Skip to main content

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் உளவியலும் பாஜகவின் எதிர்கால வியூகமும் (3)



அஸ்ஸாமில் அகதியென ஒருவரை தீர்மானிக்கும் உரிமையை நீதிபதிகள் அல்ல சட்டம் படிக்காத மக்களும் அதிகாரிகளுமே கொண்டுள்ளார்கள். பாஜக அரசு இதே பாணியையே இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்த முயலும். ஒருவர் தான் இந்நாட்டின் பிரஜை என நிரூபிக்க இன்னின்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவிக்கிறது என்றால் இந்த ஆவணங்களை ஏற்பது முழுக்க அரசு அதிகாரிகளின் விருப்புரிமை மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்கும்; அஸ்ஸாமில் அப்படித் தான் நடந்து வருகிறது - கார்கில் போரில் செய்த வீரசாகசத்துக்காக ஜனாதிபதியிடம் தங்கப்பதக்கம் பெற்ற ஒருவரையே - அவர் முஸ்லீம் என்பதாலும், ஆவணக்குழப்பத்தாலும், தடுப்பு முகாமுக்கு அனுப்பி விட்டார்கள். அரசு பரவலாக இதை நடைமுறைப்படுத்தும் போது இரண்டு விசயங்கள் நடக்கும்:


1) மாநில அரசின் பிரஜையாக தம்மை உணர்பவரும் மத்திய அரசின் அதிகாரத்தை தூலமாக தம் உடல் மீது உணர்வார்கள். மாநில அரசுகள், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாய் சொல்லும் அரசுகள் கூட, செயலற்று நிற்க, மத்திய அரசு தன் இரும்புக்கரத்தால் மக்களை ஒருபக்கம் ஒடுக்கும், மற்றொரு பக்கம் அபயமும் அளிக்கும். இதன் மூலம் மத்திய அரசின் கருணையின் பெயரிலே தாம் குடிமகனாய் அங்கீகரிக்கப்படுவதாய் நம்பி ஜனங்கள் தம்மீது நன்றியுணர்ச்சி கொள்வார்கள் என மோடியும் ஷாவும் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு மத்திய அரசின் ஒற்றை இந்தியா அடையாளமும் வலுப்பெறும்
2) தண்டனை தெளிவாக நேரடியாக வரும் போது மக்கள் அதை சகஜமாக எடுத்துக் கொள்வார்கள் என மோடியின் அரசுக்கு தெரிந்திருக்கிறது - அதனாலே, வீட்டை விட்டு ஓடிப் போன மகனை நோக்கி தந்தை சொல்வதைப் போல, நாங்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் அல்ல, இந்நாட்டு பிரஜைகளுக்கு எந்த பாதிப்பும் வராது என மோடி ஆறுதலாகப் பேசுகிறார். நாளை தண்டனை ஒரு சட்டத்தின் வடிவில் நாடு முழுக்க பாயும் போது ஜனங்களுக்கு அது பெரிதாகத் தெரியாது. ரூபாய் நோட்டு செல்லாது எனச் சொல்லி கோடிக்கணக்கானோரை இந்த அரசு நடுத்தெருவில் நிறுத்திய போதே அதை அமைதியாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதை மோடி அரசு பார்த்திருக்கிறது; ஆனால் ஆதாரமற்ற பயத்தினால் மக்கள் பதறிப் போய் தெருவுக்கு வந்து போராடுவார்கள், அவர்களுக்கு ஆதாரமான நேரடியான பயத்தைக் காட்டினாலோ சகஜமாக எடுத்த்க் கொண்டு அடிபணிவார்கள் என்பதை பாசிச அரசு நன்கு புரிந்து வைத்துள்ளது.
 மேலும் மக்களை ஆவணங்களை சமர்ப்பிக்கக் கேட்ட பின், குடிமக்கள் அல்லாதோர் வங்கிக்கணக்கு வைத்திருக்கவோ படிக்கவோ வேலை பார்க்கவோ, செல்பேசி பயன்படுத்தவோ, இணையத்தொடர்பு பெறவோ, சமையல் எரிவாயு வாங்கவோ, வாக்களிக்கவோ, வாகன ஓட்டுநர் உரிமம் பெறவோ, ஒரு வாடகை வீட்டில் ஓட்டல் அறையிலோ தங்க முடியாது என அச்சுறுத்திய பின், இந்த அரசு தொடர்ந்து தம் வலையில் மாட்டிக் கொண்டஅந்நியர்கள்’, ‘பாகிஸ்தானியர்’, ‘தீவிரவாதிகளின்பட்டியலையும் அவர்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பட்ட அறிக்கைகள், காணொளிகளையும் ஊடகங்களில் நேரலையாக வெளியிடும். அரை நூற்றாண்டாய் காங்கிரஸ் செய்யாதகளையெடுப்பைதாம் இப்போது பண்ணுவதாய் அமித் ஷா பாராளுமன்றத்தில் சூளுரைப்பார். இப்போது குடியுரிமை ஆவணம் வழங்கப்பட்டோர் தாம் கூடுதலாய் அங்கீகரிக்கப்பட்டதாய், மற்றமையாக உள்ளோர் சிறைப்பட்டதாய் உள்ளுக்குள் மகிழ்வர். சாலையில் ஒருவன் திருடன் என மக்களிடம் தர்ம அடி வாங்கும் போது அங்கு புதிதாய் திரள்வோரும் கேள்வியே கேட்காமல் தம் பங்குக்கு நாலு குத்து கொடுப்பார்கள் அல்லவா அந்த கும்பல் மனப்பான்மையை தான் பாஜக இப்போது இலக்காக்கி உள்ளது. இப்போது இஸ்லாமியன் என் சகோதரன் என தெருவுக்கு வந்து பதாகை உயர்த்தும் போராளிகள் அதே கருத்தை தடுப்பு முகாமில் சட்டரீதியாக அகதி என வரையறுக்கப்பட்டோரை நோக்கிக் கூறுவார்களா என்பதே பாஜகவின் கேள்வி. இதுவரை ஒருமுறை கூட நம் மக்கள் கைதிகளை, அவர்கள் ஆதாரமின்றி சிறைவைக்கப்பட்டாய் நம்பப்பட்டாலும், ஆதரித்து போராடியதாக வரலாறு இல்லையே! உங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவரைத் தேடி போலீஸ் வந்தால் அடுத்த நொடியே அவரை ஒரு குற்றவாளி என நமது மத்திய வர்க்க மனம் தீர்மானித்து விடாதா என்ன! ஒரு சின்ன சட்ட திருத்தம் மூலம் மக்களிடையே இப்போது கற்பனையாக உள்ள மதப்பிரிவினையை சட்டபூர்வமாக்கி நிரந்தரமாக, மறுக்க முடியாததாக மாற்றலாம் என நினைக்கிறது இந்த அரசு

மோடிக்கு அடுத்தபடியாய் பிரதமர் நாற்காலிக்கு அமித் ஷா நகர்வார் என்றால் அதற்கு அவர் தன்னை மோடிக்கு மாற்றாக, மோடியை விட மேலான தலைவராக, மோடியின் சில குறைகளைக் காட்டி அதை நிவர்த்தி செய்கிற தலைமையாக தன்னை கட்டமைக்க வேண்டும் - மோடி கராறானவர் ஆனால் இஸ்லாமியரை நேரடியாக தாக்காதவர்; மென்மையான ஆனால் உறுதியான இந்துத்துவர்; அமித் ஷாவோ இந்த தடுப்பு முகாம் அரசியலின் மூலம் தன்னை ஒரு இந்திய ராஜபக்‌ஷேவாக கட்டமைக்க முயல்வார். (ஒருவர் பயங்கர கறுப்பு, மற்றவர் கறுப்பாய் பயங்கரமானவர்) ஷா தான் மோடி கூட செய்யத் துணியாத களையெடுப்பை செய்தவர் தான் என பெயர் வாங்கி, அந்த ராணுவ அதிகாரத்தைக் கொண்டு தன்னை அடுத்த பிரதமராக அவர் முன்னிறுத்துவார். அவருக்குத் தேவையெல்லாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு முள்ளிவாய்க்கால் ரத்த சரித்திரம்

பாஜகவின் எதிர்கால அரசியல் முழுக்க முழுக்க ஹிட்லரின் ஜெர்மனியில் நடந்ததை மீளுருவாக்கம் பண்ணுவதாக இருக்கும் என நினைக்கிறேன். ஹிட்லர் எப்போதுமே தன் எதிரிகளை இரு முனைகளாய் கட்டமைத்தார் - வெளியே இருக்கும் சர்வதேச எதிரி தேசங்கள்; உள்ளே இருக்கும் யூத விரோதிகள். ஒருவர் தேசத்தின் எதிரி, மற்றவர் தேசவிரோதி. அவர் தொடர்ந்து ஆஸ்திரியா, போலந்து, யுகஸ்லேவோக்கியா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளை கைப்பற்றி வெளியே யுத்தச்சூழலை தக்க வைத்தார். அதன் மூலம் ஜெர்மனியின் சரியும் பொருளாதாரம் குறித்த பயங்களை மறக்கடித்தார். உள்ளுக்குள் வதைமுகாம்களை ஏற்படுத்தி யூதர்களை அங்கே அடைத்து வைத்து உள்-எதிரிகளையும் தொடர்ந்து தாக்கினார். இதன் மூலம் அவர் பெரும்பான்மை ஆரியர்களுக்கு தன்னை ஒரு ஹீரோவாக தொடர்ந்து சித்தரித்தார். பாஜகவுக்கு வெளிவிரோதி பாகிஸ்தான் என்றால் உள்விரோதி இஸ்லாமிய தேசவிரோதிகளும் அர்பன் நக்ஸல்களும்
இதன் பொருள் ஷா ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் முகாம்களுக்கு அனுப்புவார் என்பதல்ல. இங்கும் அவர் பிரித்தாளும் பல சூழ்ச்சிகளைக் கையாள்வார். இப்போது பாஜக தொடர்ந்து முன்னெடுக்கும் தர்க்கம் தம் கட்சியை எதிர்ப்பவர்கள் அனைவரும்தேசவிரோதிகள்என்பது. இந்த தர்க்கத்தை தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டு ஷா ஒரு சட்டமாக்க நினைக்கிறார் - இப்போது அரசை எதிர்ப்பவர்கள் உடனடியாக சட்டரீதியாக குடியுரிமையை இழப்பார்கள். இதன் மூலம் அரச / பாஜக எதிர்ப்பு என்பதே சட்டவிரோதம் எனும் எண்ணத்தை மக்களின் உளவியலில் ஷா திணித்து விடுவார். அடுத்து எங்கெல்லாம் இஸ்லாமியர் வலுவாக பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பாஜகவை அங்கீகரிப்பதே நாட்டின் குடிமக்களாக இருக்கும் ஒரே வழி எனும் நிலையை ஏற்படுத்துவார். தம்மை தேசபக்தர்களாக காட்டிக் கொள்ள இஸ்லாமியர்கள் தம்மை பாஜக ஆதரவாளர்களாக, அமித் ஷாவை போற்றுபவர்களாக காட்டும் நிலை ஏற்படும். பாஜகவை எதிர்க்கும் இஸ்லாமியரை தேசவிரோதிகள் என இந்த ஆதரவு இஸ்லாமியரைக் கொண்டு அவர் சொல்ல வைப்பார் (கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இதற்கு ஒரு நல்ல உதாரணம்). ஒரு பகுதி இஸ்லாமியரை அகத்களாக்கி மறுபாதியை குடிமக்களாக்கி பிரித்தாள்வார். மெல்ல மெல்ல இஸ்லாமியரும் தம் வழிக்கு வந்து இஸ்லாத்தை வெறுக்கும் இந்துத்துவ ஆதரவாளராக மாறூவார்கள் என பாஜக நம்புகிறது - ஜெர்மனியில் ஒரு பகுதி யூதர்களை ஹிட்லருக்கு தொடர்ந்து உதவியதை, ஆதரவாக இருந்ததை, வதைமுமாம்களுக்குள் கேப்போஸ் எனப்படும் சிறப்புரிமை பெற்ற யூதக் கைதிகள் தம் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டதை இதற்கு வரலாற்று ஒப்புமையாகக் காட்டலாம்


தேசிய குடிமக்கள் பதிவேடு நிறைவேறும் நாள் இங்கு ஆயிரக்கணக்கான தடுப்பு முகாம்கள் வெளிப்படையாகவே செயல்படும். இலங்கையில் ராஜபக்‌ஷே நடத்திய இனவெறி அரசியல் இங்கு பலமடங்கு உக்கிரத்துடன், பெரும் ஒடுக்குமுறை வீச்சுடன் நடந்தேறும். நாம் அடுத்த பத்தாண்டுகளில் இந்த மக்கள் அழித்தொழிப்பின் வரலாற்றை கடந்து வந்தாலும் கூட அதன் ரத்தக்கறை நம் நெஞ்சங்களில் இருந்து நீண்ட காலத்துக்கு மறையாது. அந்த நாள் வரும் போது இப்படி ஒரு கட்டுரை எழுதியமைக்காக என்னையும் அகதியென அறிவித்து ஒரு தடுப்புமுகாமுக்கு அனுப்பி விடுவார்கள். இக்கட்டுரையை ஏந்திய இதழை வைத்திருந்தமைக்காக உங்களையும் அகதியாக்கி அனுப்புவார்கள். நம் கைகள் கட்டப்படும், நம் கண்கள் இருட்டாக்கப்படும்


இதைத் தடுக்க வேண்டுமெனில் நாம் முதலில் இந்த தடுப்பு முகாம்களை இடித்து தரைமட்டமாக வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் போது அதை முற்றுகையிட்டு போராட வேண்டும். உண்மையில் அத்தகைய போராட்டங்களே இந்த அரசை அசைக்கும், பதற்றமடைய செய்யும். இப்போது நடக்கும் போராட்டங்கள் அல்ல.
(நன்றி: உயிர்மை, ஜனவரி 2020)

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...