முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது? (1)

விடுமுறை வாசிப்புக் குறிப்புகள் (1)


ஒருநாள் திடீரெனஇன்னிக்கு முராகாமி படிக்கணும்எனத் தோன்றியது. காரணமேதும் இல்லை. சும்மா அப்படி ஒரு மனநிலை. அவரது புத்தகங்களை சென்னையிலே விட்டு வந்திருக்கிறேன் என்பதை இப்போது அலமாரியில் தேடிய போது தான் தெரிந்தது. பல்கலைக்கழக நூலகத்தில் தேடினால் கிடைத்தது Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage நாவல் மட்டுமே. 2012இல் ஜப்பானிய மொழியில் வெளியான இந்நாவல் ஒரே மாதத்தில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது. 2014இல் ஆங்கிலத்தில் வெளியானது.

படித்த மூன்று நாட்களில் இந்நாவல் என்னை மற்றொரு உலகுக்கு மந்திரக்கம்பாளம் போல தூக்கிச் சென்றது. இந்த விடுமுறை வாசிப்புக் குறிப்புகளில் முதலில் இந்த புத்தகம் பற்றி பேசுகிறேன்.

முதலில் இது என்ன ஒரு சாதாரணத் தலைப்பு என நினைத்தேன். ஆனால் வசித்து முடித்ததும் எவ்வளவு பொருத்தமான அழகான தலைப்பு எனத் தோன்றியது: Colorless Tsukuru Tazaki எனும் தலைப்பிலேயே நாவலின் plotline வந்து விடுகிறது. அது என்ன என அடுத்து சொல்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த தலைப்பு தான்.


முராகாமியின் நாவல்களுக்கு ஒரு டெம்பிளேட் உண்டு - ஒரு இனம்புரியாத இழப்புணர்வு, அது நாயகன் அல்லது நாயகியை செலுத்தும்; பல வினோத சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்டு அவனை ஒரு சுழலுக்குள் இழுத்து செல்லும். கதை முடியும் போது அவன் தெளிவடைந்திருப்பான், கூடவே நாமும். முராகாமியை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்ற Norwegian Wood தவிர பெரும்பாலான நாவல்கள் மாய எதார்த்த கதைகளே. மாய எதார்த்தம் நாவலுக்கான எழுத்துமுறை அல்ல என எனக்குத் தோன்றும். அது சிறுகதைக்கு ஏற்றது. குறுநாவல்களில் கூட எடுபடும். ஆனால் நீண்ட நாவல்களில் மாய எதார்த்தத்தைக் கையாண்டால் கண்ணைக் கட்டி விட்டது போல ஆகும். மார்க்வெஸைப் போன்ற சாதனையாளர்கள் மாய எதார்த்தத்தை வரலாற்றுடன் பிணைத்து வரலாறும் எதார்த்தமும் வெறும் புனைவுகளே, புனைவுகள் மட்டுமே உண்மை எனக் காட்டுவார்கள். வரலாறும் லத்தீன் அமெரிக்க சமூக அரசியல் சூழலும் மார்க்வெஸுக்கு பெரிய பலம். முராகாமிக்கு அப்படி அல்ல. அவர் தனது நாவல்களில் ஐம்பது, அறுபதுகளின் ஜப்பானையோ இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஜப்பானையோ பின்னணியாக கையாண்டாலும் கூட அவரது கதைகள் தனிமனிதர்களின், வரலாற்றில் இருந்து வெளியே நிற்கும், உளவியல் கதைகளே.
 முராகாமியின் நாயகர்கள் நான் ஏற்கனவே சொன்னதைப் போல முழுமையற்றவர்கள்; அவர்கள் அதை உணரும்படி ஒரு காதலி மறைந்து போகலாம், மனைவி விலகி செல்லலாம், பூனையொன்று காணாமல் போகலாம் (Wind-up Bird Chronicle), சொந்த அப்பாவை மகன் கொல்ல நேரலாம், ஒரு விபத்தில் தன் புத்திசாலித்தனத்தை இழந்து பேதையாகிப் போன ஒருவன் தான் நிஜத்தில் பேதை அல்ல, மாறாக அப்படி ஆக்கப்பட்டதாய் உணர்ந்துகொள்ள நேரலாம் (Kafka on the Shore) ... இப்படி எது வேண்டுமெனிலும் நடக்கலாம். இதன் பிறகு முராகாமி இந்த இழப்புணர்வை கவித்துவமான ஒரு சாகசப்பயணமாக மாற்றுவார், நாயகனின் குழப்பங்கள், சிக்கல்களை நம்முடைய குழப்பங்கள், சிக்கல்களாகவே உணரச் செய்வார். ஒரு பாத்திரத்தை, அவனது வினோதச் செயல்களை உருவகமாக்குவார். ஹெமிங்வே, கார்வரின் மினிமலிச எதார்த்தத்தை லத்தீன் அமெரிக்க நாவல்களின் மாய எதார்த்தத்தோடு கலந்து, ஜப்பானிய தொல்கதைகளை குறிப்புணர்த்தி, ஒரு தனி கலவையாக, ரசனையான மொழியில் எழுதுவார் (தன்னுடைய மொழியைக் கண்டடைய அவர் முதலில் ஆங்கிலத்தில் எழுதி அதை ஜப்பானில் மொழியாக்கியதாக ஒரு கதை உண்டு). இப்படியான கதையமைப்புகள் சிரசாசனம் பழகியபடி காதலிக்கு உதட்டு முத்தம் கொடுப்பதைப் போல - எல்லாம் சரியாக அமைந்து வரவேண்டும்.

 South of the Border, West of the Sun நாவலை இதற்கு உதாரணம் காட்டலாம் - அந்நாவல் முழுக்கவே இல்லாத ஒரு பெண்ணைப் பற்றியது, அவளுடன் நாயகன் கொள்ளும் நடக்காத கள்ள உறவைப் பற்றியது; கொஞ்சம் பிசகினால் மொத்த நாவலும் அபத்தம் எனப்படும். மேலும், இப்படியான ஒரு நாவலில் முழுக்க மனப்பிராந்திகளைப் பற்றி கவித்துவமான தீவிரமான தொனியில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு செல்ல முடியாது; திகட்டி / அலுத்து விடும். முராகாமி இந்த கவித்துவத்தை அன்றாட வாழ்வின் சாதாரணத்துவத்துடன் பின்னியெடுத்துச் செல்லும் பாங்கினால் இப்பிரச்சனையை வெற்றிகரமாக கடந்து செல்கிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...