முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது


Image result for stalin dmk
தலைவர் பதவி ஏற்ற ஸ்டாலினின் உரையில் நான் கவனித்த ஒன்று தடம் பிறழ்ந்து எதையும் கூறி விடக் கூடாதே எனும் அந்த மெல்லிய பதற்றம். இது தேவையற்ற ஒன்று. மக்களின் உணர்வு ஓட்டத்தைப் புரிந்து அதற்கு ஏற்ப பேசுவதே இன்றைய அரசியலின் தேவை. இன்றைய அரசியல் ஒரு பகற்கனவு அரசியல்.

மோடி இதற்கு நல்ல உதாரணம். அவர் ஆட்சிக்கு வந்த பின் எவ்வளவோ விசயங்களை சொல்லி உள்ளார். அவற்றுக்கு நடைமுறையில் எந்த மதிப்பும் இல்லை (கறுப்புப் பணத்தை ஒழித்தேன் என்பது போல). ஆனால் மக்கள் மத்தியில் அவரது மதிப்பு இதனால் உயர்ந்துள்ளது. இன்றைய வாக்காளர்கள் ஒரு பக்கம் உங்கள் பேச்சின் தர்க்க நியாயங்களை, முரண்களை குறிப்பிட்டு சர்ச்சை செய்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு சிறு தரப்பே. பெரும் தரப்பு இந்த வாக்கியங்களின் உள்முரணை பொருட்படுத்தாது ஏற்கிறது; உணர்வுவயப்பட்டு பாராட்டுகிறது. என்னதான் ஜி.எஸ்.டி வரி, டிமானிடைசேஷன், மதவாதம் போன்ற பிரச்சனைகளால் பாஜக அரசு கடும் விமர்சனத்தை எதிர்கொண்டாலும் மோடியின் மதிப்பு குறைந்ததாய் தெரியவில்லை. இதற்குக் காரணம் அவர் ஒரு கனவு வியாபாரி என்பது. அவர் எந்த ஆதாரங்களையும் கொடுக்காமலே அனைத்தையும் சாதித்ததாய் வண்ண வண்ண பலூனாய் ஊதுவார். மக்களும் உற்சாகமாய் அந்த பலூன்களை வாங்கிக் கொண்டு விளையாடி மகிழ்வார்கள். பறக்க விடுவார்கள்.
இன்றைய அரசியலில் பேச்சும் உண்மையும் ஒன்றாய் இருக்க அவசியம் இல்லை.
கலைஞரின் பேச்சு இதற்கு நேர்மாறானது. அவர் ஆதாரத்துடன் பெரும்பாலும் முரண்பாடின்றித் தான் பேசுவார். அந்த பிசிறற்ற உரைகளின் காலம் முடிந்து விட்டது. இன்றைய வாக்காளர்களுக்கு உண்மையை விட கனவுகளே முக்கியம்.
நான் திரு. ஸ்டாலினிடம் சொல்ல விரும்புவது இது:
நீங்கள் இன்னும் துணிச்சலாய் ஆணித்தரமாய் பேசுங்கள். கற்பனையாய் பேசுங்கள். நாடகீயமாய் பேசுங்கள். நீங்கள் ஒன்றை சொல்லியதுமே அதை நடத்தி விட்டதாய் ஒரு பாவனையை அதில் கொண்டு வாருங்கள். உதாரணமாய், நீங்கள் உங்கள் தலைமையின் கீழ் குடும்ப அரசியல் இனிமேல் இராது என அந்த தலைமையேற்கும் உரையில் குறிப்பிட்டிருக்கலாம். “நான் நீண்ட கால அரசியல் செயல்பாட்டின் மூலமே கட்சியின் தலைமையை அடைந்தேன். தலைவரின் மகனாக அல்ல. என்னைப் போன்று உழைப்பவர்கள் மட்டுமே இனி கட்சியில் பொறுப்புகளை அடைய முடியும். வாரிசுகள் என்பதாலே கட்சியில் யாருக்கும் தனி இடம் இருக்காது.” என சொல்லுங்கள்.
1)   இது உங்கள் பிம்பத்தை உயர்த்த உதவும். பின்னர் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் உங்கள் மகனோ மனைவியோ கட்சியில் முன்னிலைப்பட்டாலும் பிரச்சனை இல்லை. மக்கள் இந்த முரண்பாட்டையெல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். சொற்களே முக்கியம்.
2)   கட்சிக்குள் சகோதர யுத்தத்தை ஒழிக்க இந்த கோரலை நீங்கள் பயன்படுத்தலாம். “நான் என் சகோதரிக்கே கட்சியில் இடம் அளிக்கவில்லை” எனச் சொல்லி திமுகவில் குடும்ப அரசியலே இல்லை என நீங்கள் நிறுவலாம். சொல்லிக் கொண்டே கனிமொழி, அழகிரி, மாறன்களை ஒழித்துக் கட்டலாம். உங்கள் பெருமையையும் நிறுவலாம். இதில் உங்களுக்கு இரட்டிப்பு அனுகூலம்.
பேச்சு பேச்சு பேச்சு … இதுவே உங்களை உயர்த்தும் ஸ்டாலின். "செயல்" தலைவரின் காலம் முடிந்து விட்டது.
வாழ்த்துக்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...