முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹைடெக்கர் குறிப்புகள் (1)



இன்றைய உரைக்காக இந்த குறிப்புகளை எழுதும் போது எப்போதாவது நான் எழுதி முடிக்கும் ஹைடெக்கர் குறித்த அறிமுக நூலுக்கு ஒரு முன்னுரையாக அமையலாம் எனத் தோன்றியது. இன்று என் பேச்சை கேட்ட நண்பர்கள் இக்குறிப்புகளைப் பகிரக் கேட்டதனால் இங்கு இரு பகுதிகளாக இடுகிறேன்.


முதலில் சில கேள்விகள்:


தத்துவத்தை ஏன் படிக்க வேண்டும்?


அது சிந்திக்க, சிந்தனையை திசைகளைப் புரிந்து கொள்ளக் கற்றுத் தருகிறது.

தத்துவம் என்னை ஏன் ஈர்க்கிறது?

இலக்கியம் தராத கட்டுக்கோப்பான சிந்தனையை தத்துவம் தருகிறது.


அதன் பயன் என்ன?

எதையும் தீவிரமாக ஆழமாக அலச, அதை மொழியில் முன்வைக்க உதவுகிறது. இதை ஏன் இப்படி செய்கிறோம் எனக் கேட்பது உளவியல். இதை ஏன் இப்படி செய்கிறோம் என்பது சமூகவியல். இது ஏன் இப்படி எனக் கேட்பது தத்துவம் - இதுவே ஆக ஆழமான கேள்வி

இன்று எந்த ஒரு சமூகப் பிரச்சனையையும் நாம் தகவல்களால், தீவிர அரசியல் நிலைப்பாடுகளால் அணுகுகிறோம். ஆழமாய் அதனுள் பயணிக்க முடியாமல் ஆகிறது. இதற்குக் காரணம் இன்றைய தலைமுறைக்கு தத்துவப் பரிச்சயம் இல்லாதது (இது தொண்ணூறுகளில் ஓரளவுக்கு இருந்தது. அன்றுதேசியம் ஒரு கற்பிதம்போன்ற வாதங்கள் இருந்தது, இன்று அதை வெறுமனே இந்துத்துவா என ஒற்றை வார்த்தையில் கடந்து செல்கிறோம்.)

 இலக்கிய விவாதங்களையும் அதன் அடிப்படையான தேடலுக்கு சென்று தீவிரமாக விவாதிக்க தத்துவப் பயிற்சி அவசியம். இல்லாவிட்டால் ரசனை, வடிவ அலசல் என நின்று விடுவோம்.


தத்துவத்தை எப்படிப் படிக்க வேண்டும்?


நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து வாசித்து விவாதித்துப் படிக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விசயங்களிலும் படித்ததை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.


ஹைடெக்கர் என்பவர் யார்?


மார்ட்டின் ஹைடெக்கர் (1889-1976) இருபதாம் நூற்றாண்டின் தத்துவ அறிஞர்களில் முதல் வரிசையில் வருகிற ஒருவர். அதே சமயம் ஹிட்லரின் யூதவெறுப்பு இனவாத அரசியலுக்கு அவர் அளித்த ஆதரவினால் தொடர்ந்து தூற்றப்பட்டவராகவும் இருக்கிறார். எந்தளவுக்கு என்றால் ஹைடெக்கர் குறித்த எந்தவொரு உரையிலும், உரையாடல்களின் போது ஹிட்லருக்கும் அவர் அளித்ததாக சொல்லப்படுகிற ஆதரவு குறித்து ஒரு கேள்வியாவது எழாமல் இருக்காது. ஆனால் இந்த சர்ச்சை ஹைடெக்கரைப் புரிந்து கொள்ள என்றுமே தடையாக இருப்பதில்லை, ஏனென்றால் அவர் அரசியல், சமூகம் குறித்து அதிகம் விவாதித்தவர் அல்ல. மாறாக இந்த சர்சையை ஒட்டி ஹைடெக்கரைத் தவிர்ப்பது ஒரு வாசகனாக, தத்துவ மாணவனாக நமக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.


ஹைடெக்கரின் தாக்கம் என்ன?


ஹைடெக்கர் தன் சமகாலத்தைய மற்றும் பிற்காலாத்தைய தத்துவவாதிகளான சார்த்தர், பூக்கோ போன்றோரை தீவிரமாக பாதித்தார். .தா., இந்த உலகில் உடலின் இருப்பு எப்படி செயல்படுகிறது என்பதை பூக்கோ இந்த உலகில் உடலின் இருப்பு எப்படி அரச எதேச்சதிகாரத்தின் கண்காணிப்பால் உருமாற்றப்படுகிறது என மாற்றி தன் கருத்தியலை உருவாக்கினார். அதே போல கட்டிடவியல், இலக்கிய விமர்சனம், இறையியல், உளவியல் போன்ற துறைகளிலும் அவரது தத்துவம் தாக்கம் செலுத்தியது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...