பெரியாரிஸ்டுகளுக்கு இரண்டு இயல்புகள் உண்டு. பேச்சின் போது மைய சாதிகளை மயிலிறகால் வருடி விடுவார்கள். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் “பார்ப்பனிய சதி” என்பார்கள். இன்னொன்று இந்து மதத்தை பழிப்பதற்காக புராணங்கள் கதை என்றும், கடவுள்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றும் கூறுவார்கள். நேற்றைய உயிர்மை அரங்கில் வெ.மதிமாறனின் பேச்சு அப்படித் தான் இருந்தது. அவை அவருடைய கருத்துக்கள், நம்பிக்கைகள், தாராளமாய் அவர் அவற்றை எடுத்தியம்பலாம். ஆனால் எனக்கு விசித்திரமாய் பட்டது என்னவென்றால் தொண்ணூறுகள் துவங்கி அதிகாரம், ஒழுக்கம், மொழியியல், பின் அமைப்பியல் சார்ந்து தமிழில் பேசப்பட்ட எந்த புது கருத்தியலையும் அவர் சீண்டியே பார்க்கவில்லை என்பது.