முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“கில்லியை” (அல்லது “ஒக்கடுவை”) எங்கிருந்து சுட்டிருப்பார்கள்?




கில்லிஎனக்குப் பிடித்த ஆக்‌ஷன் படங்களில் ஒன்று. அதுவும் விஜய்யின் வீட்டில் அவரது அறைக்குள் பதுங்கி இருக்கும் திரிஷா வரும் இடங்கள். ஒருமுறை அவரது அம்மா வந்து விட திரிஷா பொம்மைகள் நடுவே மறைந்து கொள்ளும் காட்சி வெகு அழகானது. கண்னிமைக்காமல் அவர், அந்த வெகுளி அம்மா சொல்வதைப் போல, ஒரு கண்கொள்ளா அழகு கொண்ட உயிருள்ள பொம்மையைப் போல இருப்பார். ஆனால் நம் இயக்குநர்களைத் தான் அப்படி சுலபத்தில் மனம் விட்டு பாராட்டி விடக் கூடாதே! நீங்கள் பாராட்டி விட்டு நிமிர்ந்தால் அதை எங்கிருந்தோ உருவின கதை தெரிய வரும். நேற்று இப்படித் தான் ஸ்பீல்பெர்கின் E.T. பார்த்துக் கொண்டிருந்த போது இதே போன்றதொரு காட்சி சட்டென இடறியது


E.T.யில் எலியட் எனும் சிறுவன் ஒரு குழந்தையைப் போன்ற, கள்ளங்கபடமற்ற, விளையாட்டுத்தனமான வேற்றுகிரகவாசியை கண்டடைகிறான். அந்த வேற்றுகிரகவாசி ஒரு ஆய்வுக்காக கூட்டமாக உலகத்துக்கு வந்த போது எதேச்சையாக இங்கேயே கைவிடப்படுகிறது. எலியட் அதை பாதுகாக்கிறான். அதற்கு மொழியையும் மனித வழக்கங்களையும் சொல்லித் தருகிறான். தனது சகோதரி மற்றும் சகோதரிக்கு அதை அறிமுகப்படுத்துகிறான். மூவரும் சேர்ந்து அதை திரும்ப தன் கிரகத்துக்கு அனுப்புவதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்; விசாரணை அதிகாரிகளிடம் இருந்து காப்பாற்றி கடைசியில் அதை ஒரு பறக்கும் தட்டில் ஏற்றி அனுப்பியே விடுகிறார்கள்

இதற்கு நடுவே ஒரு காட்சியில் எலியட் குளிர்பதனப்பெட்டியில் இருந்து பொருட்களை எடுக்கையில் வேற்றுகிரகவாசி ஏதோ பொருட்களை கவிழ்த்துப் போட்டு சத்தம் எழுப்புகிறது. அவன் அதற்கான உணவுடன் வந்து பார்க்க அது பொம்மைகளுக்குப் பின்னே பதுங்கி இருக்கிறது. அது மெல்ல தன்னை வெளிப்படுத்த அவன் அதனுடன் உரையாடிகிறான். இந்த சில வினாடிகள் வரும் காட்சித் துண்டை சற்றே அழகு கூட்டி ரொமாண்டிக்காக்கி, பூரிப்பை உணர்த்தும் பின்னணி இசையுடன், “கில்லிபடத்தில் அந்த பிரசித்தமான பொம்மைக் காட்சியை எடுத்திருக்கிறார்கள். அந்த சிறுவனின் இடத்தில் விஜய்; வேற்றுகிரகவாசியின் இடத்தில் திரிஷா
(கில்லி தெலுங்கு படம் ஒக்கடுவின் ரீமேக் என்பதால் மேலே சொல்லியுள்ள பணியை "ஒரிஜினலாக" தெலுங்கு இயக்குநர் குணசேகரே பண்ணி இருக்க வேண்டும்)








இந்த ஒற்றுமை புலப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த படமுமே ஒருவிதத்தில் E.T.யின் ஆக்‌ஷன் ரொமாண்டிக் மறு உருவாக்கம் தானே என கேள்வி எனக்குள் எழுந்தது. ஆம்

விஜய் எதேச்சையாக திரிஷாவை காப்பாற்றுகிறார். அதற்காக அவர் எதிர்கொள்ளும் பிரதான சவாலே தன் பெற்றோரிடம் இருந்து மறைப்பது; E.T.யிலும் இதுவே சவால். அடுத்து திரிஷாவை வெளிநாட்டுக்கு தப்பித்துப் போக வைக்க வேண்டும். E.T.யில் இது வேற்று கிரகம். இதற்காக விஜய் மொத்த தமிழக அரசு எந்திரத்துடனே மோத நேர்கிறது.  E.T.யில் குழந்தைகள் அரசாங்க அதிகாரிகளின் பெரும்படைக்கு எதிராக போராடி வேற்றுகிரகவாசியை காப்பாற்றி அனுப்புகிறார்கள். இதற்கு நடுவே கொஞ்சம் கபடி கபடி, அழகிரியை நினைவுபடுத்தும் பிரகாஷ்ராஜ், விஜய்யின் கலாட்டாக்களை சேர்த்தால்கில்லிதோன்றி விடுகிறது. முக்கியமான வித்தியாசம் கடைசியில் வெற்றிகிரகவாசி தன் கிரகத்துக்கு மீள, இங்கே திரிஷா விமானம் ஏறாமல் திரும்ப விஜய்யுடன் வாழ வருகிறார் என்பது. ஒரு குழந்தைகள் படத்தில் இருந்து ஒரு அடிதடி, பரபரப்பு, காதல் படத்துக்கான கதை வடிவத்தை எப்படி உருவுகிறார்கள் என யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது


பின்குறிப்பு: மணிரத்னம் இதற்கு முன்பே E.T. மற்றும் To Kill a Mocking Board ஆகிய படங்களின் காட்சிமொழியை பயன்படுத்திஅஞ்சலிபடத்தை எடுத்திருக்கிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...