முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு: மாற்றங்களும் எதிர்பார்ப்பும்

Image result for smriti irani
தூக்குடா ’நெட்’டை

சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை செய்தது: இனி கல்லூரி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கிறவர்களுக்கு யுஜிசி நெட் கட்டாயத் தகுதி அல்ல. இங்கு பலரும் இந்த விதிமுறை மாற்றத்தை கவனிக்கவில்லை. நான் பேசிய பலருக்கும் இந்த அறிவிப்பு பற்றி தெரிந்திருக்கவில்லை. மீடியாவிலும் இது குறித்து தெளிவில்லை. உதாரணமாய், இப்போதுள்ள அடிப்படை தகுதியான நெட் அல்லது முனைவர் பட்டம் என்பது முன்பிருந்த அதே தகுதி தான். இது புரியாமல் பல பத்திரிகைகளிலும் “நெட் இனி கட்டாயம் இல்லை” என எழுதுகிறார்கள். இப்போது கல்வி அமைச்சகம் ஒரு சின்ன மாற்றத்தை மட்டுமே கொண்டு வந்துள்ளது: 2009க்கு முன்னால் பதிவு செய்ய முனைவர் பட்ட ஆய்வாளர்களின் பட்டம் செல்லாது என யுஜிசி முன்பு அறிவித்திருந்தது. இனி அவர்களின் பட்டமும் செல்லும் என இப்போது கல்வி அமைச்சகம் கூறி உள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பில் வேறு ஒரு குழப்பம் உள்ளது. 2009க்கு முன்பு எம்.பில் பட்டத்துக்காய் பதிவு செய்தவர்களுக்கும் நெட் தேவையில்லை என அமைச்சகம் கூறி உள்ளது. அப்படி என்றால் ஒரு வருடம் எம்.பில் படிப்பு மட்டுமே போதுமா? மூன்றில் இருந்து ஐந்து வருடங்கள் முனைவர் பட்ட ஆய்வு தேவையில்லையா? இதை யு.ஜி.சி தெளிவுபடுத்த வேண்டும்.
எம்.பில் விதிமுறை மாற்றம் நடைமுறையில் ஏற்கப்படும் என்றால் அது தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை பன்மடங்கு ஆக்கும். சில வருடங்களுக்கு முன்பு யு.ஜி.சி எம்.பிலை ஒரு தகுதியாக ஏற்க முடியாது என அறிவித்தது. இதை ஒட்டி பல கல்லூரிகளில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். அவர்கள் இரவும் பகலும் நெட் பரீட்சைக்கு படித்து அல்லது படிப்பதாய் பாவனை வரிசையில் நின்று தேர்வெழுதி அதில் தோற்று மீண்டும் படித்து நொடிந்து போனார்கள். ஒரு பக்கம் நெட் இல்லாத ஆசிரியர்களை கல்லூரியில் பணி செய்ய விடக் கூடாது என யு.ஜி.சி கல்லூரி நிர்வாகங்களை உலக்கையால் இடிக்க, நிர்வாகங்களோ இந்த ஆசிரியர்களை வேலை நீக்கத்தை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்து பல நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு நெட் பரீட்சையில் தேற ஒரு வருடம் கெடு விதித்திருந்தது.
 நிர்வாகங்களுக்கு மற்றொரு நெருக்கடி. அவர்களால் நெட் இல்லாத ஆசிரியர்களை ஒரேயடியாய் விலக்க முடியாது. ஒன்று அவர்கள் அனுபவம் மிக்கவர்கள். அடுத்து, நெட் தகுதி கொண்ட ஆசிரியர்கள் மிக மிக குறைவு. இதனால் நிர்வாகங்கள் வேறொரு தவறான முடிவுக்கு தள்ளப்பட்டன. நேர்முகத் தேர்வின் போது அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, அனுபவமே இல்லாத எம்.ஏ படிக்கும் போதே நெட் தேர்வான இளம் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தன. இவர்களுக்கு வகுப்பை கையாளவே தெரிவதில்லை. இந்த மாற்றத்தை கடந்த நான்கு வருடங்களில் நான் பரவலாய் கவனித்தேன். எம்.ஏ முடித்ததும் ஆய்வு மற்றும் ஆசிரிய அனுபவம் இல்லாமல் பலரும் நேரடியாய் நிரந்தர வேலை கூட பெற்று விடுகிறார்கள். அனுபவம் மிக்க ஆசிரியர்களின் பெருங்கூட்டம் தெருவுக்கு வந்து விடுகிறது. நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்களுக்கு பத்தாண்டு அனுபவம் உண்டு. ஒருநாள் ஒரு பரீட்சையில் உங்களை தேர்வாக கேட்கிறார்கள். உங்களால் உடனே முடியவில்லை. உடனே உங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு உங்களை விட பத்து மடங்கு சம்பளத்தில் எந்த அனுபவமும் இல்லாத இளைஞர்களை வேலையில் அமர்த்துகிறார்கள். உங்களுக்கு கும்பி எரியாது?
இப்போது இச்சிக்கலை அமைச்சகம் நீக்கி உள்ளது. பல்லாயிரம் ஆசிரியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். என்னதான் ஸ்மிரிதி இரானி மேல் பல விமரசனங்கள் இருந்தாலும் இந்த முடிவு மிகவும் பாராட்டத்தக்கது.
இரண்டு விசயங்களை இங்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒன்று 2009க்கு முன்பு பதிவு செய்த அல்லது பட்டம் பெற்ற முனைவர் பட்டதாரிகள் ஏன் விலக்கப்பட்டார்கள்? 2009க்கு பிறகு யு.ஜி.சி முனைவர் பட்ட ஆய்வு செய்யும் பாணியில் சில அற்ப மாற்றங்க்ள் கொண்டு வந்தது. ஒன்று, வெளிநாட்டு ஆய்வாளர்கள் கட்டாயமாய் உங்கள் ஆய்வை மதிப்பிட வேண்டும் என்றார்கள். ஆய்வுக் கட்டுரைகள் நிச்சயம் பிரசுத்திருக்க வேண்டும் என்றார்கள். இவை மேலோட்டமான மாற்றங்களே. இவற்றால் ஆய்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.
 ஆனால் இதற்கு 2009க்கு முன்பு ஆய்வு செய்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் அப்போது யு.ஜி.சி அனுமதித்த விதிமுறைப்படி தானே ஆய்வு செய்தார்கள். ஒரு புது விதிமுறையை கொண்டு வரும் போது முந்தைய விதிமுறைப்படியான வேலைகளை செல்லாததாய் அறிவிப்பது அபத்தம். உதாரணமாய் அரசு நாளையில் இருந்து நூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தால் என்ன ஆகும்?
இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வின் முக்கியமான சிக்கல் அதற்கு அறிவியல் ஆய்வில் உள்ளது போல் ஒரு peer review system இல்லை என்பது. நீங்கள் ஒரு ஆய்வை செய்து கட்டுரையாய் சமர்ப்பிக்கிறீர்கள். அதை ஒரு ஐந்து பேர் சேர்ந்து பரிசீலிக்கிறார்கள். அடுத்து இதை நீங்கள் ஒரு சிறு கூட்டத்தின் முன் விளக்குகிறீர்கள். உடனே பட்டம் அளித்து விடுகிறார்கள். பல ஆய்வு மாணவர்கள் வேறு நூல்களில் இருந்து திருடி தம் பெயரை போடுகிறார்கள். இன்னும் சிலர் வரிக்கு வரி தப்புகள் மலிய எழுதுகிறார்கள். சில ஆய்வாளர்களுக்கு கோர்வையாய் பேச வராது. சிலருக்கு சுத்தமாய் ஆங்கிலத்தில் பேச வராது. குறிப்பாய் சிறுநகர கல்வி நிறுவனங்களில் இருந்து வருகிற ஆய்வுகளின் பொது சிக்கல் இது.
 ஆய்வில் தரத்தைக் கொண்டு வர அதை பொதுவில் முன்வைப்பது தான் சிறந்த வழி. நம்முடைய இலக்கிய பத்திரிகைகளைப் போல பல ஆய்வுப் பத்திரிகைகளை அரசு நிதி மூலம் ஆரம்பிக்க வேண்டும். ஆய்வுகளின் பகுதிகளை அவற்றில் கட்டாயமாய் பிரசுரித்து உலகம் முழுக்க அனுப்ப வேண்டும். பிற ஆய்வாளர்கள் இந்த ஆய்வுகள் குறித்து எதிர்வினை எழுத ஊக்குவிக்க வேண்டும். அப்போது போலி, திருட்டு, அபத்த ஆய்வுகள் தாமே ஒழிந்து விடும். இன்னொன்று இலக்கிய மாணவர்களின் viva தேர்வை ஒரு பொது இடத்தில் நிறைய வாசகர்களும் ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொள்ளும் விதத்தில் நடத்த வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தமது கல்லூரியில் நடத்தாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ந்து தம் ஆய்வை விளக்கும் முகமாய் இது இருக்க வேண்டும். ஒரு மாதம் நடக்கிற ஒரு கருத்தரங்காய் கூட இதை ஒருங்கிணைக்கலாம். இப்போது நடக்கும் vivaவில் பெயருக்கு ரெண்டு கேள்வி கேட்பார்கள். அதற்கு பதிலளிக்க ஆய்வாளர் திணறினாலும் பட்டம் கொடுத்து விடுகிறார்கள்.
இந்த அடிப்படை குளறுபடிகளைக் களையாமல் பெயருக்கு இரண்டு விதிகளை மாற்றி விட்டு, அது நிலுவைக்கு வருவதற்கு முன்பு ஆய்வு செய்தார்களை தகுதியற்றவர்களாய் அறிவித்தால் அது நியாயமா? அந்த முட்டாள்தனமான முடிவைத் தான் அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
கடைசியாய் நெட் தேர்வுக்கு வருவோம். இது சிலர் நம்புவது போல் தகுதியை உறுதி செய்யும் தேர்வு அல்ல. இது வெறும் நினைவுத்திறன் போட்டி. ஒரு வாக்கியத்தை இலக்கணத் தவறில்லாமல் பேசத் தெரியாதவர்கள், ஒரு நாவலைக் கூட வாசித்திராதவர்கள் கூட ஆறு மாதம் தகவல்களை மனனம் செய்து ஜெயித்து விடலாம். உதாரணமாய் ஒரு தேர்வில் ஹெமிங்வேயின் Farewell to Arms நாவலுக்கு எத்தனை பாகம் எனக் கேள்வி கேட்டார்கள். அந்த நாவலை நீங்கள் படித்தீர்களா அதன் மையக் கரு என்ன, மொழி எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது, ஹெமிங்வேயின் ஸ்டைல் அதில் எப்படி மாறி உள்ளது, இருத்தலியம் அந்த நாவலில் எப்படி கையாளப்பட்டுள்ளது, கிறுத்துவம் பற்றின விவாதம் எப்படி உள்ளது என்பதெல்லாம் யு.ஜி.சிக்கு முக்கியம் அல்ல. எவ்வளவு பாகம், எவ்வளவு பக்கம், பக்கத்தில் எவ்வளவு சொற்கள், சொற்களில் எவ்வளவு எழுத்துக்கள், எவ்வளவு காற்புள்ளி, அரைப்புள்ளி – இதையெல்லாம் மனப்பாடம் செய்து விட வேண்டும்.
 இந்த தேர்வை புத்திசாலிகளும் வெற்றி காண்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் எந்த வாசிப்பும் இல்லாதவர்களே இதில் வெல்கிறார்கள் என்பதை நேரடியான அனுபவத்தில் கண்டிருக்கிறேன். இவர்கள் எப்படி மாணவர்களுக்கு பாடம் எடுப்பார்கள்? ஹெமிங்வேயின் நாவலை எடுத்து வைத்துக் கொண்டு “இந்த நாவலின் மொத்தம் 24 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இவ்வளவு இவ்வளவு பாத்திரங்கள் வருகிறார்கள். இவர்கள் இன்ன நிறத்தில் சட்டை அணிகிறார்கள். இந்த பாத்திரம் இன்ன தேதியில் பிறந்தார். ஹெமிங்வே பிறந்த போது ஒன்றரை கிலோ எடை இருந்தார். அவர் இன்ன மருத்துவமனையில் இன்ன பெயருள்ள செவிலியால் பராமரிக்கப்பட்டார்…”.
 விளையாட்டுக்கு சொல்ல வில்லை. நான் எம்.ஸி.ஸியில் படிக்கும் போது பிரெடிரிக் மோஸஸ் எனும் பேராசிரியர் இருந்தார். அவர் ஜேன் ஆஸ்டினின் நாவலை எடுத்து வைத்துக் கொண்டு “68 ஆம் பக்கத்தில் எலிசபெத் எண் 3, ஆக்பொர்ட் தெருவில் உள்ள வீட்டிற்கு செல்கிறாள். அப்போது அவள் மஞ்சள் தொப்பி, பிரவுன் நிற மேலங்கி அணிந்திருக்கிறாள். அப்போது தெருவில் ஒரு குதிரை வண்டி கடந்து போகிறது. குதிரை வண்டி வரும் பக்கம் 69. கடைசி பத்தி…” என்று பேசிக் கொண்டே போவார். எங்களுக்கு தலை சுற்றும். அந்த குதிரை வண்டிக்கு நாவலில் எந்த முக்கியத்துவமும் இராது. ஆனாலும் அவர் சொல்வார். தகவல்களாய் பொழிவார். ஆனால் நாவலின் தத்துவத்துக்கு உள்ளோ மொழியியல்/உளவியல் விவாதங்களிலோ செல்ல மாட்டார். அவர் ஒரு நடமாடும் விக்கிபீடியா. அவர் அடிப்படையில் ஒரு தகுதித் தேர்வு அரக்கன். பலமுறை ஐ.ஏ.எஸ் தேர்வில் ஜெயிக்க முயன்று கடைப்படியில் சறுக்கியவர். அவர் ஆசிரியராய் வந்து பல தலைமுறை மாணவர்களை பழிவாங்கினார். நெட் தேர்வு மூலம் யு.ஜி.சி இது போன்ற பல தற்கொலைப் படையினரை உருவாக்கத் தான் முயல்கிறது.

இப்போது கல்வி அமைச்சகம் ஒரு சிறு ஆசுவாசத்தை கொடுத்துள்ளது. இலக்கியம் போன்ற துறைகளுக்கு நினைவுத்திறன் போட்டிகள் தேவையில்லை எனும் விசயத்தை விரைவில் புரிந்து கொண்டு இந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டும். அதுவே பலரது எதிர்பார்ப்பும்!

கருத்துகள்

Ant இவ்வாறு கூறியுள்ளார்…
For IAS only degree is enough MA is more than BA can we directly appoint them. Poor view and without quality concious. Every one enter without experience, including MPhil. It is better to get education from knowledgeable person than junk who do not able to prove their knowledge in their own subject.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...