முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நரேட்டிச் செட்டிங் - ஊடகங்களின் தன்னழிவுப் பாதை

 


இன்று ஊடகங்கள், குறிப்பாக செய்தி ஊடகங்கள், ஒருவித தற்கொலைப் பாதையில் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுக்குச் செய்தியில் ஆர்வமுள்ளது. ஆனால் அவர்களுக்கு பொய்ச் செய்திகளில் விருப்பதில்லை. பொய்ச் செய்தி என்றால் பிரச்சாரம். பொய்ச்செய்தி என்றால் நரேட்டிவ் செட் செய்வது. என்னைப் பொறுத்தவரையில் இதுதான் இன்று செய்தி ஊடகங்களை உள்ளிருந்து அரிக்கிறது. நமது பெரும்பாலான விவாதங்களைப் பாருங்கள் - அவை ஒன்று ஆளுங்கட்சிக்காகப் பிரச்சாரம் செய்ய உத்தேசிக்கப்படுபவை. அல்லது மூன்றாவது அணிக் கட்சிக்காக நரேட்டிவ் செட் செய்பவை. சிலநேரங்களில் ஆளுங்கட்சியில் உள்ள கூட்டணிக் கட்சியினரை உடைப்பதற்காக நடத்தப்படுபவை. ஒரு சின்ன வட்டத்துக்குள் நடக்க வேண்டிய அதிகாரப் பகிர்தலுக்கான சமூக அழுத்தத்தை ஏற்படுத்த இன்று விவாதங்கள் நடத்தப்படுகின்றன, அரசியல் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. மக்கள், குறிப்பாக இளைஞர்கள், வெளிப்படையாகவே இதைப் பற்றிப் பேசுவதை பொதுவிடங்களில் கேட்கிறேன். இந்தச் சேனல் ஆளுங்கட்சி உடையது, அது பாஜகவின் சேனல், இது விஜய்யின் சேனல். இதைவிட பெரிய அவமானம் இல்லை. கேட்க சொப்பன சுந்தரி ஜோக் நினைவு வந்தது.

இன்று இத்'தொழில் முடிவுகள்' ஊடகங்களுக்கு வருமானம் கொண்டு வரும். ஆனால் மக்களிடம் எந்தச் செல்வாக்கும் இல்லை எனும் நிலை வரும்போது இந்த தொழில் முதலீட்டாளர்களும் கைவிரிப்பார்கள். அப்போது ஊடகங்களை ஆதரிக்க மக்களும் இருக்க மாட்டார்கள். முழுமையாக சினிமாச் செய்திகள். ரியாலிட்டி ஷோ, வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் என இலக்கை மாற்ற வேண்டி இருக்கும்.
கொஞ்சம் நேர்மையும் பொறுமையும் இருந்தால் எந்த சார்பும் இன்றி, நரேட்டிவ் செட் செய்யாமல் உண்மைத்தன்மை உள்ள விவாத நிகழ்ச்சிகளையும் செய்தித் தொகுப்புகளையும் இன்றும் நம் அலைவரிசைகளும் இதழ்களும் தர முடியும். இதழ் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது - ஒரு புலனாய்வு இதழைத் தொடர்ந்து படித்து வந்தேன். அவர்கள் ஒரு சாமியாரை அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதி வந்தார்கள். அதன் பிறகு இன்னொரு புலனாய்வுப் 'புலி' (அவரும் வாடகைப் புலிதான்) ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் பணம் வாங்கிக் கொண்டு குற்றங்களைப் பேசாமல் இருக்கும் இதழ்களின் பெயர்கள் இருந்தன. மேற்சொன்ன இதழ் அதே சாமியாரிடம் பணம் வாங்கியதைச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் ஏன் 'அம்பலப்படுத்துவதை' ஒரு கட்டத்தில் நிறுத்தினார்கள் எனப் புரிந்து கொண்டேன். அவர்கள் செய்வது அம்பலப்படுத்தல் அல்ல 'மிரட்டிப் பணம் வாங்கும் தொழில்'. அதன் பிறகு அவ்விதழை நான் சந்தேகத்துடனே படிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் நம்பகத்தன்மை இல்லாமல் ஆகிறது.
நம்பகத்தன்மைதான் உலகின் மிகச்சிறந்த முதலீடு, பணம் அல்ல. நம்பகத்தன்மையை விற்றுப் பணம் வாங்கி ஒன்றும் செய்ய முடியாது. அது ஒருவித தற்கொலை.
பின்குறிப்பு: பேஸ்புக்கில் நான் வெறுப்பது கட்சி சாரா 'கட்சி எழுத்தாளர்களைத்தான்'. இவர்கள் பேஸ்புக்கை ஏதோ கட்சி அலுவலகம் போல, பிரச்சார மேடை போல மாற்றி விடுகிறார்கள். பேஸ்புக்கின் நோக்கம் சொந்தக் கருத்துக்களை எழுதுவது, அனுபவங்களைப் பகிர்வது, தொடர்புவலையை ஏற்படுத்துவது, சுய-முன்னெடுப்பைச் செய்வது, சொந்தச் சரக்கைச் சந்தைப்படுத்துவது. தனிப்பட்ட தளத்தில் இருந்து பொதுத்தளத்திற்குப் போனதும் பேஸ்புக் போரடிக்கத் தொடங்குகிறது. மக்களுக்கு எதை எழுதினாலும் யாராவது ஒருவரின் உணர்வுகளைக் காயப்படுத்துவோமோ, நம்மை யாராவது gas light செய்வார்களோ எனும் பயம் வருகிறது. ஏனென்றால் மேற்சொன்ன கட்சிசாரா கட்சிக்காரர்கள் அரசியல் சரித்தன்மையை வைத்து ஒரு போலி நாடகம் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். பணமே வாங்காமல் அவர்களும் நரேட்டிவ் செட் செய்கிறார்கள். இவர்கள் இன்னும் ஊடுருவாதது நம் வீடுகளுக்குள், நம் படுக்கை அறைக்குள் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...