Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அஜய் ஜடேஜா: தொண்ணூறுகளின் ’கூல்’ ஹீரோ



தொண்ணூறுகளின் மகேந்திர சிங் தோனி தான் அஜய் ஜடேஜா (திறமையில் சற்று குறைவானவர் என்றாலும்). எவ்வளவு நெருக்கடி என்றாலும் அசராமல் கூலாக சிக்ஸரும் பவுண்டரிகளும் விளாசக் கூடியவர். இறுதி பத்து ஸ்லாக் ஓவர்களில் இந்தியாவின் சூப்பர் மேன். 1996 உலகக்கோப்பையில் அவர் 25 பந்துகளில் அடித்த 45 இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் வரலாற்று தருணம்.

சிக்ஸர் விளாசுவதில் சூப்பர் மேன் என்றால் களத்தடுப்பில் அவர் ஸ்பைடர் மேன். அதே போல் ஜடேஜாவைப் போல எதிரணியின் கள அமைப்பின் வெற்றிடங்களை சாமர்த்தியமாய் பயன்படுத்தி ஒற்றை இரட்டை ஓட்டங்களை எடுப்பவர்களையும் அன்று (சச்சினைத் தவிர) பார்க்க முடியாது. சச்சினுக்கு அடுத்தாற் போல் இந்திய அணிக்கு வந்த முதல் நவீன பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா


கிரிக்கெட் பிரபலங்களின் குடும்பம்:


ஜடேஜா 1971இல் ஜூலை 3ஆம் நாள் குஜராத்தில் ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்தார். அவரது அப்பா குஜராத்தி. அம்மா மலையாளி. ஜடேஜாவின் முன்னோர்களான ரஞ்சித் சிங் ஜி மற்றும் துலீப் சிங் ஜி இந்திய கிரிக்கெட்டின் சாதனையாளர்கள். அவர்கள் பெயரில் ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் கோப்பை என இரு உள்ளூர் ஆட்டத் தொடர்கள் அறியப்படுகின்றன. அவரது அப்பா தௌலத் சிங் ஜடேஜாவும் உள்ளூர் கிரிக்கெட் ஆடிய பேட்ஸ்மென். அப்பா மைதானத்துக்கு ஆட செல்லும் போது சிறுவனான ஜடேஜாவையும் அழைத்து செல்ல மெல்ல அவருக்குள் கிரிக்கெட் மோகம் துளிர்த்தது. ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்திய் அணியில் இடம்பெற்றார்.


பவுலிங்கும் அணித்தலைமையும்:


ஜடேஜா ஒரு பேட்டிங் மாஸ் மட்டுமல்ல, ஒரு திறமையான மிதவேக வீச்சாளரும் கூட. ஷார்ஜாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் இந்தியா இருநூற்று சொச்சம் ஸ்கோரை எடுத்தது. கிரெகம் தோர்ப் அபாரமாய் ஆட இங்கிலாந்து சுலபமாய் அந்த குறைவான ஸ்கோரை நெருங்கி வந்தது. இறுதி ஓவரில் இங்கிலாந்து சிங்கிள் அடித்தே ஜெயிக்கும் எனும் நிலை. யார் பந்து வீசுவது? சிறப்பாய் வீசின இடது கை சுழலர் ஜோஷியா அல்லது ஒரு வேகவீச்சாளரா? எதிர்பாராத விதமாய் அன்றைய ஆட்டத்தை இந்தியாவுக்கு தலைமை தாங்கின அஜய் ஜடேஜா தானே பந்து வீசுவதாய் முடிவு செய்தார். அது ஒரு சாணக்கிய முடிவு. அது ஒரு மெத்தனமான ஆடுதளம். ஜடேஜா மெதுவாக வீசக் கூடியவர். மேலும் அவரது பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மென் யாரும் அதுவரை பார்த்ததில்லை. அவர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களே ஜடேஜா பந்து வீசுவதை பார்த்து ஆறு வருடங்களாவது இருக்கும். அவர் கபில்தேவ் பாணியில் ஓடி வந்து கட்டுப்பாடாய் வீசுகிறார். பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார். அடிக்க முடியாமல் பேட்ஸ்மென் திணறுகிறார்கள். வெற்றியின் உச்சத்தில் இருந்து இங்கிலாந்து சரிந்தது. ஒரே ஓவரில் மூன்று ரன்களுக்கு அவர் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். இந்தியா வென்றது.

பதிமூன்று ஆட்டங்கள் மட்டுமே அணியை வழி நடத்தினாலும் ஒரு கேப்டனாக ஜடேஜா ஜொலித்தார். எதிரணியின் பலம் பலவீனங்களை கணித்து களத்தடுப்பு அமைப்பது, பந்து வீச்சாளர்களை உற்சாகப்படுத்தி சிறப்பாய் ஆட வைப்பது, எந்நேரமும் உற்சாகம் குன்றாமல் முயன்று கொண்டே இருப்பது என அவர் ஒரு அற்புதமான கேப்டனாய் திகழ்ந்தார். இந்த இறுதி ஓவரின் எதிர்பாராத பந்து வீச்சு மாற்றம் உங்களுக்கு 2007 T20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் இறுதி ஓவரை நினைவு படுத்தும்.

பாகிஸ்தானுக்கு 13 ரன்கள் தேவை. ஏற்கனவே ஹர்பஜன் சிங்கின் பந்தில் சிக்ஸர்கள் அடித்த மிஸ்பா உல்ஹக் ஆடிக் கொண்டிருக்கிறார். அன்றைய ஆட்டத்தின் சிறந்த வீச்சாளர்களான ஆர்.பி சிங், ஸ்ரீசாந்தை தவிர்த்து இறுதி ஓவரை ஜோகிந்தர் ஷர்மா எனும் உலகம் அறியாத ஒரு மிதவேக வீச்சாளருக்கு கொடுக்கிறார் தோனி. ஷர்மாவின் பந்தில் வேகம் இல்லாத காரணத்தினால் அவர் முழுநீளத்தில் போட்ட பந்தை மிஸ்பாவால் சுலபத்தில் சிக்ஸர் அடிக்க இயலவில்லை. ஸ்கூப் செய்ய முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா முதல் T20 உலகக்கோப்பையை வென்றது. தலைமைப் பண்பிலும் ஒருவிதத்தில் தோனியின் முன்னோடி அஜய் ஜடேஜா தான்


பரீட்சார்த்த (innovative) பேட்டிங்:


ஜடேஜாவின் பேட்டிங்கும் தோனியை நினைவுபடுத்துவது தான். ஜடேஜா தோனியை போன்றே ஐந்தாவது எண்ணில் களமிறங்குவார். முதல் முப்பது ரன்களுக்கு பவுண்டரி, சிக்ஸர்களை நம்பியிராமல் அதிவேகமாய் ஓடி நிறைய ஒற்றை ஓட்டங்கள் எடுப்பார். கண்ணிமைக்கும் முன் அவர் நாற்பது சொச்சம் ரன்களின் இருப்பார். பெரும்பாலும் 42-44 வது ஓவரில் அவர் பவுண்டரிகள் விளாசத் துவங்குவார். அப்போது இந்திய அணியில் கீழ்மத்திய வரிசை பேட்டிங் சீட்டு கோபுரம் போல் சரியக் கூடியது என்பதால் ஜடேஜா 48வது ஓவர் வரை சிக்ஸர் அடிக்கும் ரிஸ்க் எடுக்க மாட்டார். இந்த பவுண்டரி அடிக்கும் கட்டம் சுவாரஸ்யமானது. வீச்சாளர்களின் நீளம் மற்றும் லைனை கணித்து பரீட்சார்த்த ஷாட்கள் அடிப்பார்.


1998இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அவர் கொச்சியில் அடித்த சதத்தின் போது ஒரு ஓவரில் ஷேன் வார்ன் பந்தை off ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் (short of the length) போடுகிறார். வார்னின் பிளைட்டில் ஏமாந்து ஜடேஜா முதலில் முன்னங்காலுக்கு செல்கிறார். உடனடியாய் சுதாரித்து பின்னங்காலுக்கு சென்று அப்பந்தை கவர் பகுதிக்கு விரட்டுகிறார். இது ஒரு விசித்திரமான ஷாட். அந்த மாதிரி பந்தை வழக்கமாய் வெட்டத் தான் முடியும். ஆனால் கவர் பகுதியில் ஆள் இல்லை என்பதை உணர்ந்து ஜடேஜா ஒரு புதுவித ஷாட்டை கண்டுபிடித்து அடித்தார்.


1996 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தின் இறுதிப் பத்து ஓவர்களில் ஒன்றில் ஜடேஜா வக்கார் யூனிஸின் பந்து ஒன்றை எதிர்கொண்டு கால் பக்கம் பிரம்மாண்ட சிக்ஸர் ஒன்று அடிக்கிறார். இந்த ஷாட் கூட ஜடேஜாவுக்கே உரித்தானது


அவரது பேட்டிங் நிலையமைதி (stance) புலி பதுங்கி இருப்பது போல குனிந்தபடி இருக்கும். சிக்ஸர் அடிப்பவர்கள் பொதுவாக பேட்டை உயரத் தூக்கி நிற்பார்கள் (சச்சின், யுவ்ராஜ் போல்). ஆனால் ஜடேஜா பேட்டை தாழ்வாகவே பிடித்திருப்பார். அடிக்கும் போது அவரது ஆற்றலும் வேகமும் அவரது வலுவான மணிக்கட்டில் இருந்து வரும். இந்த stance மற்றும் பேட்டை பிடிக்கும் விதம், follow through இல்லாமல் மணிக்கட்டின் வலு கொண்டு சிக்ஸர் அடிக்கும் பாணி நிச்சயம் தோனியை நினைவுபடுத்தும்

அதே ஆட்டத்தில், அடுத்த ஓவர் வீச வரும் வக்கார் யூனிஸ் ஜடேஜாவின் கால் பக்க சிக்ஸரை தவிர்க்கும் பட்சம் பந்தை இம்முறை off ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் (short of the lengh) வீசுகிறார். ஜடேஜா அதை டென்னிஸில் அடிப்பது போல் கிட்டத்தட்ட நேராக சிக்ஸருக்கு விளாசுகிறார். இன்று இது போன்ற ஷாட்களை T20யில் பல இளைஞர்கள் அடிக்கிறார்கள். தோனியும் இதே போல் offஇல் அடிக்க வேண்டியதை நேராக அடுக்கக் கூடியரே.


களத்தடுப்பில் ஸ்பைடர்மேன்:


ஜடேஜாவின் அபாரமான களத்தடுப்பும் தொண்ணூறுகளில் தனித்து தெரிந்தது. களத்தடுப்பின் உள், வெளி வட்டங்களில் நம் ஜடேஜா அளவுக்கு வேகமாய் ஓடி வந்து கேட்ச் பிடிப்பவர்களும் ரன் அவுட் செய்பவர்களும் 90களின் இந்திய அணியில் இல்லை.


ராத்திரிகள் வந்து விட்டால்


ஜடேஜா வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க நினைத்தவர். இரவெல்லாம் கிளப்பில் டான்ஸ் ஆடி விட்டு காலையில் களமிறங்கி இந்தியாவுக்காக சதம் அடிப்பார். எப்போதும் ஸ்டைலான கூலிங் கிளாஸ் அணிந்து சூயிங் கம் மென்றபடி சிரிப்புடன் திகழ்வார். கொண்டாட்டம், காதலிகள், புகழ் வெளிச்சம் என வாழ்க்கையை திகட்ட திகட்ட ரசித்தார்.

இப்படி பேட்டிங், பீல்டிங், கூல்  அணுகுமுறை, ஆடும் போது முனைப்பு, ஆடாத போது கொண்டாட்டம் எனும் மனநிலை, ஸ்டைல், பார்ட்டி, காதலிகள் என தொகுத்தால் இன்றைய T20 யுகத்தின் ரோஹித், கோலி, யுவ்ராஜ் போன்றோருக்கு கச்சிதமான முன்னோடியாக ஜடேஜா தொண்ணூறுகளில் இருந்திருக்கிறார்.


சூதாட்ட சர்ச்சை:


சூதாட்டத்தில் ஈடுபட்டதாய் குற்றம் சாட்டப்பட்டு ஜடேஜா ஐந்து வருடங்கள் தடை செய்யப்பட்டார். ஆனால் பின்னர் குற்றம் நிரூபணம் ஆகாமல் நீதிமன்றத்தால் அவரது தடை நீக்கப்பட்டது. இன்று ஜடேஜா டி.வி வர்ணனையாளராக உள்ளார்.


கூடுதல் விபரங்கள்


ஜடேஜா ஒருநாள் ஆட்டங்களில் ஆறு சதங்களும் 30 அரைசதங்களும் அடித்தார்.


ஒருநாள் ஆட்டங்களில் நான்கு மற்றும் ஆறாவது வரிசையில் ஜடேஜாவும் அசருதீனும் இணைந்து அடித்த இரண்டு பார்ட்னர்ஷிப்கள் இன்றும் முறியடிக்கப்படாத சாதனை.


கெய்மற்றும்  “பல் பல் தில் கெ சாத்எனும் இரு இந்தி படங்களில் நடித்தார்.


ஜடேஜாவுக்கு குஜராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம், தமிழ், ஆங்கிலம், கன்னடா, பெங்காலி ஆகிய மொழிகளில் பேச வரும்.


ஒருநாள் போட்டிகளில் ஏழு ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார்.


அவருக்கு பிடித்த ஹீரோ ஷாருக்கான்; கிரிக்கெட் வீரர்களில் கபில்தேவ் மற்றும் சச்சின்; பிடித்த மதுபானம் பக்கார்டி + கோக்; விருப்பமான இசை ரெகே.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...