முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

90களின் சினிமா: ஒரு பார்வை

90களின் தமிழ் சினிமா: சமூக மாற்றங்களின் அடையாளம்

- ஆர். அரவிந்த்



உலகின் பெரும்பாலோரின் பொழுதுபோக்கான சினிமாவை வெறும் மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சக ஊடகமாக ஒதுக்கிச் செல்ல முடியுமா என்ற கேள்வி என் மனதில் வெகு நாள் இருந்தது. 

'அக்காலத்தில் கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் என்றால், எனக்கு இன்று சினிமா' என எழுத்தாளர் திரு ஜெயமோஹன் அவர்கள் பலமுறை கூறியதிலிருந்து அனைத்துக் கலைகளின் சங்கமமான சினிமாவின் முக்கியத்துவம் புரிகிறது.  

நம்மால் மாற்ற முடியாத சமூகப் பிரச்சனைகளுக்கு அடுத்தவரைக் குறை சொல்லும் நம் உளவியல் அனைத்து தவறுகளுக்குமான ஊற்றுக் கண்ணாக சினிமாவையே எண்ணுவதால் அதை என்னால் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

நம்மையும், நம் பண்பாட்டையும் அறிய முயலும் வெளி நாட்டாருக்கு எளிய சாதனமாக இருப்பது சினிமா என்ற நிலையில், அதைப் பற்றி மேலும் சிந்திக்கவும் ஆராயவும் ஒரு ஆரம்பக் கட்டமாகத் திகழ்வது யுவபுரஸ்கார் விருது வென்ற எழுத்தாளரும், ஆங்கிலப் பேராசிரியருமான திரு ஆர். அபிலாஷ் அவர்களின் '90களின் தமிழ் சினிமா' நூல். 

சினிமா என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்டக் கனவுலகம் என எண்ணும் நமக்கு, 90 களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் முதல் நம் உளவியலிலும், நம்பிக்கைகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் திரைப்படங்களிலும் இன்று வரை பிரதிபலிப்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. 

காதலை, சாதிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் ஒரு அருமருந்தாகக் காட்டிய தொண்ணூறுகளின் சினிமா, பின்னர், காதலர்களுக்குக் காதலே சிக்கலாகவும், சுதந்திரமான சிந்தனைகள் உடைய இன்றைய தலைமுறைப் பெண்களிடம் பழகும் முறைகளைப் புரிந்து கொள்ளாத ஆண்களின் இடர்பாடுகளைக் காட்டும் கண்ணாடியாகவும் பல திரைப்படங்கள் இருப்பதை அறிய இந்நூல் உதவுகிறது. 

அதற்கும் மேல், காதலை ஒரு கிடைத்தற்கரிய பொருளாகக் காட்டிய 'இதயம்', 'காதலன்' போன்ற படங்களில் இருந்து, காதலை வெறும் வீடியோ கேம் போல மலிவானதாகக் காட்டும் ‘ஓ காதல் கண்மணி’ போன்ற படங்கள் வரை, படங்களில் காட்டப்பட்டவை இச்சமூகத்திலும் பிரதிபலிப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்ப அமைப்பைக் கடந்து காதலை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களையே வெற்றி பெற்ற அமர காதல் படங்களும், 'இயக்குனர் சேரனின் மகள் காதல் விவகாரம்' போன்ற நடைமுறைச் சம்பவங்களும் காட்டுவது மூலம், குடும்ப அமைப்பின் குறையாத வலிமையும்,  அவ்வமைப்பின் அங்கமாகவே பெரும்பாலான இன்றைய இளைஞர்கள் சார்ந்து இருப்பதையும் உணரலாம். 

நாயகர்களின் காதலுக்கு உதவும் நண்பன் என்ற உறவு முறை, தொண்ணூறுகளுக்குப் பிறகு பிணக்கும் ஊடலும் நிறைந்த ஆண்களின் நட்புறவாகப் பரிணமித்திருப்பதை சுவாரசியமாகக் காட்டும் இயக்குனர் பாலா, ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றோரின் புரோமான்ஸ் படங்கள்; ஆண்கள், உண்மையான சுதந்திரத்தை உணர்வது பெண்கள் அருகில் உள்ள போதா, அல்லது தன் நண்பர்களோடு உள்ள தருணங்களா என ஆரம்பித்து ஆண்மைக்குள் பெண்மையையும், பெண்மைக்குள் ஆண்மையையும் சித்தரிக்கும் திரைப்பட நுட்பங்களை நடைமுறை எதார்த்தங்களோடு சுவையாக பொருத்தி சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.  

சினிமாவின் ஜனரஞ்சகமான வெற்றிக்கு மற்றொரு காரணமான வன்முறையைச் சித்தரிக்கும் தேவர் சாதி வரிசைப் படங்களும், அதற்கு ஒப்பீடாகக் காட்டப்பட்ட மலையாள நாயர் சமூக வீரப் படங்களும் பாலிவுட் காட்ஃபாதர் படங்களைப் பற்றிய தகவல்கள் நூலின் சுவாரசியமான பகுதிகள். 

நிலப் பிரபுத்துவக் காலத்தைக் கடந்து வெவ்வேறு துறைகளில் களம் புகுந்தும், இவ்வகை பழைய வன்முறை விழுமியங்கள் ரசிக்கப்படுவதற்கானக் காரணங்கள்; வன்முறைக்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லும் இப்படங்கள், வன்முறையையே நாயகன் ஆண்மையின் சின்னமாகப் பிரதிபலித்தல் போன்ற வியக்கத்தக்க சுவாரசியமான விவாதங்கள் நம்மைச் ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. 

இன்னொரு பக்கம், நாயகனைக் கவர்ச்சிகரமாகவும், நாயகனின் ஆண்மையை விட வில்லன்களின் ஆண்மையையும் அவர்கள் தரப்பு நியாயங்களையும் பெரிதாகக் காட்டி வெற்றிபெற்ற இயக்குனர் திரு கௌதம் மேனன் படங்களில் கையாளப்பட்ட அதிசய நுட்பங்கள் நம்மை அறியாமலே நம்மை வியக்கச் செய்கின்றன.

இவற்றிற்கு அப்பால், இக்காலத்தில் பெறும் வெற்றி பெற்ற பிரம்மாண்ட இயக்குனர் திரு சங்கர் அவர்களின் படங்களில் உபயோகிக்கப்பட்ட நவீன யுக்தி பற்றிய விவரணங்கள் எல்லாம்; வாசகர்களே வாசித்து, அனுபவிக்க வேண்டியவை. 

இவ்வாறு, நாம் பார்த்த திரைப்படங்கள் குறித்த பல புது சுவாரஸ்யமான தவல்களையும் நம் ரசனையின் பல சிடுக்குகளையும் அனுபவிக்க இந்நூலை பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 

https://www.amazon.in/90%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-90galin-Cinema-ebook/dp/B07BJKS4LB

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...