முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷ்யபுத்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்





சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்த பிறகு நான் அதிகம் மிஸ் பண்ணுவது மனுஷ்யபுத்திரனைத் தான் - முன்பு மாதம் சில முறைகளாவது அவரைப் போய் சந்தித்து பேசிக்கொண்டிருப்பேன். அவர் வீட்டுக்குப்போய் சில நேரம் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். லல்லி அங்கிருந்த போது மதிய உணவு சாப்பிடுவேன். ஆச்சரியமாக அங்கு நான் இலக்கிய வம்பு எதுவும் பேசியதில்லை; கவிதை மற்றும் நாவல் குறித்து தான் அதிகம் நாங்கள் உரையாடியிருப்போம். அரை மணிநேரம் பேசி விட்டு வரும் போது எனக்குள் ஒரு வாரம் எழுதுவதற்கான உத்வேகமும் நம்பிக்கையும் தோன்றியிருக்கும். அரசியல் சமூக விசயங்களை அவருடன் பேசினால் பெரும்பாலும் நான் மாற்றுத்தரப்பைத் தான் எடுப்பேன். ஆனால் அவரிடம் விவாதித்து ஜெயிக்க முடியாது. அதனால் வீட்டுக்கு வந்த பிறகு என் தரப்பை ஒரு கட்டுரையாக எழுதி உயிர்மை அல்லது உயிரோரையில் பிரசுரிப்பேன். 2010-14 வாக்கில் நான் எழுதிய பல கட்டுரைகள் இப்படித் தோன்றியவை தாம். ஒருநாளும் அவர் என் சிந்தனைப்போக்கை மாற்ற முயன்றதில்லை - சு.ராவின் அதே கனவான்-தனம், உரையாடலில் திறந்த மனப்போக்குடன் ஈடுபடும் குணம், எப்போதும் நம்மை மதிப்பிட்டு விடாமல், பாடம் சொல்லித் தர முயலாமல் பேசும் போக்கு மனுஷ்யபுத்திரனிடம் உள்ளது. அதனால் தான் பெங்களூர் வந்த பிறகு மார்ச்சுவரியில் வாழும் அலுப்பு ஏற்படுகிறது - இங்கே பேச்சு என்றால் ஒன்று வம்பு அல்லது தகவல் பரிமாற்றம்; மனுஷைப் போல உரையாலை ஒரு கலையாகப் பயில தெரிந்தவர்கள் இங்கு இல்லை
கடந்த வருடம் மனுஷ்யபுத்திரனுக்கு படைப்புரீதியாக செழிப்பாக காலம் - எழுதிக் குவித்திருக்கிறார்; கட்டுரைகளைக் குறைத்து கவிதைகளில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறார்; பலரையும் பொறாமைப்பட வைக்கும்வைரல்கவிதைகள் எழுதினார். அவரது கவிதையை ஒட்டித் தோன்றிய இலக்கிய, அரசியல் சர்ச்சைகள் நின்றுஎரிந்தன’. எத்தனைக் கட்டுரைகள், விவாதங்கள், அடிதடிகள் பாய்பெஸ்டி கவிதையை ஒட்டி. இதையெல்லாம் பிரபல இதழ்களின் துணையின்றி, பேஸ்புக்கை மட்டும் கொண்டு செய்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. ஒரு அதிகார பீடம், செல்வாக்கு மையம் எனும் பிம்பம் அவரைச் சுற்றி தோன்றியிருந்தாலும் உண்மையில் அப்படி எந்த அடியாள் பலமும் இல்லாத தனியாள் அவர். சொந்தக் கவிதைகளை வெளியிட ஒரு பதிக்கம் உண்டு என்பதைத் தவிர அவருக்கு எந்த சங்குசக்கரமும் இல்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு அவதூறுகள், துவேஷம், தனிப்பட்ட தாக்குதல்கள் - அரைஜீவனுடன் வேலை செய்து கொண்டிருப்பவருக்கு எந்த எதிர்மறை விமர்சனங்கள் ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்து விடுகிறது; எழுந்து அமர்ந்து இன்னும் கூடுதலாக எழுதத் தொடங்குகிறார்.

இவ்வருடமே மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த 60 காதல் கவிதைகளை நான் ஆங்கிலத்தில் மொழியாக்கிய Kisses at Daybreak நூல் வெளியானது. என்னுடைய வேறெந்த புத்தகமும் இந்தளவுக்கு கவனம் பெற்று நான் கண்டதில்லை. எனக்கு இலவசமாய் கிடைத்த சில பிரதிகள் கல்லூரியில் நடந்த இலக்கிய விழாவின் போதே பரபரப்பாய் விற்றன. புத்தகத்தை வாங்கிப் போனவர்கள் திரும்பத் திரும்பப் படித்ததாய், அதனோடே வாழ்வதாய் சொல்கிறார்கள்; குறிப்பாய் பெண்கள் இப்புத்தகத்தை கொண்டாடுகிறார்கள். இந்த அந்நியச் சூழல், என் வாழ்வில் ஏற்பட்ட துயரங்கள், இங்குள்ள தனிமை, என்னைத் துரத்திய தற்கொலை எண்ணங்கள், பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் அதிகமாய் நான் புழங்க நேர்வது என இந்த நூல் தோன்றியதற்கு பல காரணங்கள். மனுஷ்யபுத்திரன் என் நண்பர் என்பது இறுதிக் காரணம் மட்டுமே. அவரது காதல் கவிதைகளின் உன்மத்தம், பைத்திய வேகம் ஆகியவற்றை நான் என் கண்களில் வழியும் கண்ணீரின் வெம்மை வழியாக மிக அந்தரங்கமாக உணர்ந்த காலத்தில் செய்த மொழியாக்கம் இது. இந்த புத்தகத்தை நான் சென்னையில் இருந்திருந்தால் மொழியாக்கியிருக்க மாட்டேன் எனத் தோன்றுகிறது.
மேலும் இரு விசயங்கள்:
1) தன்னுடைய அந்தரங்கத் தோல்விகளை, ஏமாற்றங்களை உடல் மீது திருப்பி விடும் பழக்கம் அவருக்குண்டு என நினைக்கிறேன் - எப்போதெல்லாம் கசப்புகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் மனுஷின் உடல்நிலையும் சீர்கெட்டு விடும். நான் பெங்களூருக்கு வரும் முன்பே அவரது நீரிழிவு சீராக இல்லை என அறிவேன். அது குறித்து எனக்கு கவலை இருந்தது. அவருடைய மனக்கட்டுப்பாட்டுக்கு உடலை சீராக வைப்பது பெரிய விசயமில்லை. ஆனால் உடலை பழிவாங்கிக் கொண்டே இருந்தார், தன்னையறியாமலே, வேண்டுமென்றே. அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அவர் இருந்த போது எனக்கு இதனாலே மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. கடுமையாகப் போராடி மீண்டு வந்து விட்டார். இனிமேல் இப்படியான ஒரு நிலை அவருக்கு ஏற்படக் கூடாது.
2) அவரைச் சுற்றி இன்னும் நிறைய பேர் எப்போதும் இருந்துகொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதே போல் வரும் சட்டமன்றத் தேர்தலுடன் அவரது அரசியல் வாழ்க்கையிலும் பெரிய மாற்றமும் ஏற்றமும் நிகழ வேண்டும். கலகலப்பான மலர்ச்சியான ஒரு சூழலுக்கு அவர் மீள வேண்டும்; மீள்வார் என என் உள்ளுணர்வு சொல்கிறது. நாளை நமதே!

கவிஞருக்கு என் பேரன்பும் வாழ்த்துக்களும்!

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...