முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (ஈ)

 12) காலை நான்கு மணிக்கு எழுந்து கிளம்புவதே திட்டம். ஆனால் நான்கு மணிக்கு எழுந்ததும் தூக்கம் கண்ணை அழுத்தியது. ஆறே முக்கால் ஆகியது நாங்கள் புறப்பட. கனகபுரா-மலவள்ளி சாலை குறுகியது என்றாலும்அழகானது. குறைவான போக்குவரத்து. இருமருங்கும் மரங்கள், குன்றுகள் அடுத்தடுத்து வந்தன. ஏறி இறங்குகிற சற்றே மலைப்பாங்கான பாதை. பின்னிருந்து ஒலிப்பானை முழுக்கி அச்சுறுத்தும் பெருவாகனங்கள் இல்லை, விர்ரெனத் தாண்டிப் போகும் அசுர பைக்குகள் இல்லை, பறவைகள் நமக்கு மேல் பறந்து போனால் நாம் அதே வேகத்தில் கீழே பறந்துபோவதான உணர்வு வரும். அவெஞ்சரில் எந்த குலுக்கமும் இல்லாமல் மிதந்து போவது இன்னொரு சுகம். மலவள்ளியை நெருங்கியதும் பார்க்க அப்பகுதியே ஊட்டியைப் போலத் தோன்றியது. எந்தவொரு இடைஞ்சலும் இல்லாத பயணம். மைசூரை நெருங்கியதும் போக்குவரத்து மோசமாகத் தொடங்கியது. மணி அப்போது12: 30. ஒன்றரை மணிநேரம் தாமதம்.


13) நாங்கள் மூன்று முறைகள் ஓய்வுக்காக வண்டியை நிறுத்தியிருந்தோம். தொடர்ந்து பயணித்தால் அலுப்பும் உடல்வலியும் ஏற்படும் என்பதால் இதை முன்கூட்டியே முடிவு செய்திருந்தோம். இன்னொரு முக்கியமான பிரச்சினை தூக்கம். தூக்கச் சடவு நான் பைக்கை ஓட்டும்போதே அதிகமானது. அடிக்கொரு தரம் கண்கள் தாமாகச் சொருகின. அதனால் காபி, தேநீர் எனக் குடித்து வேடிக்கை பார்த்து இயல்பானபின் ஓட்டுவது, கண்கள் களைத்ததும் வண்டியை நிறுத்துவது என்றிருந்தேன். கடைசியாக வேகம் - முதல் 500 கிலோமீட்டர்களின்போது 60 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டக் கூடாது. அதனால் சாலையில் இடமிருந்தாலும் மன்மோகன் சிங் உரையாற்றுவதைப்போலத்தான் ஓட்ட வேண்டியிருந்தது. ஸ்கூட்டரிலே 80-90க்கு வேகத்தைத் திருகும் என் கையைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன். ரொம்ப மெதுவாகப் போகும்போது வண்டியோட்டும் சுகமும் கிடைப்பதில்லை. நாம் வண்டியோட்டும்போது வண்டியின் மனநிலையை நம் கால்கள், இடுப்பு வழியாக அதன் அதிர்வுகள், சப்தம், பொதுவான உணர்வு வழியாக உணர்வோம். மெதுவாகப் போகும்போது என் வண்டி ஏதோ டியூஷன் வகுப்பில் உட்கார்ந்து மனனம் செய்யும் சிறுவனைப் போல உணர்வதை, அடிக்கடி கொட்டாவி விடுவதை உணர முடிந்தது. பொறு, பொறு உன் தன்னமைதல் காலம் முடியும் என அதனிடம் அரைமனதாகச் சொன்னேன். பிடிக்காத மனைவி தேநிலவுக்கு வருவதைப் போன்றேம்ம்ம்ம்என்றே வந்தது. இம்மூன்றும் சேர்ந்து தாமதாக்கின.


14) மைசூரில் சுற்றுவிட்டு மதியமே அங்கிருந்து கிளம்பத் திட்டம். மாலை 7 மணிக்குள் பெங்களூர் வந்துவிட வேண்டும். ஆனால் விதி விடவில்லை. என் பைக்கின் தலைப்பகுதியில் இருந்து ஏதோ ஒரு அதிர்வுச் சப்தம் வந்தபடி இருந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகே ஒரு போல்ட் உடைந்த பல்லைப் போல ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது. சரி அதை முறுக்குவதற்கு மெக்கானிக்கைத் தேடினால் கிடைக்கவில்லை. ஒரு பஞ்சர் கடையில் ஒரு தாத்தா ராமரைக் காத்திருந்த அகலிகையைப் போல சமைந்து இருந்தார். நான் அழைத்ததும் நம் மோடி கம்பீரமாக இருப்பதாக நினைத்து மேடையில் எழுந்து வருவதைப் போல வந்து மிகக் கவனமாக ஆராய்ந்து மிகமிக மெதுவாக போல்ட்டை முடுக்கிவிட்டுபோல்ட்டை மாற்றணும், ஆனால் இங்கே முடியாதுஎன்று அனுப்பினார். வேறெங்கும் அதைச் செய்ய ஆள் இல்லை. இது மைசூரின் பொதுவான நிலையா அல்லது வார இறுதியென்பதாலா என்று தெரியவில்லை. அப்படியே கிளம்பி வந்தோம்

வரும் வழியில் இருட்டத் தொடங்க எங்குமே தெருவிளக்கு இல்லையா நான் பிரேக் எடுக்க விரும்பவில்லை (பயம்தான்). ஆனால் பின்பக்கம் கூர்மையாக வலியெடுக்க வேறுவழியின்றி வனப்பகுதியின் இடையே தெரிந்த ஒரு கிராமப் பகுதியில் ஒரு பெட்டிக் கடையின் முன் நிறுத்தினேன். அங்கே மிட்டாயும் பிஸ்கட்டும் நிழலைப் போல ஒரு மனிதரும் அவரது காலடியில் ஒரு நாயும் இருந்தனர். நான் கடலை மிட்டாய் வாங்கி கடித்துக்கொண்டு காலையிலே கொண்டு வந்திருந்த கருங்காப்பியில் மீதமிருந்ததைக் குடித்தேன். பல்லவி தனக்கு முருங்கைக் கீரை பறிக்க வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். பெங்களூரில் அப்படியெல்லாம் கேட்டால் சுலபத்தில் கொடுக்க மாட்டார். தண்ணீருக்கும் போக்குவரத்துக்கும் அடுத்தபடியாக அவர்கள் தம் உயிராகக் கருதுவது இந்த முருங்கை மரங்களைத்தாம். முருங்கைக் கீரையைக் கொஞ்சம் பறிச்சிக்கவா என்று பல்லவி அங்கு பலரிடமும் கூச்சமில்லாமல் கேட்டிருக்கிறாள். அவர்கள் தவறாமல் சொல்வார்கள், “என்னது முருங்கைக் கீரையா, இல்லா, எங்கள் உயிரைக் கேட்டாலும் கொடுக்கிறோம், முருங்கைக் கீரை கேட்காதீங்கஎன்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த கடைக்காரர்கள் தமிழர்கள். அவர்கள் பேசியது ஒருவித மலையாள வாடையுள்ள, பழங்குடித்தன்மையுள்ள தமிழ். பல்லவி அவர்களிடம் தெனாலி கமல் போல் பேசி அவர்களைச் சிரிக்கவைத்து அவர்களிடம் உள்ள நாயைப் பற்றி உரையாடி பத்தே நிமிடங்களில் உற்ற குடும்பத் தோழியாகி அவர்கள் வீட்டுக்கே போய் முருங்கைக் கீரை பறித்துக் கொண்டு வந்துவிட்டாள். கடைக்கார அம்மாஅடுத்தவாட்டி வீட்டுக்கு வந்து சாப்டிட்டுப் போங்கஎன்று மூன்றுமுறைகள் வாயெல்லாம் சிரிப்புடன் சொன்னார். போகும்போது நான் கேட்காமலே பல்லவி என்னிடம் சொன்னாள், “நான் முருங்கைக்கீரைக்காகத்தானெ அவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தேன்னு நினைக்கிறே?” “சேச்சே, நீ பேச்சுக்கொடுக்கத்தான் முருங்கைக் கீரை வாங்கினேன்னு நினைக்கிறேன்.” “ரெண்டுமே இல்ல, சட்டுன்னு தோணிச்சு கேட்டுட்டேன், அவங்களும் சந்தோஷமா கொடுத்தாங்க.” ஜென்ஸி போராட்டம் நடக்கும் நேபாளத்தில் எல்லாரையும் சமாளித்து புதிய பிரதமராகும் தகுதிகொண்டவள் அவள் என அத்தருணத்தில் புரிந்துகொண்டேன்இப்படிக் கீரையெல்லாம் வாங்கிக் கிளம்பியபோது நன்றாக இருட்டிவிட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...