இம்மாத இறுதியில் வெளியாகப்
போகும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலின் நான்கு பகுதிகளைப் பற்றி பேராசிரியர் கணேஷ் பேச இருக்கிறார்.
கணேஷ் சார் எம்.ஸி.ஸியில் நான் முதுகலை ஆங்கிலம் படிக்கும் போது எனது பேராசிரியர்.
தற்போது அவர் அங்கு துறைத்தலைவர்.
எம்.ஸி.ஸியில் அவர் பேசும் போது பக்கத்து
வகுப்பு மாணவர்கள் எல்லாம் கூட்டமாய் வந்து மொய்ப்பார்கள். அவரது கணீர் குரல்
வளாகம் எங்கும் ஒலிக்கும். அபாரமான பேச்சாற்றல் கொண்ட அவரது வகுப்புகள் போவதே
தெரியாமல் நாங்கள் சொக்கிப் போய் அமர்ந்திருப்போம். 16 வருடங்களுக்குப்
பிறகு கணேஷ் சார் எனது “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” நூலுக்கு பேசுவார் என நான்
கனவிலும் நினைக்கவில்லை. அவரது குரலை, பிரமாதமான பேச்சை
நீண்ட காலத்துக்குப் பிறகு கேட்க இருக்கிறேன். உவகையும் பரபரப்பும் ஒரே நேரத்தில்
சூழ்கின்றன. நீங்களும் வாங்க. சந்திப்போம்!
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...


கருத்துகள்