வி.மு வழக்கமான சிறுபத்திரிகை
எழுத்தாளர் அல்ல. அந்த குணயியல்புகள் அவரிடத்து இல்லை. உ.தா: புலம்ப மாட்டார். புறம்பேச
மாட்டார். சோம்பல் இல்லை. குடியில் தன்னை இழந்து அதில் பெருமைப்பட மாட்டார். நிறைய
வாசிப்பார். வாசித்ததை வைத்து பீற்றிக் கொள்ள மாட்டார். அன்றாட வாழ்வில் ஒழுக்கத்தை
பேணுபவர் என்பது அவர் உடல் தகுதியை பார்த்தால் தெரியும். எப்போதும் ஒளி துலங்கும் முகம்.
(எங்கள் முகங்களைப் பாருங்கள் – ஒரு வாரம் தூங்காதது போல், விடிய விடிய குடித்தது போல்,
கரி பிடித்த விளக்கு போல்)
கனிவானவர். அவருக்கு மலைச்சொல்
விருது வழங்கப்பட்ட போது நான் அவர் நாவல் பற்றி பேசுவதற்காய் அவருடன் ஊட்டிக்கு பயணப்பட்டேன்.
அப்போது தான் அவர் மிகுந்த அன்பு கொண்ட மனிதர் என்பதை உணர்ந்தேன். குறைவாக பேசுவார்.
எழுத்திலும் வாசிப்பிலும் தான் யார் என அறிவார். அதனால் அவருக்கு தத்தளிப்பு இல்லை.
பொதுவாக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் இடையில் love-hate உறவு தான் இருக்கும். ஆனால்
வி.முவுக்கு இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தான் தெரியும்.
கச்சிதமாய் திட்டமிட்டு வாழ்பவர்.
இவ்விசயத்தில் அவரும் எஸ்.ராவும் ஒன்று. இல்லாவிட்டால் கடுமையான அலுவலக பணிகள் மத்தியில்
மூன்று நாவல்கள் முடித்திருக்க மாட்டார்.
எஸ்.ராவைப் போன்றே இவரும் தன் உணர்ச்சிகள்
அத்தனையும் ஒரே சமயத்தில் கொட்ட மாட்டார். பத்தில் ஒரு முகத்தை மட்டுமே வெளியில் அணிந்திருப்பார்.
பொதுவாய் தமிழ் எழுத்தாளன் பற்றி அவன் நண்பர்கள் பலவிதமாய் கருத்து கொண்டிருப்பார்கள்.
வி.மு பற்றி ஒரே கருத்து தான் எல்லாருக்கும் இருக்கும். அது தான் நல்லது என எனக்கு
தோன்றுகிறது. எழுத்தாளன் தன் பத்து முகங்களையும் எழுத்தில் மட்டுமே காட்டினால் போதும்.
வி.முவை போன்ற ஒருவரை பார்க்க
வேண்டுமானால் பிரிட்டீஷ் நாவல்களில் தேடலாம். மேற்சொன்ன குணநலன்கள் ஆங்கிலேயருக்கானது.
அவர் போன ஜென்மத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஒரு துரையாக இருக்கவே வாய்ப்பதிகம்.
அவர் நண்பராய் வாய்த்தது என் அதிர்ஷ்டம்.

Comments