முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிதியமைச்சரின் கூடுதல் வரித்திட்டம்



சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 41 வது கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி பங்கை தர முடியாது எனக் கூறி, பதிலுக்கு ரிசர்வ் வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்குமாறு சொன்னதைக் கேள்விப்பட்டோம். மாநிலங்களுக்கு உரிமையுள்ள பணத்தை தர மறுப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என கேரள மற்றும் பஞ்சாப் நிதியமைச்சர்கள் கடுமையாக இம்முடிவை விமர்சித்துள்ளனர். மிச்ச பேர் மிக்சர் சாப்பிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். இது பற்றி கருத்து தெரிவித்த பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி சொன்ன ஒரு விசயம் தான் ஆபத்தானது; விவாதிக்க வேண்டியது - ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசு வட்டிக்கு கடன் வாங்கினால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாது என்கிறார். இது எப்படி? அதுதான் வட்டித்தொகை இருக்கிறதே?


மாநில அரசுகள் மக்களிடம் வரி மீதான வரி எனப்படும் ஒரு கூடுதல் வரியை வசூலிக்காலாம் என நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார். அதாவது, இந்த ஜி.எஸ்.டி என்பதே கூடுதல் மறைமுக வரியாக பொருட்களின் விலையை அதிகப்படுத்தி விட்டது. இந்த வரியும் மாநில அரசுக்கு செல்லாமல் மத்திய அரசுக்குப் போய் விடுகிறது. ஏன் அப்படிப் போக வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே மோடி அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை முழுங்கும் திட்டம் இருந்திருக்கிறது; ஜி.எஸ்.டி வரியை நாங்கள் வாங்கி வைத்து பிறகு தருகிறோம் என்பதன் பொருள் வரிப்பங்கை எங்கள் முடிவின் படி தருவோம் என்பதே.


 முதலில் பங்கை குறைத்து தமது விருப்பப்படி மாநிலங்களுக்கு பணத்தை அளித்தார்கள். பிறகு இந்த கொரோனாவை காரணம் காட்டி ஒரேயடியாக நிறுத்தி விட்டார்கள். PC Cares நிதியில் இருந்து பணத்தைத் தர மறுக்கிறார்கள். தமது தேர்தலில் பயன்படக் கூடிய விதத்தில் இந்த நிதியை, வரிப்பணத்தை பிரதமரின் நேரடியான நிதியளிப்பு எனும் பொருளில் திட்டங்கள் வகுத்து (குஜராத், .பி. பீகார் போன்ற) சில மாநில மக்களுக்கு மட்டும் செலவிடுவதே பாஜக அரசின் திட்டமாகத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தமட்டில் நடுவண் அரசு என்பதற்கும் பாஜக எனும் கட்சிக்கும் வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கும் பாஜகவின் தேர்தலில் நிதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


 மற்றொரு பக்கம், மத்திய அரசின் வருவாய் குறைந்து விட்டது என்பதும் உண்மையே - நாட்டின் பொருளாதாரம் படுத்தே விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜி.டி.பி 8% இருந்து 3.1% க்கு கீழிறங்கி விட்டது. அதாவது இது கொரோனா லாக்டவுனுக்கு முன்பு. ஆனால் அதன் பின்னர் ஜி.டி.பி 3 சதவீதத்துக்கும் கீழேயே சென்றிருக்க வாய்ப்பதிகம். கடந்த மூன்று பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. நாட்டில் பணம் புழங்கினால் தானே வரியாக அது நடுவண் அரசிடம் போகும். ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மோடி அரசு தெளிவான எந்த வளர்ச்சித்திட்டத்தையும் வகுக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏதோ மூச்சைப்பிடித்துக் கொண்டு இருந்த தொழில்களையும் நசுக்கி விட்டன. இதைப் பற்றி எந்த கவலையும் இன்றி சுயவிளம்பரம், கலாச்சார பிரச்சாரம் என மோடி ஒரு பக்கமும், தம்மிடம் உள்ள அதிகார, பொருளாதார பலத்தைக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியைக் கவிழ்ப்பதிலும் பாஜகவின் உள்கட்டமைப்பை செறிவாக்குவதிலும் தான் அமித் ஷா மறுபக்கமும் அக்கறை செலுத்தி வருகிறார்கள். மிச்ச பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் பிரதமரைப் பாராட்டி பாட்டெழுதுவதிலே நேரத்தை செலவிடுகிறார்கள்


எல்லாராலும் கைவிடப்பட்ட பொருளாதாரம் தெருவில் கிடந்து நாறியது. அதன் நாற்றம் அதிகமாகும் போதெல்லாம் நடுவண் அரசு புதிய வழிகளில் பணத்தை மக்களிடம் பிடுங்க முனைந்தது. அதில் ஒரு வழியாகத்தான் மோடி அரசு மாநிலங்களுக்குப் போக வேண்டிய ஜி.எஸ்.டி பங்கை பிடுங்கிக் கொள்கிறது. வரிப்பங்கை தராமல் இருப்பது சட்டவிரோதம் என்பதால் ஒரேயடியாக முடியாது என்றும் சொல்ல முடியாது. பற்றக்குறையை சரிசெய்ய அவர்கள் இப்போது தரும் பரிந்துரையும் கூடுதல் வரியை மக்கள் மீது விதியுங்கள் என்பதே.


இந்த கூடுதல் (cess) வரி மீதான வரி இருக்கிறதே இதை விதித்து சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை அரசு வட்டியாக நடுவண் அரசுக்கே திரும்ப செலுத்த வேண்டி வரும். அதாவது ஜி.எஸ்.டி வரியை முழுங்கி ஏப்பம் விட்ட நடுவண் அரசு இப்போது கூடுதல் வரியை விதிக்கக் கேட்டு அதையும் பீடாவைப் போல வாயில் போட்டு ருசிக்க முடிவெடுத்துகிறது. இதன் விளைவு பொருளாதாரம் மீண்டும் சரிவடையும் என்பதே.


வரிக்கு மேல் வரியை விதித்து மக்களை வதைப்பது கொடுங்கோன் அரசுகளின் வழக்கமே. மோடி அரசின் மதவெறி, இந்துத்துவ கலாச்சார அரசியல், அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள் ஒரு பக்கம் சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச்செல்கிறது என்றால், இவ்வரசின் பொருளாதார சீர்கேடுகள் நம்மை அடுத்த இருபதாண்டுகளில் ஒரு சொமாலியாவாக மாற்றி விடும் போலத் தெரிகிறது

எதைப் பற்றியும் கவலைப்படாமல் பிரதமர் மயில்களுக்கு உணவளித்துக் கொஞ்சிக்கொண்டே வீடியோ போடுகிறார்.

மக்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் பாரத தேசம் பாலைவனமாகும் நாள் தொலைவில் இல்லை!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...