முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சைட் டிஷ் பையன்



வாடிக்கையாளர் 1: “டேய் தம்பி இங்க வாடா. எவ்வளவு நேரமா கூப்பிடறது?

பையன்: என்னண்ணே? சொல்லுங்க”

வாடிக்கையாளர் 1: “நீ இல்ல நீங்க அவர் இல்ல. உங்களைத் தானே அவரு பத்திரிகை பேட்டியில தமிழின் சிறந்த எழுத்தாளர்னு சொன்னாரு. நீங்க என்ன இங்க?”

பையன் (தலையை சொறிந்தவாறு): “அதுவா அண்ணே... தலைவரு அடிக்கடி குவாட்டரோட இங்க வந்து சைட் டிஷ் இல்லாம உட்கார்ந்திருப்பாரு. நான் எல்லா டேபிள்ள இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா சைட் டிஷ்ஷை ஆட்டைய போட்டு தலைவருக்கு கொண்டு கொடுப்பேன். பதிலுக்கு தலைவர் எங்கிட்ட உலக இலக்கியம், உலக இசை, உலக செக்ஸ் எல்லாத்த பத்தியும் பேசுவாரு.”

வாடிக்கையாளர் 1: “தலைவருக்கு புடிச்ச சைட் டிஷ் என்னய்யா?”

பையன்: “மிக்சர்ணே”

வாடிக்கையாளர் 1: “அவரு கூட சேர்ந்து உரையாடி நீ பெரிய எழுத்தாளர் ஆயிட்டேப்பா. ஆனா நீ எழுதினது ஒண்ணத்தையும் நான் படிச்சதில்ல. நான்னு இல்ல எவனுமே படிச்சதா தெரியல. ஆனா ஊரெல்லாம் இதைப் பத்தியே பேசிக்கிட்டு கெடக்கானுவ. நீ எழுதினது எங்க வந்திருக்கு? இப்ப எதாவது எழுதி வச்சிருக்கியா?”

பையன் ஒரு கிழிந்த சிகரெட் அட்டையை காட்டுகிறான். அதன் பின்புறத்தில் “ரெண்டு சில்லி சிக்கன், ஒரு பக்கோடா, ரெண்டு பாக்கெட் மிக்சர், ரெண்டு கடலை, மூணு எம்.ஸி குவார்ட்டர், ரெண்டு பியர்” என முத்து முத்தான கையெழுத்தில் இருக்கிறது.

வாடிக்கையாளர்: “நல்ல அழகான கையெழுத்துப்பா. தலைவர் சும்மாவா உன்ன பாராட்டுவாரு. ஆனா இது மூலமா நீ என்ன சொல்ல வாறேன்னு புரியல. தலைவர் நாவல் மாதிரி ஒரே குழப்பமா இருக்கு”

பையன்: “நான் அப்பிடியெல்லாம் யோசிக்கிறதில்லண்ணே. வரவங்க கேட்கிறதை அப்பிடியே எழுதி வச்சிருவேன். சின்ன தப்பு கூட வராது. தலைவர் இதையெல்லாம் தொகுத்து நாவலா போடலாமுன்னு ஒரு பதிப்பாளர்கிட்ட கூட்டிகிட்டு போனாரு என்னை. ஆனா அவரு என்னை பார்த்ததும் யோசிக்காம ரெண்டு லார்ஜு, ஒரு ஹால்ப் தந்தூரின்னுட்டாரு. எனக்கு வருத்தமா போச்சுண்ணே

அப்போது பல திசைகளில் இருந்தும் குரல்கள்

வாடிக்கையாளர் 2: “டேய் எவ்வளவு நேரமா கூப்பிடறதுடா, வாடா இங்க”

வாடிக்கையாளர் 3: “எவண்டா அவன் த்தா மிக்சர் கேட்டு எவ்வளவு டைம் ஆவுதுடா.”

வாடிக்கையாளர் 4: “வாடா இங்க உன் மண்டைய உடைக்கிறேன். கூலிங்கா பீர் கேட்டேனா இல்லியா. இதான் உங்கூர்ல கூலிங்கா?”

வாடிக்கையாளர் 1: “நிறைய பேர் உன்னை தேடுறாங்க போல. ரொம்ப பிரபலமாயிட்டியேப்பா”

பையன் (தலையை சொறிந்தவாறு): “அதுவா அண்ணே! அந்த “பத்து கேள்விகள் பத்து பதில்களில்” தலைவர் என்னைப் பத்தி சொன்னதில இருந்தே இங்க கடையில கூட்டம் அள்ளுதுண்ணே. எல்லா வயசான எழுத்தாளர்களும் வந்து உட்காந்துகிட்டு சைட் டிஷ் கொண்டா அதை கொண்டா இதை கொண்டான்னு சாவடிக்கிறானுங்க. எத்தன பேருக்கு தான் நான் அட்டைய போட்டு சைட் டிஷ் கொடுக்கிறது” (பிறகு வெளியே பார்த்து) “டேய் இருங்கடா. என்னால சமாளிக்க முடியலடா ஸ்ஸ்ஸ்ப்பா”

வாடிக்கையாளர் 1: இதுக்கே இப்பிடி அலுத்தா எப்பிடி? உனக்கு விருது கொடுக்க போறதா வேற பேசிக்கிறாங்க...

பையன் தலைதெறிக்க ஓடுகிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...