முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டிராகுலாவும் விமர்சகர்களும்

டிராகுலாவைப் பார்க்க வந்த விமர்சகர்

விஷ்ணுபுரம் வட்ட எழுத்தாளர்களின் இரண்டு பொதுக்குணங்கள்: 

1) மொழியில் மட்டுமல்ல கருத்துக்களில் கூட ஜெயமோகனை பிரதியெடுப்பார்கள். ஆனால் பேசும் போது தனித்துவமான ஆளுமை கொண்டிருப்பார்கள். எழுதும் போது தான் ஆசானின் ஆவி இறங்கி விடும் விசித்திரமான பிரச்சனை. இந்த வட்டமெல்லாம் ஆரம்பிக்கும் முன்னர், சுமார் 18 வருடங்களுக்கு முன்பு, தீராநதியில் ஒரு விமர்சனக் கட்டுரை படித்து விட்டு ஜெயமோகனிடம்நீங்க புனைப்பெயரில் எழுதின அந்த கட்டுரை நல்லா இருந்துச்சுஎன்றேன். உடனே அவர் சிரித்தபடிஎனக்கு புனைப்பெயரெல்லாம் இல்ல. அவர் என்னோட தீவிர வாசகரான ஒரு இளம் எழுத்தாளர்என்றார்


2) எந்த இலக்கிய விமர்சனம் என்றாலும் படைப்பாளியும் எழுத்தாளனும் ஒன்றே என நம்புவார்கள்
அதாவது படைப்பில் வெளிப்படுவது எழுத்தாளனின் சொந்த அபிப்ராயம், சொந்த வாழ்க்கை அனுபவத்தில் உண்டான நிலைப்பாடு எனக் கூறுவார்கள். உலக அளவில் விமர்சனத்தில் இந்த வாழ்க்கை சரிதப் பார்வை பின்னடைவு பெற்று சுமார் 100 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் ஆசான் நீண்ட காலமாக, ஒரு பக்கம் எழுத்தாளன் தன் தனிப்பட்ட அனுபவங்களை கற்பனையினால் கடந்து செல்ல வேண்டும் எனச் சொல்லியபடியே முரணாக தன் இலக்கிய விமர்சனங்களில் ஒருவரது படைப்பைக் கொண்டு அவரது வாழ்க்கையை கட்டமைக்கும் வேலையை செய்து வருகிறார். .தா., சுந்தர ராமசாமியின் படைப்புலகைப் பற்றிப் பேசும் போது அதில் முழுக்க முழுக்க சு.ராவின் சொந்த நம்பிக்கைகளே வெளிப்படுகின்றன என ஆசான் சொல்கிறார். “நினைவின் நதியில்படித்தீர்கள் என்றால் முதல் பாதியில் சு.ராவின் ஆளுமையை சொந்த வாழ்க்கை சித்திரங்கள் மூலம் நிறுவி விட்டு அதில் இருந்து எப்படி அவரது புனைவுலகு தோன்றுகிறது என ஆசான் நிரூபிக்க முயல்வதைப் பார்க்கலாம். ஆனால் இது உண்மை இல்லை. பல சமயங்களில் நாம் எழுதுவதற்கும் நம்புவதற்கும் தொடர்பிருக்காது. நம்மை மீறி முரண்பட்டு நாம் இயங்குவதே புனைவெழுத்து. அப்போதே அது ரசனைக்குரியதாகிறது. அசோகமித்திரன் இதற்கு நல்ல உதாரணம் - அவரது அரசியல் சமூகக் கருத்துக்கள் பிற்போக்கானவை. ஆனால் அவரது புனைவெழுத்தில் அந்த சிறுமையின் நிழல் கூட இராது. அதனால் தான் எழுத்தாளனின் எண்ணங்களும் படைப்புக் குரலும் வேறுவேறு எனும் நம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே பரவலாகியது. இதன் பிரசித்தமான உதாரணமேபடைப்பாளி இறந்து விட்டான்எனும் ரொலாண்ட் பார்த்தின் கூற்று. படைப்பாளி இறக்கும் போது அவன் தன் நம்பிக்கைகளை உடைத்துக் கொண்டு மற்றமையின் கண்ணோட்டத்தில் இருந்து உலகை சித்தரிக்கிறான் (படைப்பாளி நிஜமாகவே சாவதில்லை).
 ஆனால் இதில் ஒரு பிரச்சனை உண்டு - படைப்பு பல முரண்பட்ட குரல்களில் உங்களிடம் பேசும் போது நீங்கள் அதைத் தொகுக்க முடியாமல் திகைக்கிறீர்கள். குழம்புகிறீர்கள். அப்போது பலவீனமான வாசகர்கள்சுயபாதுகாப்புக்காகஅந்த குரல்களில் ஒன்றை எழுத்தாளனின் குரலாக நினைத்துக் கொள்வார்கள் (ரசிகர்கள் எம்.ஜி.ஆரை அவர் நடித்த கதாபாத்திரமாகவே நம்பி திரையை நோக்கி கத்தியை வீசியதைப் போல). பின்னர் அக்கதை எழுத்தாளனின் சொந்தக் கதை என விரித்துக் கொள்வார்கள். இப்போது படைப்பாளிக்குப் பதில், படைப்பும் வாசகனும் செத்துப் போகிறார்கள். ஆசான் தனது சுவிசேஷக் கூட்டங்களில் தொடர்ந்து இந்த தவறான பார்வையை போதிக்கிறார் - நேரடியாக அல்ல, மறைமுகமாக. கவனித்தீர்கள் என்றால் அவர் எப்போதும் விமர்சன உரைகளில் ஒரு எழுத்தாளனின் ஆளுமையைப் பற்றிப் பேசி விட்டே அவனது எழுத்துக்கு செல்வார். இந்த டிரெண்ட் அப்படியே அவரது வாசக-எழுத்தாளர்களுக்கும் தொற்றிக் கொண்டது. அவர்கள் தம்மை அறியாமலே அப்படித் தான் விமர்சிக்கிறார்கள்.
 .தா. “டிராகுலாநாவலைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எழுதியவர் அபிரகாம் ஸ்டோக்கர். நம்முடைய வட்டத்தினர்டிராகுலாவைவிமர்சிப்பதானால் ஸ்டோக்கரை மேடையில் அமர வைத்து எப்படி அவர் சின்ன வயதில் இருந்தே ஒரு டிராகுலாவதற்கான இயல்புகளைக் கொண்டிருந்தார் எனப் பேசிப் பேசி ஒரு கட்டத்தில் ஸ்டோக்கரையே கதறக் கதற தான்நான் டிராகுலா தான்என வாக்குமூலம் தர வைத்து விடுவார்கள். நம்முடைய போலீஸ்காரர்கள் சந்தேகத்துக்குரிய நபர்களை குற்றவாளிகளாக ஏற்க வைக்கும் அதே டெக்னீக்கை எழுத்தாளர்கள் விசயத்திலும் இவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதே துயரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...