ஓஷோ, சத்யசாய் பாபா, அமிர்தானந்த மயி துவங்கி நித்தியானதா, ஜக்கி வாசுதேவ், ஶ்ரீஶ்ரீ வரை இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறிய சாமியார்கள், ஆனால் எந்த பக்தனும் இந்த பணம் எப்படி உங்களிடம் வந்தது, ஒரு துறவிக்கு எதற்கு இவ்வளவு சொத்து என வினவவில்லை. இவர்களுக்கு குடும்பமில்லை, இந்த சொத்து முழுக்க ஒரு ஆன்மீக அமைப்புக்கு சொந்தமானது, இந்த அமைப்பு இந்துமதத்தின் பொது சொத்து, இந்துக்களாக தாம் அனைவருக்கும் பொதுவானது, சாமியார் காலமானதும் அது இந்து மதத்துக்குத் திரும்பி விடும் என பக்தர்கள் கற்பனை பண்ணுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையிலும் இதே மனநிலையைத் தான் வெளிப்படுத்தியிருந்தார்; பெரும்படிப்பாளரான, அறிவாளியான ஜெயமோகனாலே கார்ப்பரேட் மதத்தலைவர்களின் பெருஞ்செல்வம் தனிச்சொத்தே அன்றி சமூகத்துக்குப் பொதுவானதல்ல எனும் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எளிய பாமர மக்களின் கதியை கற்பனை செய்து பாருங்கள். இந்த மேம்போக்கான மரபான பொது உளவியலே தமது பணத்தை, நகைகளை சாமியார்களின் காலடியில் கொண்டு போய் வைக்க இந்த பக்தர்களைத் தூண்டுகிறது. கங்கையில் அஸ்தியைக் கரைப்பதைப் போல அல்லது மூழ்கி தம் பாவங்களைக் கரைப்பதைப் போல இந்த நன்கொடையை அவர்கள் பார்க்கிறார்கள். இந்திய தொல்மனம் குறியீடுகளால் சிந்திக்கக் கூடியது. சாமியார்களின் சொத்துமதிப்பை பகுத்தறிவாளர்கள் விமர்சிக்கும் போது பக்தர்களுக்கு கொலைவெறி வருவதும் இதனாலே.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்