முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் இனவெறியர்களா?

Image result for tarun vijay
பா.ஜ.க முன்னாள் எம்.பி ”கறுப்பர்களான தென்னிந்தியர்களுடன் நாங்கள் வாழவில்லையா? நாங்கள் இனவெறியர்கள் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம்” என்று ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியதை ஒட்டி எழுந்த சர்ச்சை சற்று விசித்திரமானது.
தென்னிந்தியர்களை எப்படி கறுப்பர்கள் என்று கூறலாம் எனக் கேட்டு நம் அரசியல் தலைவர்களும் சமூகவலைதள எழுத்தாளர்களும் அவரை துவம்சம் செய்கிறார்கள். ”என் கருத்து சரியாக வெளிப்பட வில்லை, மன்னிக்கவும்” என தருண் விஜய் தெண்டனிட்டு விட்டார். ஆனால் இப்பிரச்சனை சுலபத்தில் ஓயும் எனத் தெரியவில்லை.
திமுகவின் டி.கெ.எஸ் இளங்கோவன் சொல்கிறார்: திமுக தலைவர் கருணாநிதி சிகப்பில்லையா? ஜெயலலிதா சிகப்பில்லையா? எப்படி தமிழர்களை கறுப்பு எனக் கூறலாம்?
நமக்கு இவ்வளவு கோபம் வரக் காரணம் கறுப்பின் மீதுள்ள தாழ்வு மனப்பான்மையா? நம் தோல் நிறத்தின் அடிப்படையில் வட இந்தியர்கள் நம்மை தாழ்வாக நடத்துகிறார்கள் எனும் எண்ணமா? நம் தோல் நிறம் மீது நமக்கு கழிவிரக்கம் இல்லையென்றால் நம்மை கறுப்பர்கள் என அழைக்கும் போது நமக்கு ஏன் ஆவேசம் வர வேண்டும்? ஏன் நம் மத்தியிலும் சிகப்பான தலைவர்கள் உண்டு என சொல்ல தேவை ஏற்பட வேண்டும்?

தருண் விஜய் நினைத்தது ஒன்று, அவர் சொல்லியது மற்றொன்று என எனக்குத் தோன்றுகிறது. அவரிடம் வைக்கப்பட்ட கேள்வி இந்தியாவில் இனவெறி உண்டா என்பது. இக்கேள்வி எழக் காரணம் நைஜீரிய மக்கள் இந்தியாவில் தாக்கப்பட்டதும், அதை ஒட்டி நைஜீரிய அரசாங்கம் இதை ஒரு இனவெறித் தாக்குதல் என அடையளப்படுத்தி கண்டித்ததும், அதை நம் வெளியுறவுத் துறை மறுத்ததுமே.
இந்தியர்கள் இனவெறியர்களா என்று கேட்டால் இல்லை என்று தான் நான் சொல்வேன். இங்கு சாதி உணர்வு தான் உள்ளது, இனவெறி இல்லை. இது பிற நாட்டவருக்கு சுலபத்தில் புரியாது. ஏனென்றால் அவர்களுக்கு சாதி என்றால் என்ன என சத்தியமாய் புரியாது.
 ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இன அடிப்படையிலான மோதல்களும் ஆக்கிரமிப்புகளும் தான் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளன. மதப் போர்களும் நடந்துள்ளன. இனம் மற்றும் பொருளாதார வகுப்புகளாய் மக்களை பிரிப்பதே அவர்களுக்கு வழக்கம். ஆனால் இந்தியாவில் என்றுமே இந்த வழக்கம் இருந்ததில்லை.
 நாம் பல்வேறு இனக்குழுக்களாய் வாழ்ந்தவர்கள். இங்கே பேரரசுர்கள் தோன்றிய போது இந்த இனக்குழுக்கள் சேர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டது. அப்போது இவர்களுக்குள் ஒரு படிநிலை அமைப்பு தோன்றியது. இந்த அமைப்புக்குள் மனிதர்களை அவர்களது சமூகப் பணி மூலம் சுத்தமானவர், அசுத்தமானவர், குறிப்பிட்ட சுபாவம் உள்ளவர், திறன் கொண்டவர் என பிரித்து அடுக்கும் வழக்கம் தோன்றியது. இதுவே சாதி ஆகியது. இது மிக நெகிழ்வான அமைப்பு. பிறழ்வு, வேறுபாடு, கழிவு என அடையாளப்படுத்தப்படுபவர்களை கீழ் சாதியாய் பார்க்கும் அமைப்பு. பொருளாதாரம் மற்றும் அரசியல் பலம் மூலம் ஒரு கீழ் சாதி மத்திய சாதியாகவோ மத்திய சாதி மேல்சாதி ஆகவோ முடியும்.
சாதி தோல் நிறம் அல்லது ஒருவரது இனத்தின் அடிப்படையிலானது அல்ல. நிலம், தொழில், கழிவு, சுத்தம் ஆகியவை தான் சாதியின் அடிப்படை. ஒருவரை ஒரு குறிப்பிட்ட நிலத்துடன் பிணைத்து வைத்து நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் தொடர்ந்து தலித்துகளாய் வைத்திருக்க முடியும். அதே நபர் நிலத்தில் இருந்து பிரிந்து நகரத்துக்கு வரும் போது அவர்களை நம் சமூகம் குப்பைக்கூளம், சாக்கடை அருகே வசிக்க நிர்பந்திக்கும். அவர்களை மலத்தை அள்ளவோ சாக்கடையை சுத்தம் பண்ணவோ செய்யும். இப்போது அசுத்தம் எனும் பெயரில் இவர்களை தலித்துகளாய் பார்க்க ஒரு சாத்தியம் நம் சமூகத்திற்கு கிடைக்கிறது. ஆனால் உண்மையில் இந்தியர்களுக்கு சுத்தத்தில் எந்த ஆர்வமும் இல்லை. நம்மைப் போல் சூழலை அசுத்தப்படுத்துகிறவர்கள் வேறெங்கும் இல்லை. ஆனால் அசுத்தத்தை உருவாக்கி, அதை ஒரு குறிப்பிட்ட சாராருடன் அடையாளப்படுத்துவதே சாதி உருவாக்கத்தின் அடிப்படை.
 சுத்தத்துடனான இந்தியர்களின் மனப்பிணைப்பு மிக சிக்கலானது. உ.தா சைவ – அசைவ உணவுகள். இவையும் சுத்தம் vs அசுத்தம் எனும் பிரிவினையை உண்டாக்க உதவுகின்றன. சாதி மேலாண்மையை நிறுவ பயன்படுகின்றன.
இறுதியாக சாதி உளவியல் ரீதியிலானது. நாம் ஏன் நிலம், தொழில், சுத்தம் vs அசுத்தம் என இவ்வளவு மெனக்கெட்டு சாதியை முன்னெடுக்க போராடுகிறோம்? ஒன்று இதன் மூலம் குறிப்பிட்ட சாராருக்கு கிடைக்கும் அதிகாரம். இன்னொன்று இந்தியர்களின் அடையாள உருவாக்கமே சாதியை நம்பித் தான் இருக்கிறது. சாதியை எடுத்து விட்டால் நம்மில் கணிசமானோருக்கு சொந்தமாய் அடையாளம் ஏதும் இருக்காது. தத்தளித்து விடுவோம். தான் யார் என்ற கேள்விக்கு பெரும்பாலான இந்தியர்களுக்கு உள்ள பதில் நான் இன்ன சாதியை சேர்ந்தவன், என் சமூக அதிகாரம் இன்னது என்பதே. இது கௌரவ டாக்டர் பட்டம் போன்றது. நீங்கள் அடிமுட்டாளாக இருந்தாலும், எந்த திறன் அற்றவராக இருந்தாலும் உங்கள் சாதி உங்களுக்கு ஒரு ஒளிவட்டம் கொடுக்கும். இந்த கௌரவப் பட்டத்தை விட்டுத் தர இந்தியர்கள் என்றும் விரும்ப மாட்டார்கள்.
இந்த சாதி அமைப்பு நெகிழ்வாது என குறிப்பிட்டேன். வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்த போது அவர்களை பிராமணர்களுக்கும் மேலே வைத்து நம்மவர்கள் பார்த்தார்கள். இன்னொரு இனமாக அல்ல ஒரு சாதியாகவே கண்டார்கள். இதுவே பிற இனங்களுக்கும் இந்தியாவில் நடந்தது. கேரளாவில் உள்ள சிரியன் கிறித்துவர்கள் தாம் ஐரோப்பிய வம்சாவளியினர் என நம்புகிறார்கள். இந்திய சாதிய சமூகம் ஒரு கடல். இங்கே என்னவிதமான உப்பு வந்தாலும் அது கரைந்து கடலாகி விடும். இங்கே எந்த இனத்தவர் காலடி வைத்தாலும் அவர்கள் இங்குள்ள சாதிகளில் ஒன்றாய் கலந்தே ஆக வேண்டும்.
இந்த விபரங்களையும் நுணுக்கங்களையும் நாம் வெளிநாட்டவருக்கு புரிய வைக்க இயலாது. அவர்கள் நம் ஊர் சாதிய கலவரங்களையும் இனவெறியின் கண்ணாடி வழியே தான் பார்ப்பார்கள். இந்தியாவில் நிற அடிப்படையிலான பிரிவினை இல்லை என்றே தருண் சொல்ல வந்ததாய் நான் புரிந்து கொள்கிறேன். இளங்கோவனும் அதையே இன்னொரு விதமாய் சொல்கிறார். எம்.ஸி.ஸியில் என்னுடன் உ.பி பையன் ஒருவன் படித்தான். செக்கசெவேலென அமீர்கான் போல இருப்பான். அவன் தன்னை தலித் என அடிக்கடி கூறிக் கொள்வான். அவன் ஊரில் அவனுக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறைகளை சொல்லிப் புலம்புவான். ஆனால் அவன் சாதியை அவனாகவே சொல்லிக் கொண்டால் ஒழிய தமிழர்களுக்கு தெரியாது. அவன் கறுப்பாகவே இருந்தாலும் கூட அவன் சாதியை நம்மவர்களால் கண்டுபிடிக்க முடியாது.
 சாதிக்கும் நிறத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒருவனை அவனது குடும்ப பின்புலம், ஊர் பின்புலம், இதன் வழியாக அவனது சாதிய வேர் ஆகியவற்றை கண்டுபிடித்து ஒடுக்குவதே நம் வழக்கம். நம் மாநிலத்தில் எடுத்துக் கொள்வோம். கறுப்பானவர்கள் எல்லாம் இங்கே தாழ்த்தப்பட்ட சாதியா? இல்லை.
ஆக இந்தியர்கள் பல வித நிறத் தோல்கள் கொண்டவர்கள். அவர்கள் இணைந்து வாழ்கிறார்கள் என்றே தருண் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் உளறி விட்டார்.

அதோடு அவர் இன்னொன்றும் சொல்லி இருக்க வேண்டும். “நாங்கள் தோலின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதில்லை. ஆனால் சாதியின் அடிப்படையில் செய்கிறோம்”. இதை எந்த பா.ஜ.க அரசியல்வாதியும் சொல்ல மாட்டார். அவர்களின் தேசியம் அடிபடும். அதனால் சொல்ல மாட்டார்கள். நாம் தருண் போன்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி ”இங்கு சாதி இல்லையா?” என்பதே. எங்களை எப்படி கறுப்பர் என சொல்லலாம் என்பதல்ல. 

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
சாதி என்று ஆபிரிக்கர்களுக்கு சொன்னால் புரியாது என்பதை ஏர்பதற்கில்லை . அங்கு இனக்குழுக்கள் இருக்கின்றன ( ட்ரிபெச்).அந்த வகையில் சொன்னால் புரிந்து கொள்வார்கள் .
மேலும் வட இந்தியாவில் ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இனவறி தாக்குதல்தான் .
ஆஸியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது இனவெறி தாக்குதல் என ஒலமிடும் இந்திய அரசும் ஊடகங்களும் , இந்தியாவில் ஆபிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பாட்டால் மட்டும் அத்ற்கு வெள்ள்யடிக்க முற்படுவதுதான் எனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளி சட்னி நியாயம் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...