முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா அடுத்த உலகக் கோப்பை வெல்லுமா?


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றியை ஒட்டி சச்சின் இந்திய அணியால் அடுத்த உலகக் கோப்பையை வெல்ல முடியும் என கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மட்டையாட்டம் வலுவானது. பந்து வீச்சு சுமார். களத்தடுப்பு செம கூர்மை. ஆனால் உலகக் கோப்பை ஒரு நீண்ட தொடர். அதில் தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். எல்லாவிதமான பந்து வீச்சுகளையும் சமாளிக்க வேண்டும். தொடர் முழுக்க நன்றாக ஆடி விட்டு ஒரு ஆட்டத்தினால் இறுதி சுற்றுக்கு போக முடியாத அணிகள் உண்டு.

போன உலகக் கோப்பையின் போதும் இதே போல் தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா வெல்லும் என்றார்கள். இரண்டுமே பிரமாதமாய் பந்து வீசின. ஆனால் போக போக எரிபொருள் தீர்ந்து புகை விட்டன. எனக்கு இலங்கை மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் இறுதிச் சுற்றில் அழுத்தம் தாளாமல் சட்டென ஸ்தம்பித்தார்கள். மேலும் அணித்தேர்விலும் தவறு பண்ணினார்கள். பாகிஸ்தான் வழக்கம் போல் எப்போது கழன்று விழுந்தார்கள் என தெரியாதபடி காணாமல் போனார்கள். ஆனால் இந்த நான்கு அணிகளுமே உலகக் கோப்பைக்கு முன் அட்டகாசமாய் ஆடி வந்தார்கள். ஆனால் ஒரு நீண்ட ஆட்டத்தொடரில் இந்த சமீபத்திய ஆட்டநிலை எல்லாம் எடுபடாது.
இரண்டு விசயங்கள் வேண்டும். சிறந்த தலைமை. அது இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கையிடம் உள்ளது. மெல்ல மெல்ல ஆட்ட உச்சத்தை அரை இறுதியின் போது அடைய வேண்டும். போன உலகக் கோப்பையில் அதை இந்தியா செய்தது. இரண்டு அல்லது மூன்று வீரர்கள் தொடர்ந்து ஜொலிக்க வேண்டும். 92 உலகக் கோப்பையில் இம்ரான், இன்சமாம், 96இல் அரவிந்தா, ஜெயசூர்யா போல. போன உலகக் கோப்பையில் கூட யுவ்ராஜும் சஹீரும் தொடர்ந்து அணியை காப்பாற்றினார்கள். இந்த தொடர் ஆட்டநாயகன்கள் உலகக் கோப்பையில் ரொம்ப முக்கியம். இந்தியாவுக்கு இம்முறை அப்படி ஆட யார் இருக்கிறார்கள்?அதுவும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில்?
துள்ளலான ஆடுகளங்களில் ரெய்னா எப்படி ஆடுவார் என உறுதியாக தெரியவில்லை. கோலி நன்றாக ஆடினால் நல்லது. ரஹானே கூட ஆடலாம். ஆனால் நாம் ஒட்டுமொத்தமாக எல்லா மட்டையாளர்களின் பங்களிப்பையும் நம்பி இருக்கிறோம் எனலாம். போன தடவை போல் அனுபவமுள்ள நட்சத்திரங்கள் இந்த அணியில் இல்லை. பந்து வீச்சில் ஒருவர் கூட இல்லை.
ஆக இந்தியா முற்றிலும் வேறு விதத்தில் ஒருமித்த அணியாக தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும். 96இல் இலங்கை ஆடியது போல். அது தான் ஒரே வாய்ப்பு. மனதளவில் திணறாமல் இருந்தால் தென்னாப்பிரிக்க நிச்சயம் வெல்லலாம். உலகின் சிறந்த மட்டையாட்ட அணி அவர்களுடையது. ஆஸ்திரேலியாவின் மட்டையாட்டமும், ஒருநாள் வடிவில் பந்து வீச்சும் சுமார் தான். அதனால் அவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கவில்லை. நியுசீலாந்த் கூட நன்றாக ஆட வாய்ப்புண்டு. ஆனால் ஒரு பெரிய தொடரை வெல்லும் தன்னம்பிக்கையும் அனுபவமும் முக்கியம். அது அவர்களிடம் இல்லை. இலங்கை, பாகிஸ்தான் இரண்டின் பந்து வீச்சும் நன்றாக உள்ளது; ஆனால் மட்டையாட்டம் மழைகாலத்தில் அப்பளம் போல் இருக்கிறது. இங்கிலாந்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இம்முறை உலகக் கோப்பை ஒருமாதிரி சமநிலையாய் சராசரியாய் போகும் என நினைக்கிறேன். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா தவிர பிற அணிகள் ஒரே போல் இருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை சொல்லித் தரும் பாடம் எதையும் ஊகிக்க கூடாது என்பது. என்னதான் காதலன் என்றாலும் கல்யாணம் ஆனதும் கணவன் அல்லவா! அது போல் என்னதான் நன்றாக/மோசமாக ஆடியிருந்தாலும் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் அணிகள் மாறி விடும். வேறு ஏதோ ஒரு மேஜிக் நிகழும். பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...