By
ஆர். அபிலாஷ்
இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணி
முதல் மூன்று பேட்ஸ்மேன்களின் (ரோஹித், தவான், கோலி) அனுபவம் மற்றும் தொடர்ச்சியான ஆதிக்கமான ஆட்டம். இவர்களுக்கு அடுத்தபடியாய் கீழ்மத்திய வரிசையில் தோனி, பாண்டியா ஆகியோரின் அதிரடி ஆட்டம். அடுத்து இரண்டு கால் சுழலர்கள் (குல்தீப் மற்றும் சாஹல்). கடைசியாய் ஆனால் மிக முக்கியமாய் அனுபவமும் திறமையும் மிக்க வேகவீச்சாளர்கள் (பும்ரா, ஷாமி, புவனேஷ்வர்). இன்று உலகின் முதன்மையான ஒருநாள் அணிக்கான 11 பேர்களை தேர்ந்தெடுத்தால் இந்த அணியில் இருந்து ஆறு பேராவது அந்த அணியில் இருப்பார்கள். அது மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி பல ஆட்டத் தொடர்களை வென்று வந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் மே.இ தீவுகளிலும் தென்னாப்பிரிக்காவிலும் ஆதிக்கம் செலுத்தியது. நம் வரலாற்றில் வேறெப்போதும் ஓர் இந்திய அணி இதுபோல உலகம் முழுக்க அஸ்வமேத யாகம் செய்து கொடி நாட்டியதில்லை. மேலும், இந்த அணியில் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ராகுல் போன்றோரைத் தவிர்த்து பிற வீரர்கள் தொடர்ந்து நிரந்தர இடம் பெற்று பங்களித்து வருகிறார்கள்; இது நிலைத்த நிதானமான ஆட்டநிலையை இவர்களுக்கு அளித்துள்ளது.
பலவீனங்கள் என்னென்ன?
மத்திய வரிசை: கோலிக்கு பிறகு இந்த அணி ‘நகரம்’ வடிவேலுவின் கீழுடல் போல நடுங்க ஆரம்பிக்கிறது. ராகுல் இப்போது 4ஆம் எண்ணில் ஆட வந்துள்ளார் என்றாலும் அவர் அனுபவசாலி அல்ல. அவருக்குப் பிறகு தோனிதான் ஒரே ரட்சகன். அவரும் வெளியேறினால் இந்திய அணியை ஊதித் தள்ளிடலாம்.
கீழ்வரிசை மட்டையாட்டம்: ஐந்து ஓவர்களில் ஐம்பது ரன்கள் வேண்டும். இந்தியா பாண்டியாவை இழந்து விட்டது. தோனி ஒற்றை, இரட்டை ரன்களாக எடுத்து கடைசி ஓவர் வரை நின்றாட முடிவெடுக்கிறார். இப்போது சிக்ஸர்கள் விளாசும் ஆல்ரவுண்டர்கள் நமக்கு தேவை. அப்படி யாரும் இந்த அணியில் இல்லை. நெருக்கடியான கட்டத்தில் ஜடேஜாவோ புவனேஷ்வரோ ரன் அடிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. தினேஷ் கார்த்திக்கை எண் 6 / 7 இல் இறக்குவது ஒரு தீர்வென்றால், அது பந்து வீச்சை பலவீனமாக்கும்.
ஐந்து முழுநேர வீச்சாளர்கள்: நமது பவுலர்களில் ஷமி, பும்ரா, சாஹல், குல்தீப் ஆகியோர் உலகத் தரமானவர்கள்; ஆனால் கையில் மட்டையை கொடுத்து இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் அடிக்கச் சொன்னால் இவர்கள் வெலவெலத்துப் போவார்கள். உலகிலேயே மட்டமாய் மட்டையாடும் பவுலர்கள் இந்திய அணியில் மட்டுமே உண்டு. ஒரு நெருக்கடியான கட்டத்தில் இந்த ஓட்டை, நமக்கு தலைவலி ஆகலாம்.
விராத் கோலியின் தலைமை: கோலி அட்டகாசமான உத்வேகம் அளிக்கும் ஒரு தலைவர் ஆனால், நிதானமான புத்திசாலி அல்ல. ரத்தம் தலைக்கு ஏறினால் அவர் அபாரமாய் மட்டையாடுவார், ஆனால் ஒரு தலைவராக அபத்தமான முடிவுகள் எடுப்பார். ஒரு முக்கியமான ஆட்டத்தில் அவர் செய்யும் தவறான அணித்தேர்வுகள் மற்றும் டாஸ் ஜெயித்து எடுக்கும் முடிவுகள் இந்திய அணியை இடறி விடுமா எனும் கேள்வி பல ரசிகர்களின் மனதில் உள்ளது தான். கோலியே இந்தியாவின் பெரிய பலம், அவரே இந்தியாவின் பெரிய பலவீனமும்.
சரி, இந்தியா உலகக்கோப்பையை இம்முறை வெல்லுமா? இந்தியாவின் பலவீனங்கள் கவனம் பெறாதபடிக்கு நமது வலிமைகள் ஒட்டுப்போட்டு கம்பீரமாய் நடை போட்டால் நிச்சயமாய் முடியும். 2011 உலகக்கோப்பையின் போது பல்வேறு கட்டங்களில் ஒருவர் துவளும்போது மற்றொருவர் தோள் கொடுத்து தனியாய் ஆட்டத்தை வென்றளித்தது நிகழ்ந்தது. 11 பேரும் ஓர் அணியாக இணைந்து செயல்பட்டால் இந்த ஓட்டைகள் இந்திய டைட்டானிக் மூழ்காமல் முன்னேற உதவும். எதிரணியினர் இந்தியாவின் பலவீனங்களை அம்பலப்படுத்தினால் கப்பல் பாதி வழியிலேயே மூழ்கி காதலர்கள் கடலுக்கடியில்தான் கைகோர்ப்பார்கள். எதிரணியினரின் ஆட்டம், ஆடுதள சூழல், சந்தர்ப்பங்கள் என பல காரணிகள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாதகமாய் அமைந்து பின்னுக்கு இழுக்கலாம்; மற்றபடி இந்திய அணி தாமாகவே மட்டமாய் ஆடி வெளியேற வாய்ப்பு குறைவு.
இந்தியா இம்முறை உலகக் கோப்பையை வெல்லாவிட்டால் மட்டுமே அது பலரையும் வியப்பில் ஆழ்த்தும்.
- Get link
- X
- Other Apps
Comments