Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

வாசிம் அக்ரம்: வேகப்பந்து வீச்சின் கடவுள்


கடவுள் பேட்டிங் செய்வதற்கென சச்சின் டெண்டுல்கரை உருவாக்கினார் என்றால் மின்னல் வேகத்தில் பந்தை வீசுவதற்கும் விருப்பம் போல் ஸ்விங் செய்வதற்கும் வாசிம் அக்ரமை பூமிக்கு அனுப்பினார். வேகம் + ஸ்விங் = வாசிம் அக்ரம். அவருக்கு இணையில்லை.

எனக்கு அடுத்த ஜன்மம் என்று உண்டென்றால் வாசிம் அக்ரமாக பிறக்க விரும்புகிறேன்”, என்றார் ஆலன் பார்டர். ஆலன் பார்டர் ஆஸ்திரேலியாவின் சிறந்த அணித்தலைவர்களில், பேட்மென்ஸ்களில் ஒருவர். ஜெப் தாம்சன், டென்னிஸ் லில்லி, மெக்ராத் போன்ற சிறந்த வேகவீச்சாளர்களை தன் அணியில் கண்டுள்ள ஆலன் பார்டர் இதை சொல்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். ஆலன் பார்டர் ஏன் டான் பிராட்மேனாகவோ, சச்சின், லாராகவாகவோ பிறக்க விரும்பவில்லை? ஏனென்றால் கிரிக்கெட்டில் மிகவும் சிரமம் வேகமான மேஜிக் பந்துகளை வீசுவது. ஆஸ்திரேலிய மண்ணில் மட்டுமல்ல, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் எங்கும் அக்ரமை போல் ஒரு வேகவீச்சாளர் தோன்றவில்லை. மெக்ராத், டொனால்ட், ஆம்புரோஸ் போன்ற உலகின் சிறந்த வேகவீச்சாளர்களே வாசிம் அகரமை தான் தாம் பார்த்ததிலேயே மிகச்சிறந்தவர் என்கிறார்கள்.

வாசிம் அக்ரம் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?

கிரிக்கெட்டில் ஒன்று வேகமாய் வீசலாம். அல்லது வேகத்தை குறைத்துக் கொண்டு ஸ்விங் செய்யலாம். வாசிம் அக்ரம் ரெண்டையும் சுலபமாய் சாதித்தார். அது மட்டுமல்ல 145 கிலோமீட்டர் வேகத்தில் அவரால் பந்தை சற்றே தாமதமாக உள்ளே வெளியே என ஸ்விங் செய்ய வைக்க முடிந்தது. அதனால் தான் அவர் மிகவும் ஆபத்தானவர் என்கிறார் இங்கிலாந்தின் முன்னாள் பேட்ஸ்மேன் கிரகாம் கூச். வாசிம் அக்ரமை 145 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் ஷேன் வார்ன் எனலாம். அவர் தன் வேகத்தால் பேட்ஸ்மெனை அச்சுறுத்த மட்டுமில்லை, இனம்புரியாத ஸ்விங்கால் குழப்பவும் செய்தார். ஒரு ஒருநாள் ஆட்டத்தில் அவர் over the wicket வந்து சச்சினுக்கு வீசுகிறார். அக்ரமின் உள்ளே வரும் பந்து ஆபத்தானது. அப்பந்தால் சச்சின் முன்பு LBW ஆகியிருக்கிறார். அதனால் சச்சின் அப்பந்தை கால் பக்கமாய் அடிக்க பார்க்கிறார். ஆனால் நடு ஸ்டம்பில் விழும் பந்து இம்முறை வெளியே சென்று off ஸ்டம்பை நொறுக்குகிறது. சச்சின் மிகுந்த திகைப்புடன் வெளியேறுகிறார்.
அக்ரம் பந்தை பற்றியுள்ள விதத்தை கொண்டு பந்து உள்ளே வருகிறதா வெளியே போகிறதா என்று கணிக்க முடியாது. ஏனென்றால் பொதுவாக வேகவீச்சாளர்கள் ரன் அப்பை முடித்ததும் கிரீசில் குதித்து பந்தை வீசுவார்கள். அக்ரம் மட்டும் ஓடி வந்த வாக்கில் வீசுவார். அவரது கை மிக வேகமாய் சுழலும். அது போதாதென சில நேரம் பந்தை இன்னொரு கைக்குள் ஒளித்தபடி ஓடி வருவார்.
பந்தை ஸ்விங் செய்வதிலும் அக்ரம் அபாரமான கட்டுப்பாடு கொண்டிருந்தார். 1999இல் சென்னையில் நடந்த டெஸ்ட் ஆட்டத்தில் அவர் ஓவர் தெ விக்கெட் வந்து திராவிட்டுக்கு உள்ளே வரும் பந்துகளாக வீசிக் கொண்டிருந்தார். திராவிட் உலகின் மிகச்சிறந்த தடுப்பாட்டம் கொண்டவர். இன் ஸ்விங் மூலம் அவர் தடுப்பாட்டத்தை முறியடிக்க முடியாது. அன்று அக்ரம் வீசுவதைக் கண்ட திராவிட் உள்ளே வரும் பந்துக்கு பவுல்ட் ஆகக் கூடாது என கவனமாய் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அக்ரம் ஒரு பந்தை மிடில் ஸ்டம்பில் இருந்து ஆஃப் ஸ்டம்புக்கு நகர்த்தினார். பவுல்ட். திராவிட் சச்சினைப் போன்றே மிகுந்த குழப்பத்துடன் வெளியேறினார்.
1992 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இதே போன்று வெளியே போகும் பந்தை அக்ரம் ரவுண்ட் தெ விக்கெட் வந்து வீசி ஆலன் லாம்பை பவுல்ட் ஆக்கினார். அவருக்கு அடுத்த வந்த பேட்ஸ்மேனை உள்ளே வரும் பந்தால் பவுல்ட் ஆக்கினார். உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றது; அக்ரம் ஆட்டநாயகனாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தெருவின் இருட்டில் இருந்து உலக அரங்கின் வெளிச்சத்துக்கு

வாசிம் அக்ரம் 1966இல் பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். சிறு வயதில் தெருவிலும் மொட்டைமாடியிலும் டென்னிஸ் பந்தால் கிரிக்கெட் ஆடினார். அப்போது அக்ரம் இடது கை சுழலராகவும் துவக்க பேட்ஸ்மெனாகவும் ஆகவே ஆசைப்பட்டார். வளர்ந்த பின் அவர் கிரிக்கெட் பந்தில் வேகமாய் வீச பழகினார். இயல்பில் மிகுந்த வேகம் இருந்ததால் கிரிக்கெட் பந்தால் வீசுவது அவருக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. அப்படி அவர் எதேச்சையாய் வேகவீச்சாளர் ஆனார். 1985இல் கவர்ன்மெண்ட் இஸ்லாமியா கல்லூரியில் படிக்கும் போது அவரால் கல்லூரியின் அணியில் கூட இடம்பெற முடியவில்லை. யாருக்கும் அந்த உயரமான ஒல்லியான பையன் ஒரு ரத்தினம் என புரியவில்லை. அப்போது கல்லூரியில் அக்ரமின் பயிற்சியாளரான சதீஹ் கான் அவரிடம் லாகூர் கடாபி மைதானத்தில் ஒரு கிரிக்கெட் கேம்ப் நடக்க உள்ளதை குறிப்பிட்டார். அதில் 150க்கு மேல் வேகவீச்சாளர்கள் பங்கு பெறுகிறார்கள். அதில் வீசினால் வாசிம் அக்ரம் ஒருவேளை தேர்வாளர்களின் கவனத்தை பெற முடியும். அக்ரம் ஆர்வத்துடன் கலந்து கொண்டார். ஆனால் முதல் நான்கு நாட்களும் அக்ரமுக்கு ஒரு பந்து வீசக் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் மிகவும் ஏமாற்றமாகி தன் பயிற்சியாளரிடம் வருத்தப்பட்டார். நான் இனி அங்கு போகவில்லை என்றார். பயிற்சியாளர் கேம்பின் ஒருங்கிணைப்பாளரிடம் அக்ரமுக்கு வாய்ப்பளிக்க கேட்டுக் கொண்டார். அப்படி ஐந்தாம் நாள் அக்ரம் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். அவர் முன் பாகிஸ்தானின் டெஸ்ட் பேட்ஸ்மெனான முதாஸர் நாசர் நின்றார். முதாஸர் அக்ரமை ஏளனமாய் பார்த்தார். இந்த குச்சியான பையன் என்ன வீசி விடப் போகிறான்? ஆனால் முதல் பந்து அவர் மூக்கை உரசிப் போனது. முதாஸர் திகைத்துப் போய் ஆடுதளத்தில் ஏதாவது பிரச்சனையா என சோதித்தார். இல்லை ஒவ்வொரு பந்தும் அப்படித் தான் வந்தது. அவர் மட்டும் அல்ல அன்று கேம்புக்கு வந்திருந்த ஜாவித் மியாந்ததும் அக்ரமை பார்த்து வியந்து போனார். இருவரது பரிந்துரைகளும் அக்ரமுக்கு சில வாரங்களில் நடந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் வாய்ப்பு பெற்றுத் தந்தது. அதில் அக்ரம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை அடுத்து விரைவில் அவர் நியுசிலாந்துக்கு பயணம் சென்ற டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். சில வாரங்களுக்கு முன்பு கல்லூரி அணியில் கூட இடம் பெற தகுதி இல்லாதவர் என கருதப்பட்டவர் இப்போது பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்றார்.

அணித்தலைவரும் ஆசானும்

வாசிம் அக்ரம் ஆட வந்த புதிதில் அவருக்கு ஒவ்வொரு சிறு நுணுக்கங்களையும் கற்றுத் தந்து அவரை உருவாக்கியவர் அப்போதைய அணித்தலைவரும் மகத்தான ஆல்ரவுண்டருமான இம்ரான் கான். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் பாகிஸ்தான் வீழ்ச்சியில் இருந்த போது அக்ரம் ஒரு அணித்தலைவராக அணியை ஊக்கமளித்து உச்சத்துக்கு கொண்டு சென்றார். இம்ரான் கான் போன்றே அவர் பல புது பவுலர்களை கண்டெடுத்து வாய்ப்பளித்தார். அப்துர் ரசாக், அசர் முகமது, சக்லைன் முஷ்டாக், ஷோயப் அக்தர் போன்றோர் அக்ரமின் தலைமையின் கீழ் சோபித்தனர். தொண்ணூறுகளில் பாகிஸ்தானின் பேட்டிங் ரொம்பவே பலவீனமானது. அக்ரம் தன் மட்டையாளர்களிடம் எப்படியாவது 200 வரை கொண்டு வந்து விடுங்கள் என்பார். 200 தாண்டி விட்டால் பாகிஸ்தான் அசாத்தியமாய் பந்து வீசி வென்று விடும். அந்தளவுக்கு அவருக்கு தன் பவுலர்களிடம் நம்பிக்கை இருந்தது. அந்தளவுக்கு அவரது தலைமை அபாரமாயும் இருந்தது.

கறைபட்ட சாதனையாளர்

அக்ரம் டெஸ்டுகளில் 414 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் அக்ரமை விட அதிக விக்கெட் எடுத்தவர் முரளிதரன் மட்டுமே. இப்படியான அசுர சாதனைகள் நிகழ்த்தினாலும் சூதாட்ட சர்ச்சைகள் அவரது ஆட்டவாழ்வை நெருக்கடிக்கு உள்ளாக்கின. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் அடிக்கடி அணியில் இருந்து நீக்கப்பட்டார். அல்லாவிட்டால் அவர் நிச்சயம் 1000 விக்கெட்டுகளை தொட்டிருப்பார். 1999இல் சென்னையில் ஆடும் போதும் அவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்ததும். தினமும் இன்சுலின் ஊசி போட்டபடி அவர் அவ்வளவு வேகமாய் அபாரமாய் வீசினார் என நினைக்க வியப்பேற்படுகிறது.
2003இல் ஓய்வு பெற்ற பின் அக்ரம் .பி.எல்லில் கொல்கொத்தா அணியின் பயிற்சியாளராகவும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் உள்ளார்.

கூடுதலாக அறிந்து கொள்ள:


டெஸ்டுகளில் அக்ரம் 17 ஆட்டநாயகன் விருதுகள் வென்றார்.

ஒருநாள் போட்டிகளில் 22 ஆட்டநாயகன் விருதுகள் வென்றார்.

உலக கிரிக்கெட்டில் நான்கு ஹாட்ரிக்குகள் எடுத்த இருவரில் ஒருவர்.

8வது எண்ணில் இறங்கி அவர் அடித்த 257 ஒரு உலக சாதனை.

டெஸ்டில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்த 6 பவுலர்களில் ஒருவர் அக்ரம்.
ஒரே டெஸ்டில் ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்தவர் அக்ரம் மட்டுமே

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...