Skip to main content

அமேசான் கிண்டில் போட்டி சர்ச்சை


அமேசானின் pen to publish மின்னூல் போட்டியைப் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்போட்டி நடக்கிறது. 5 லட்சம் வரை பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறார்கள். ஒரு முழுநேர எழுத்தாளருக்கு (அவர் இலக்கியவாதியோ -இலக்கியவாதியோ) இவ்வளவு பெரிய தொகை கிடைத்தால் சுமார் ஒரு வருடம் முழுநேரமும் வேறு கவலையின்றி எழுதலாம்
இப்போட்டியின் நோக்கமென்ன? இது யாருக்கானது?

 ஆங்கிலத்தில் அது நடந்த போதும் இலக்கிய தடத்தை தோற்றுவிப்பதை விட புதிய இளம் எழுத்தாளர்களையும் அவர்களுக்கான புது வாசக பரப்பையும் உண்டு பண்ணுவதே இலக்காக இருந்தது. அதாவது இது ஒரு மாற்று வெளி. கிட்டத்தட்ட பிளாக், பேஸ்புக் போல. இன்று இணையத்தால் நிறைய புது வாசகர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதே உண்மை. இவர்கள் உயர் இலக்கியமும் தீவிர தேடல்களை பின் தொடர்கிறவர்களும் இல்லை தான். ஆனால் இதற்கு முன்பு வானொலி, அதற்குப் பின் டி.வி., எப்.எம் ரேடியோ என பழியாக கிடந்தவர்கள் ஓய்வுக்க்காக படிக்க வந்திருக்கிறார்கள். அமேசான் கிண்டிலில் நாம் வாசிக்கிற நூல்கள் பெரும்பாலும் அச்சு வடிவுக்காக எழுதப்பட்டவை. அவற்றை படிக்கிறவர்கள் ஏற்கனவே அவற்றை அச்சில் படித்து இப்போது வசதிக்காக கிண்டிலில் வாங்குகிறவரக்ள். இந்த வாசக எண்ணிக்கையை பெருக்க ஒரு வழி புது நூல்களை அதிகமாக சந்தைக்கு கொண்டு வருவது. அப்போது அச்சில் படித்து பழகாதவர்களும் புதிதாக வாசிக்க கிளம்பி வருவார்கள். யுடியூப் சேனல்கள் நமது பாத் ரூம் நேரத்தை கபளீகரம் பண்ணுவது போலத் தான் இது. ஹாட்ஸ்டார் உள்ளதால் பிக்பாஸின் பார்வையாளர்கள் அதிகமாவதையும் போலத் தான் இது. காலங்காலமான ஒரு வணிக உத்தி
இது போன்ற போட்டிகளின் பயன் என்ன
பேஸ்புக் நம்மை இருபதில் இருந்து நூறு சொற்களுக்குள் எழுத தூண்டுகிறது. ஊரே ஒருவரை கழுவி ஊற்றினால் அதையே நீங்களும் சுருக்கமாக வேறு சொற்களில் செய்ய வேண்டும். அப்போது அதிக பெயர் கிடைக்கும். லைக்குகள் குவியும். பாரிசாலனைப் போல மேம்போக்காக அபத்தமாக அறிவுஜீவி வேடமணிபவர்களுக்கும் காணொளி தளத்தில் நிறைய ஆதரவாளர்கள் தோன்றுவார்கள். ஆனால் இதையெல்லாம் விட பத்தாயிரம் சொற்களுக்கு அதிகமாக ஒருவர் எழுதிப் பழக இத்தகைய போட்டிகள் தூண்டுகின்றன.
 பிரபல நாவலோ இலக்கியமோ பாரிசாலனின் காணொளியை பார்ப்பதை விட மேலான ஒரு நடவடிக்கை என்றே நம்புகிறேன். ஒருவேளை பேஸ்புக்கில் சட்டிக்குள் மீன் துண்டுகளைப் போல கொதிப்பவர்களில் சிலரேனும் வெளியே வந்து கடல் அலைகளை எதிர்கொண்டு நீந்தி ஒரு நீண்ட படைப்பை முடித்து அதற்கு பரிசும் வாசகர்களையும் பெற முடிந்தால் நல்லதே. சமீபத்தில் பிரபஞ்சன் நாவல் போட்டி நடந்தது. எதிர்காலத்தில் மேலும் பல பதிப்பகங்கள் இத்தகைய போட்டிகள் நடத்தி புது நாவல்களையும் அதற்கான வாசகர்களையும் உருவாக்க வேண்டும். எழுத்தாளனுக்கும் புத்தக விற்பனை, ராயல்டி குறித்தெல்லாம் அலட்டவோ, சந்தைப்படுத்த தொண்டை கிழிய கத்த வேண்டிய கதியும் ஏற்படாது. போட்டி பரிசே அவனது உழைப்புக்கான ஆரம்ப வெகுமதியை அளித்து விடும். மலையாளத்தில் இத்தகைய சூழல் உள்ளது. .தா., உண்ணி. ஆரின் கதைகள் தமிழில் மொழியாக்கமாகி வெளியான போது ஒரு குறிப்பை பார்த்தேன். அத்தொகுப்பின் ஒவ்வொரு கதைக்கும் அவர் ஒரு பரிசை வென்றிருக்கிறார். அவருக்கு தொகுப்பின் மூலம் வருமானம் கிடைக்கவே தேவையில்லை

அமேசான் போட்டி குறித்த ஜெயமோகனின் விமர்சனத்தை படித்தேன். அவரது கோபம் நியாயமானது, ஆனால் இலக்கு தவறானது. எழுத்துக்கு அது எங்கே வெளியாகிறது, யார் விமர்சித்து பாராட்டி அங்கீகரிக்கிறாரக்ள் என்பது முக்கியமல்ல. ஒரு எழுத்தாளன் எல்லா வகை பிரதிகளையும் பாகுபாடின்றி படிக்க வேண்டும் என எனக்கு சொல்லித் தந்தவரே ஜெயமோகன் தான். ஆனால் அவரது இந்த தூய்மைவாத அவதாரம் அவசியமற்றது. ஜெயமோகன் அற்பமான வணிக படங்களில் எழுதி இருக்கிறார் என்பதற்காக அவரை நாம் மதிப்பிடுவோமா என்ன? ஒருவர் பென் டூ பப்ளிஷ் போட்டியில் பிரசுரித்தாலே அவர்கற்பிழந்துசோரம் போனவராக ஆவதில்லை. அதில் பிரசுரமாவதால் மட்டுமே ஒரு படைப்பை யாரும் உதாசீனிக்கவும் கூடாது. இலக்கியத்தில் உயர்வு தாழ்வு என ஒன்றுமில்லை. சிக்கலும் சிடுக்குகளும் உள்முரண்களும் தீவிரமும் பாய்ச்சலும் நிரம்பிய படைப்புகள் உண்டு; மேம்போக்காய் ஒரு நல்ல விசயத்தை பேசும் படைப்பும், தீவிரமாய் ஒரு மேம்போக்கான செய்தியை விவாதிக்கும் படைப்பும் உண்டு. ஒரு படைப்பு நம்மை ஏன் ஆகர்சிக்கிறது என்கிற கேள்விக்கு தூய இலக்கியம், மகத்தான ஆழமான எழுத்து என்கிற அளவுகோல்களைக் கொண்டு யாரும் பதிலளிக்க முடியாது. .தா., நாம் இன்று கொண்டாடும் சில இலக்கிய படைப்புகளை விட சிக்கலும் கொந்தளிப்பும் மிகுந்த மகத்தான இடங்களை நான் பாலகுமாரனின் சில நாவல்களில் கண்டிருக்கிறேன். எண்டமூரி வீரேந்திரநாத்தை கூட நான் சில சந்தர்பங்களீல் ரசித்திருக்கிறேன்

எது இலக்கியம் என்ற கேள்விக்கு எதில் நமது பகுத்தறிவு மனம் தன்னை இழக்கிறதோ, எது சுலபத்தில் ஒரு கருத்தாக சுருக்கி விட முடியாதபடி, இருமையை மீறிப் பாய்கிறதோ, எதொன்றில் பித்துமனம் நின்று நம்மை நோக்கி கண்ணடிக்கிறதோ அதுவே இலக்கியம் என சொல்வேன். தல்ஸ்தாயின் அன்னா கரனினாவில் நாம் இந்த பித்தை காண்கிறோம் - அது இலக்கியமாகிறது; ஆனால் புத்தியிர்ப்பில் அவர் மிகுந்த விழிப்புடன் போதனை செய்வதால் அது இலக்கியமாக இல்லை. ஒரே வரியில் சொல்வதானால் எது கட்டுக்குள் வராததோ அதுவே இலக்கியம். அது உயிர்மை, காலச்சுவடில் வெளியாக வேண்டும், அது கிண்டில் போட்டியில் பரிசை வென்றதாக இருக்கக் கூடாது என்பதெல்லாம் ஒருவகை இலக்கிய சாதியம்மற்றபடி, “ஆழம்”, “போதம்”, கலையமைதி ஆகிய சொற்கள் எல்லாம் பாவனைகள் மட்டுமே.

Comments

எல்லோராலும் அச்சுப்புத்தகங்களை கைக்காசு செலவழித்து வெளியிட முடியாது. அப்படி கொண்டு வந்தாலும் 500 பேரிடம் கூட முழுவதுமாக கொண்டு போய் சேர்க்க முடியாது. இதுதான் உண்மை.

அப்படி இருக்கும்போது வெகு எளிதாக பலரிடம் சென்று சேரக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அமேசான் கிண்டில். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

எழுத்தாளர்கள் புதிது புதிதாக பெரிய வடிவில் எழுதுவதற்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள தங்கள் முழுத்திறன் அல்லது மேம்படுத்தப்பட்ட படைப்பை எழுதுவதற்கு ஊக்கமாக இந்த 5 லட்சம் ரூபாய் என்ற என்ற பரிசு அறிவிப்பு அமையும்.

ஆனால் எழுதுபவர்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

சில பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் அந்த பத்திரிகையின் கொள்கை (இருக்கும் பட்சத்தில்...) முதலாளி, நடுவர்களின் மன நிலையை பொறுத்து கதைகள் தேர்வு செய்யப்படுவது நடக்க வாய்ப்பு உண்டு. நேர்மையாகவும் போட்டிகள் நடத்தப்படுவதும் உண்டு.

கிண்டிலில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அனைவரும் சிலாகிக்கிறார்கள். பொதுவாக ஒரு பதிவை 100 பேர் படித்தால் ஒருவர் மறுமொழி இட்டால் பெரிய விஷயம்.

நிலைமை இப்படி இருக்கும்போது புத்தகத்திற்கு வந்த ரிவ்யூவை வைத்துதான் அடுத்த கட்டம் என்று சொல்வது, புதுமுக இயக்குனர், இசை அமைப்பாளர், நடிகர் என்று முயற்சி செய்து அழுத்தமான படம் எடுத்து அவர்கள் தியேட்டரில் வெளியிட்டு, மவுத் டாக் மூலம் மக்களிடம் பரவி வெற்றி பெறுவதற்கும், (மவுத் டாக் வெற்றிக்கு சமீபத்திய உதாரணம் : கைதி) ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று மிகப்பெரிய ஓப்பனிங் ரசிகர்கள் மூலம் முதல் 15 நாள் படம் வெளியாகும் முன்பே ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.

தமிழகத்தில் இருக்கும் 1000 தியேட்டர்களில் ரஜினி விஜய் படங்களே எல்லா தியேட்டரிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் மற்ற சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் மாதக்கணக்கில் கூட காத்திருக்க நேரிடுகிறது.

ஆனால் அமேசானில் எல்லாருடைய புத்தகமும் ஒரே நாளில் வெளியாக ஒரு தடையும் இல்லை. இதை தவிர இந்த போட்டியில் சாதகமான பெரிய விஷயம் என்று அதிகமாக எனக்கு சொல்லத் தெரியவில்லை.
வேட்பாளர்களின் பின்னணியை விட்டு விட்டு அவர்கள் கொடுக்கும் 500 ரூபாய் ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டு போட்டு விடுகிறார்கள் என்று மற்றவர்களை திட்டிய நான் மட்டும் இப்போது என்ன செய்திருக்கிறேன்?

5 லட்சம் ரூபாய் என்று அறிவிப்பை பார்த்ததும் 3 மாதம் உழைத்து 17ஆயிரத்து 500 வார்த்தைகளில் ஒரு குறு நாவலை எழுதி பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

ஒரு வார இதழில், இளையராஜாவும், பாரதிராஜாவும் இணைந்தால் ஹிட் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, ராஜாவால் இப்போதும் ஹிட் கொடுக்க முடியும். ஆனால் பாரதிராஜாவுக்கு சிறப்பான படமாக கொடுக்க வேண்டுமே என்ற மன அழுத்தம் ஏற்பட்டால் படைப்பு சிறக்காது. ஏனென்றால் நிர்ப்பந்தம் கலைத்திறமையை பாதிக்கும். எந்த அழுத்தமும் இல்லாமல் படைப்பை அதன் போக்கில் உருவாகவிட்டால் சிறக்கும் என்ற வகையில் பதில் அளிக்கப்பட்டிருந்தது.
உண்மைதான். இந்த 5 லட்சம் என்ற வார்த்தையை ஊக்கமாக எடுத்துக் கொண்டு, படைப்பு பரிசு பெறுகிறதோ இல்லையோ நம்மிடமிருந்து உருவான சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதினால் சிறக்க வாய்ப்பு உண்டு.
ஏனென்றால் மற்ற போட்டிகளிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் அமேசான் போட்டியில் ஸ்டார் ரேட்டிங் மற்றும் புத்தகத்தை படித்தவர்கள் இங்கிலீசில் பின்னூட்டம் இடும் எண்ணிக்கையை வைத்துதான் அடுத்த சுற்றுக்கு புத்தகம் செல்லும் என்ற அறிவிப்பு முழுவதும் சரியல்ல என்பது என்னுடைய கருத்து.
ஏனென்றால் சில பொறியியல் கல்லூரிகளில் உங்களை இந்த ஆண்டு வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மூன்று அல்லது ஐந்து மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று டார்கெட் வைப்பதாக சொல்கிறார்கள். அது உண்மையும் கூட. அந்த ஆசிரியர் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பாடம் நடத்த தோன்றுமா அல்லது ஆள் சேர்க்க தோன்றுமா?
இப்போது அமேசானில் 5 லட்ச ரூபாய் பரிசுப் போட்டியில் அதிக ரிவ்யூ வந்தால்தான் அடுத்த சுற்றுக்கு உங்கள் புத்தகம் செல்லும் என்றதும் எல்லாரும் ரிவ்யூ போடுங்கள் என்று (நான் உட்பட...) பதிவிடுவதற்கும் அந்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வித்தியாசம் என்ன என்பதை தேடிக் கொண்டிருக்கிறேன்.
அதே நேரம், போட்டியில் கலந்து கொள்வதுதான் முக்கியம். வெற்றி தோல்வியைப் பற்றி யோசிக்க கூடாது என்பதை மனதில் வைத்து, நல்ல படைப்பை உருவாக்க நினைப்பவர்களுக்கு நிச்சயமாக மந்திர வார்த்தைதான் 5 லட்சம்.
(இந்த பதிவை எழுதிய நான் ஒரு ரிவ்யூ கூட வாங்காததால் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று கருதாமல் சொல்லியுள்ள விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்.)
ஏனென்றால் அமேசானில் அடுத்த சுற்றுக்கு செல்லும் கதைகளில் சில வெப்சீரீஸ் ஆக உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்திருந்தார்கள். அடுத்த சுற்றுக்கு போகாத ஏன் ஒரு ரிவ்யூ கூட இல்லாத கதை கூட வெப்சீரீஸ் அல்லது சினிமாவுக்கு பொருத்தமான தகுதியுடன் இருக்கலாம்.
கடந்த ஆண்டு நான் இதே போட்டிக்காக எழுதிய செங்கம் டிராவல்ஸ் கதையை படித்த ஒருவர் மூலமாக, சினிமாவாக்க சரியாக வருமா என்ற விவாதம் போய்க் கொண்டு இருக்கிறது. சூழ்நிலை சரியாக அமைந்தால் அந்த கதை திரைப்படமாக விரைவில் உருவாகும்.
அதனால்தான்தான் சொல்கிறேன். போட்டி என்பது ஒரு களம். அதில் நமது சிறந்த படைப்பை கொடுக்க வேண்டும் என்பதில் முதல் கவனம் இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் விளம்பரம், மார்க்கெட்டிங் முக்கியம்தான். அதையும் வாய்ப்பு இருப்பவர்கள் செய்யட்டும். மற்றவர்கள் சிறப்பிடம் பெறுபவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் அடுத்தடுத்து நமது நல்ல படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் இறங்குவோம்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...