முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிழல் நிஜமாகிறது



என்னுடன் பணிபுரியும் ஒரு கவிஞரிடம் தொடர்ந்து நாவல் எழுதும் போது ஏற்படும் ஒரு மனக்குழப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நாவலில் வரும் பாத்திரங்களின் கடுமையான அகப்பிரச்சனைகள், குழப்பங்கள், தவறான முடிவுகள், அதன் அவலங்கள் அவற்றை எழுதும் போது அப்படைப்பாளியைத் தீண்டுவதில்லை. எழுதும் போது ஒரு கண்ணீர் மல்கிய உரையாடலோ பதற்றமாக்கும் விவரணையோ நாவலாசிரியனுக்கு இன்பமான கிளர்ச்சியையே அளிக்கிறது. ஆனால் அன்றைக்கான எழுத்தை முடித்து விட்டு அவன் தன் அன்றாட வாழ்வுக்கு மீளும் போது மனத்தில் ஒரு இருள் வந்து கவிகிறது.


 அந்த இருளுக்கும் அன்றாட வாழ்வுக்கும் சம்மந்தம் இருக்காது. அன்றாட வாழ்வு எளிதாக சுகமாக இருக்கும் போது நீங்கள் ஏதோ கொலைக்களத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். மனம் எழுதி முடித்ததில், அடுத்து எழுதப் போகிறதில் உழன்று கொண்டே இருக்கும். மனதைத் திருப்பும் விதம் பொழுதுபோக்கில் சம்பாஷணைகளில் ஈடுபட்டாலும் அது விட்டுப் போவதில்லை - எரிச்சலாக கோபமாக மாறி உங்களை தொந்தரவு பண்ணியபடி இருக்கும். சில நேரம் இதனாலே நான் அன்றன்றைக்கு எழுதும் பணியை தள்ளிப் போட்டபடியே இருப்பேன்; வாசிப்பது கூட நாவலுக்குள் வருகிற சிக்கல்களை நினைவுபடுத்தும் என்பதால் அதுவும் இதம் தராது. நாவல் எழுத வேண்டிய நேரத்தில் நான் பல்வேறு சின்ன வேலைகளில் என்னை பிஸியாக்கிக் கொள்வேன். சில நேரம் கட்டுரை எழுதுவேன். ஆனால் அன்று தூங்கும் முன் சில வரிகளாவது நாவலில் எழுதித் தானே ஆக வேண்டும், அப்போது மீண்டும் பேய் வந்து தலைக்குள் உட்கார்ந்து கொள்ளும்.

இன்னொரு சிக்கல் தொடர்ந்து எழுதி வரும் போது நாவலில் உள்ள சம்பவங்களும் மனிதர்களும் நிஜமாகவும் அன்றாட வாழ்வில் நம்முடன் இருப்பவர்கள் முக்கியமற்றவர்களாகவும் (பொய் என்றல்ல) தோன்றுவது; இதை வளர விட்டால் நிஜம் நிழலாகும்; நிழல் நிஜமாகும்.

 நாவல் எழுதும் காலத்தில் நான் எந்த எழுத்தாளனுடனும் இருந்து கவனித்ததில்லை; ஆனால் ஜெயமோகன் அக்காலத்தில் மனத்தொந்தரவுக்கு உள்ளாவார் என்றும், நாவல் எழுதி முடித்த பின் ஒவ்வொருமுறை எஸ்.ரா உடல்நலிவுற்று மருத்துவமனியில் சேர்க்கப்படும் அளவுக்கு செல்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்மையில் தமிழ்நதி பேஸ்புக்கில் நாவல் எழுதுகையில் தான் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகளைப் பற்றி எழுதி இருந்தார்.

மராத்தான் ஓட்டம் குறித்து முராகாமி எழுதி புத்தகத்தில் (What I Talk about When I Talk about Running) இது நமது அடிமனத்தின் தீவிர உணர்வுகள் மேலெழுந்து வருவதன் நெருக்கடி என்கிறார். மெல்லுணர்வுகளால் ஆன எழுத்தாளனால் தான் எழுதும் மொழிக்கு வெளியே இந்த உணர்வுகளை கையாள முடிவதில்லை என்கிறார். முராகாமி இதற்கு உடற்பயிற்சியை ஒரு தீர்வாக சொல்கிறார் - ஆனால் எனக்கு உடற்பயிற்சி எப்போதும் தற்காலிகத் தீர்வையே தந்துள்ளது


நான் சொல்வதையெல்லாம் கேட்டு விட்டு கவிஞர் தனக்கு ஒரு கவிதையை எழுதி முடிக்கும் போது இப்படியான மனநிலை ஏற்பட்டதுண்டு எனச் சொன்னார். ஆச்சரியமில்லை, கவிதை என்பது ஒரு உன்மத்த நிலையில் எழுதப்படுவது அல்லவா! மொழியில் ஏற்படும் ஒருவித கோர-விபத்து தான் கவிதை. ஒரு சிறந்த கவிதைகளுக்குள் நுழைந்து ரத்தமும் சகதியுமாய் வெளியேறும் கவிஞன் அவ்வளவு மனத் திளைப்புக்குப் பிறகும் இயல்பாக அன்றாட காரியங்களை பார்த்து விட்டு இருப்பதே ஒரு பெரிய சாதனை தான் என்பேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...