முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2018 புத்தகக் கண்காட்சியில் வெளிவரும் எனது புத்தகங்கள்



இந்த புத்தகக் கண்காட்சியில் எனது ஏழு நூல்கள் வெளியாகின்றன.
கடந்த மூன்று வருடங்களாக நான் தினமணியில் (இளைஞர் மணி) எழுதி வரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடர் எளிய முறையில் புனைவின் வடிவில் ஆங்கிலச் சொற்கள், இச்சொற்களின் வேர்ச்சொல் கதைகள், இலக்கண விதிகள் ஆகியவற்றை விளக்கும் தொடர். இத்தொடரை நான் தினமணியில் ஆரம்பித்த போது ஆறு மாதங்களே எழுதுவேன் என நினைத்தேன். ஒரு வயதான புரொபஸர், அவரது மிகை-ஆர்வ மாணவன் கணேஷ், புரொபஸரின் நாய் ஜூலி என மூன்று பாத்திரங்களுடன் தொடரை ஆரம்பித்தேன். சுஜாதாவின் “மீண்டும் ஜீனோவின்” சாயலில் இதுவும் ஒரு பேசும் நாய். “நாயே ஆங்கிலம் பேசலாம், அதுவொன்றும் பெரிய சாதனை அல்ல” என உணர்த்த நினைத்தே ஜூலியின் பாத்திரத்தை உருவாக்கினேன். இவர்களைத் தொடர்ந்து அன்றாட வாழ்விலும் ஊடகங்களிலும் நான் எதிர்கொண்ட மனிதர்கள், பிரச்சனைகள் ஆகியவற்றை இத்தொடரில் அறிமுகப்படுத்தி ஆங்கிலத்தைக் கற்பிக்கவும் என் சமூகக் கருத்துக்களை பேசவும் பயன்படுத்திக் கொண்டேன்.

 என் தொடருடன் தினமணியில் வெளிவந்த பல தொடர்கள் நின்று விட்டன. ஆனால் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நானே எதிர்பாராத வகையில் இன்றும் தொடர்ந்து வருகிறது; பரவலான கவனம் பெற்று வந்துள்ளது. இதுவே இவ்வருட இறுதியில் நான்கு பகுதிகளாய் புத்தகமாகிறது.
அடுத்து மீ டூ குறித்து நான் எழுதிய உரைநடை நூல் வருகிறது – ”மீ டூ: சில விமர்சனங்கள்”. இரண்டே மாதங்களில் இந்த பிரச்சனையின் கவனிக்கப்படாத, அதிகம் பேசப்படாத ஒரு பக்கம் குறித்து நான் துணிச்சலாக எழுதிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இது.
இதை அடுத்து, கடந்த பத்தாண்டுகளில் நான் அவ்வப்போது மொழியாக்கிய கவிதைகளின் ஒரு தொகுப்பு வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஜெர்மனி என பல தேசங்களை சேர்ந்த முக்கிய கவிஞர்களின் கவிதைகளை அவை பேசும் சமகால பாடுபொருள் மற்றும் தொனியின் அடிப்படையில் தொகுத்திருக்கிறேன். இதன் தலைப்பு “அன்புள்ள தெரிதா”. இத்தொகுப்பு என் எழுத்து வாழ்வில் முக்கியமான நூலாக இருக்கும்.
இறுதியாக “கிளை முறியும் ஓசை” எனும் தலைப்பில் மேற்கத்திய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு ஒன்று வருகிறது. என் முதல் புத்தகம் “இன்றிரவு நிலவின் கீழ்” தொகுப்பின் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். அதே ஸ்டைலில் கவிஞர்கள் பற்றின குறிப்பு, புகைப்படம் என செறிவாக இந்நூல் வருகிறது.  “இன்றிரவு நிலவின் கீழ்” தொகுப்பைப் போன்றே இதுவும் கவனம் பெறும் என நம்புகிறேன்.
இந்த ஏழு நூல்களையும் உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.
தொடர்ந்து என் எழுத்துக்கு ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் உயிர்மைப் பதிப்பகத்தாருக்கும் என் நன்றிகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...