Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சவுரவ் கங்குலி: நாம கெத்து தானே!

லார்ட்ஸ் மைதானத்தில் கங்குலி இந்திய வெற்றியைக் கொண்டாடுகிறார், சட்டையைக் கழற்றி...

இந்திய கிரிக்கெட்டை கெத்தும் கம்பீரமும் தெனாவெட்டும் கொண்டதாக உருமாற்றியதில் மிகப்பெரிய பங்கு சவுரவ் கங்குலிக்கு தான். ‘டைகர்பட்டோடிக்கு அடுத்து இந்தியாவில் தோன்றிய மிக வசீகரமான, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கிரிக்கெட் கேப்டன் கங்குலி தான். ஒரு இடது கை மட்டையாளனாக கங்குலியின் நளினமும் ஸ்டைலும் டைமிங்கும் ஒப்பற்றது. மேற்கு வங்காளத்தில் கங்குலியை மிகுந்த பிரியத்தோடுதாதாஎன அழைக்கிறார்கள். பெங்காலியில் அதற்குஅண்ணாஎன்று பொருள். ஆனால் தாதா என்றால் ரவுடிகளின் தலைவனும் தானே. கங்குலி ஒரு இனிமையான ரவுடியாக விளங்கினார். சச்சின் மும்பையில் எவ்வளவு பிரபலமோ அதை விட பலமடங்கு கங்குலி கொல்கொத்தாவில் பிரபலம். 2005இல் கங்குலி அணியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது இந்திய அணி கொல்கொத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுடன் ஒருநாள் ஆட்டம் ஒன்றை ஆடியது. அறுபதினாயிரம் ரசிகர்கள் ஒன்று கூடினர். அவர்கள் இந்தியா வெல்வதை பார்க்க வரவில்லை. தங்கள் நாயகனை நீக்கிய இந்திய அணி மீதான தம் கோபத்தை காட்ட வந்தார்கள். தென்னாப்பிரிக்காவை மிகுந்த உற்சாகத்துடன் ஆதரித்ததுடன் இந்திய அணி ஆடும் போதெல்லாம் கூவி தம் எதிர்ப்பை காட்டினர்.


இந்தியாவின் முதுகெலும்பை நிமிர வைத்தவர்

ஆஸ்திரேலியர்கள் திமிருடன் ஆடுவதில் பெயர் போனவர்கள். அவர்களின் இந்த அணுகுமுறையே எதிரணியை கலவரப்படுத்தும். ஆனால் அவர்களை எதிர்கொள்ள சிறந்த வழி அதே ரவுடித்தனத்துடன் அவர்களிடம் நடந்து கொள்வது தான் என கங்குலி முடிவு செய்தார்
2001இல் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு ஆட வந்த போது தொடர்ந்து நான்கு முறைகள் கங்குலி டாஸுக்கு வேண்டுமென்றே தாமதமாக சென்றார். அப்போதைய ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாஹை காத்திருக்க வைத்து விட்டு மிக பொறுமையாக திமிராக வந்தார் அவர். தாமதத்திற்கு மன்னிப்பு ஏதும் கேட்காமல் நாணயத்தை சுண்டி விட்டு ஆட்டத்தை கவனிக்க போய் விட்டார். ஸ்டீவ் வாஹின் முகத்தில் ஈயாடவில்லை. தன்னை விட அடாவடியான ஒரு ஆளுடன் மோதப் போகிறோம் என அவர் அன்று உணர்ந்தார். அன்றைய காலத்தில் ஸ்டீவ் வாஹின் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை துணிச்சலாய் எதிர்கொண்டு மண்ணை கவ்வ வைத்த முதல் அணி இந்திய அணி தான். எதிரணி அளவுக்கு நமக்கு திறமை இருந்தால் மட்டும் போதாது, தன்னம்பிக்கையும் போராட்ட குணமும் துணிச்சலும் வேண்டும், சண்டையில் எப்போதும் முதல் அடி கொடுப்பவர் நாமாக இருக்க வேண்டும் என தன் அணிக்கு கற்றுக் கொடுத்தார். இந்திய கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றினார்.

வரலாற்றை மாற்றிய ஒரு கோடை விடுமுறை

சவுரவ் கங்குலி 1972இல் கொல்கொத்தாவில் ஒரு பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். அவருடைய அண்ணன் ஸ்னேஹாஷிஷ் கங்குலி சிறு வயது முதலே கிரிக்கெட் ஆடி மேற்கு வங்காள கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர். ஆனால் சவுரவோ இளமையில் கால் பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் காட்டினார். அண்ணனின் வழிகாட்டுதலும் தூண்டுதலும் அவருக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் ஏற்பட காரணமாகியது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக அவர் ஒரு பயிற்சி முகாமில் பங்கு பெற்றார். பிறகு தன் பள்ளி அணிக்காக ஆடி 15 வயதுக்கு கீழோருக்கான ஆட்டத்தொடரில் சதம் அடித்தார். பள்ளி அணியின் தலைவரானார். ஆனால் அப்போதும் கங்குலி கிரிக்கெட்டை முதன்மையாக கருதவில்லை. அவ்வருடம் கோடை விடுமுறையின் போது மேற்கு வங்க அணியில் ஒரு பேட்ஸ்மேன் கடைசி நேரத்தில் காயம் காரணமாய் ஆட முடியாது போக அவர் இடத்தில் தற்காலிகமாய் கங்குலி ஆடினார். ஆனால் யாரும் எதிர்பாராத முறையில் அவர் அந்த ஆட்டத்தில் சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து ரஞ்சி தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது கங்குலியின் பெயரும் இருந்தது. கங்குலி இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவிப்பதற்காக மலர்ந்த முகத்துடன் வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டில் எங்கும் சோகக் களை. எல்லாரும் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது தான் அவருக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. நீண்ட காலம் அணியில் ஆடி வந்த அவரது அண்ணனை நீக்கி விட்டு தான் ஆறு மாதமாய் கிரிக்கெட் ஆடத் தொடங்கின தம்பி சவுரவ் கங்குலியை அணியில் சேர்த்திருந்தனர். கங்குலிக்கு அழவா சிரிக்கவா என தெரியவில்லை.
ஆனால் அண்ணனை விட சவுரவுக்கு இயல்பான பேட்டிங் திறமை அபாரமாக இருந்தது. அவர் விரைவில் ரஞ்சி கோப்பையில் சோபித்தார். 1992இல் இந்திய அணிக்கு தேர்வானார். ஆனால் அவரது அடாவடி சுபாவம் சீனியர்களை எரிச்சலூட்டியதால் அணியில் இருந்து விரைவில் நீக்கப்பட்டார்.

ஆணவமும் கம்பீரமும்

15 வயதில் கங்குலி தன் பள்ளி அணியின் தலைவர் ஆன போது அவரதுஆணவமான நடத்தைபிற வீரர்களை கடுப்பேற்றியது. இடைவேளையின் போது பிற வீரர்களுக்கு தண்ணீரும் தேவையான பொருட்களும் எடுத்து அளிக்க மறுத்தார். பின்னர் 1992இல் இந்திய அணியில் தேர்வான போதும் இதே காரணத்துக்காய் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு நான்கு வருடங்கள் கடுமையாய் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிய பிறகே அவர் மீண்டும் இந்திய அணிக்காய் தேர்வானார். சவுரவ் பின்னர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் ஆடப் போன போது தன் சகவீரர்களை வேலைக்காரர்களாய் நடத்துகிறார் என புகார் எழுந்தது. இங்கிலாந்தில் நேவெஸ்ட் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற போது அவர் லார்ட்ஸ் மைதான பால்கனியில் நின்றபடி சட்டையை கழற்றி கொண்டாடினது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆனால் இந்திய அணியில் இடம் பெற்று பெரும் சாதனைகள் நிகழ்த்திய பின் இதே ஆணவம் கம்பீரமாய் மாறியது. மக்கள் அவரை அதற்காய் மதித்தனர், ரசித்தனர், கொண்டாடினர்.

Offside ஆட்டத்தின் கடவுள்

கங்குலி Offsideஇல் ஆடுவது ஒரு அழகான நடன அசைவு போலிருக்கும். Off ஸ்டம்பில் விழுகிற ஒரு பந்தை கூட அவர் பவுண்டரி அடிக்காமல் விடுவதில்லை. அதே போல இறங்கி வந்து இடதுகை சுழலர்களை சிக்ஸர் அடிப்பதிலும் சமர்த்தர். தொண்ணூறுகளில் இடது கை சுழலர்கள் வீச வந்தாலே இதோ கங்குலி சிக்ஸ் அடிக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு கிளம்பும். ஒருமுறை கூட கங்குலி ஏமாற்றியதில்லை. 1996இல் லார்ட்ஸில் தன் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சதம் அடித்த பின் சச்சினின் தலைமையின் கீழ் கங்குலி மிகச்சிறந்த பேட்ஸ்மெனாக வளர்ந்தார். ஒருநாள் ஆட்டங்களில் சச்சினுடனான அவரது துவக்க பார்ட்னர்ஷிப் இந்தியாவை மிக வலிமையான பேட்டிங் அணியாக்கியது. இருவரும் சேர்ந்து 6362 ரன்கள், 20 சதங்கள், 22 சதங்கள் அடித்தனர். இது ஒரு உலக சாதனை.

ஓடிப் போலாமா?

கங்குலி டானா ராயை சிறுவயதில் இருந்தே காதலித்தார். ஆனால் அவர் கங்குலியின் குடும்பத்தின் ஜென்ப பகைவரின் மகள். கங்குலி இந்திய அணியில் சிறப்பாக ஆடி நட்சத்திரமாக இருந்த காலம் அது. அவர் குடும்ப பகையும் எதிர்விளைவுகள் பற்றியும் சற்றும் தயங்காமல் டானாவுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இரு குடும்பங்களும் சமரசம் பண்ணிக் கொண்டு திருமணத்தை ஏற்றுக் கொண்டன.

இளவரசர் மணிசூடினார்

2000இல் அசருதீன், ஜடேஜா, மோங்கியாவுக்கு எதிராய் சூதாட்ட குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு சற்று முன்பு சச்சின் அணித்தலைமையை ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலம் அது. அனைவரும் அணி மீது நம்பிக்கை இழந்த போது கங்குலி அணித்தலைவரானார். யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், சஹீர்கான், முகமது கேயிப், சேவாக் போன்று புது திறமைகளை அடையாளம் கண்டு வாய்ப்பளித்து புது அணியை உருவாக்கினார். போர்க்குணமிக்க அணியை முன்னின்று தலைமை தாங்கினார். 2003 உலகக்கோப்பையில் இந்திய அணி அபாரமாய் ஆடி இறுதிப் போட்டி வரை சென்றது. 2000இல் ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் தோற்கடித்ததும் கங்குலியின் மிக முக்கியமான சாதனை.
2005இல் கங்குலியின் ஆட்டநிலை சரிந்தது. பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடனான மோதல் காரணமாய் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் கங்குலி விரைவில் மீண்டு வந்து இரண்டு வருடங்கள் ரன்களை குவித்தார். 2007இல் பாகிஸ்தானுடனான தொடரில் ஓய்வு பெறும் முன் தனக்கான ஸ்டைலில் அவர் இரட்டை சதம் அடித்து ஆர்ப்பாட்டமாகவே விடைபெற்றார்

கங்குலி தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார்.

கூடுதல் தகவல்கள்:

கங்குலி டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்களும் 16 சதங்களும் அடித்தார்.
ஒருநாள் ஆட்டங்களில் 11,363 ரன்களும் 22 சதங்களும் அடித்தார்.
ஒருநாள் ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2004இல் பத்மபூஷன் விருதை பெற்றார்.
1999 உலகக்கோப்பையில் திராவிடுடன் சேர்த்து அவர் அடித்த 318 ரன்கள் இன்னும் முறியடிகப்படாத ஒரு உலகக்கோப்பை சாதனை .
Wisden Cricketer’s Almanack ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் ஆறாவது சிறந்த பேட்ஸ்மேன் என கங்குலியை கௌரவித்துள்ளது.
ஒருநாள் ஆட்டங்களில் உலகில் 10,000 ரன்களை கடந்த மூன்றாவது பேட்ஸ்மேன் கங்குலி.
வெளிநாடுகளில் டெஸ்டு போட்டிகளில் 11 முறை இந்திய அணியை வெற்றியடைய வைத்த ஒரே தலைவர்தாதாதான்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...