்வளவு ரசித்தும் போதாத அழகு.

அதன்பிறகு 

அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் 

அழகில்லை என்றானது.

துல்லியமாகத் தெரிவதே அழகெனின் 

அழகின் பொருளென்ன?

இலைகள் விலகியதும்

ஒரு மலர் தெரிகிறது.

அது அங்கு இருக்கிறது,

இருந்தால் தான் என்ன?


அன்றாடத்தின் சுமையுடன் 

அவன் அடுத்தமுறை மருத்துவமனைக்கு வந்தபோது

பெண் மருத்துவர் சற்று மங்கலாகத் தெரிந்தார்.

வெளியுலகில் தன்னைக் கண்டடைந்து

களைத்துத் திரும்பியவனை வரவேற்கும் முதிர்ச்சி.

அந்நியமாக இயல்பிழந்து போன அவர் மீது

அவனுக்குத் தோன்றும் பயம்.

ஆறுதலாக அணைத்து

காலத்துயிலில் பொதிந்துகொள்ளும் கரங்கள் 

மீளமீளத் தோன்றும் சுழல் நாட்காட்டிக்குள்

அவனைத் தள்ளிவிடுகின்றன.


கண்ணில் கடுப்பு, தலைவலி, தெளிவின்மை,

 இரவிலும் பகலிலும் வாசிப்பதில் சிரமம் ... 

விசாரித்த பின்னர்

அவனை மோவாவை சிறிய வளைவான தட்டில் வைத்து 

தன் காதைப் பார்க்கச் சொல்கிறார்.


அவன் தன் மனத்தின் கண்ணாடியை எடுத்து

அணிந்துவிட்டுப் பார்க்கிறான்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...