குஷ்பு காவிக்குட்டையில் நரியைப் போல விழுந்து எழுந்த நிலையில் இங்கு ஒரு பக்கம் அவரது முந்தைய காவி எதிர்ப்பு விமர்சனங்கள் கவனத்துக்கு வர, சிலர் அவர் இனி எப்படி தன்னை காவி நரிகளுடன் எப்படி அடையாளப்படுத்தி வாழ்வார் என்றும், தன் கருத்துநிலையில் உள்ள குழப்படிகளை, தன் நம்பிக்கைகளுக்கு எதிரான புதிய அரசியலை எப்படி முன்னெடுப்பார் என்றெல்லாம் யோசிக்க, மற்றும் சிலரோ குஷ்பு செய்ததை இரு நியாயங்களை சொல்லி ஆதரிக்கிறார்கள்:
1) குஷ்பு மட்டுமல்ல, சாமான்யர்களும் தாம் கருத்துக்களை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள்; ஏன் எழுத்தாளர்கள் தம் சார்புநிலையை அடிக்கடி முன்னுக்குப்பின் முரணாய் மாற்றிக் கொள்வதில்லையா?
இதை ஒரு அபத்தமான வாதம் என்பதை விட அரசியலற்று சிந்திக்கும் முயற்சியினால் விளையும் குழப்பம் என்று சொல்வேன். குஷ்பு ஒரு பொது அரங்கில் ஒரு அரசியல் கருத்தை முன்வைக்கையில் அது அவரது தனிப்பட்ட கருத்தல்ல, அவர் அங்கு ஒரு தரப்பு மக்களின் அரசியல் கருத்துக்களை, எதிர்ப்பு / ஆதரவு நிலையை பிரதிநுத்துவம் செய்கிறார். அவரது கடந்தகால பாஜக எதிர்ப்பு என்பது அவ்வளவு உக்கிரமாக வெளிப்படையாக இருந்தது. அவர் பாஜக மீது வைக்கும் விமர்சனங்கள் நல்ல கவனம் பெற்றன. அதற்கு ஒரு காரணம் அவர் ஒரு பெண், எந்த குடும்பப் பின்னணியும் ஆதரவும் இல்லாமல் தனியாக உயர்ந்த பெண், அவர் சிறுபான்மை மதத்தை சேர்ந்த பெண், அவர் முன்பு தனது சுதந்திரமான கருத்துக்களுக்காக தாக்கப்பட்டும் துணிச்சலாக மீண்டு வந்திருக்கிறார், அவர் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத போதும் தன் சுயவாசிப்பாலும் அறிவாலும் புத்திசாலித்தனமாக யோசிக்கும், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் (தமிழை கடித்துக்குதறினாலும் ஓரளவு சரளமாய் அதிலும் பேசுகிறவர்) பெண் என்பது. இவ்வளவு விசயங்களும் சேர்ந்தே ஒரு குஷ்புவை உருவாக்குகிறது - இந்த பண்புகளுக்கும் அவர் இப்போது சேர்ந்துள்ள கட்சிக்கும் எந்த பொருத்தமும் இல்லை என்பது வேறு விசயம். இங்கு கவனிக்க வேண்டியது நாம் ஒரு கருத்தை உருவாக்குவதற்கும் அதைப் பரப்புவதற்கும் ஒரு அரசியல் தலைவர் அதை செய்வதற்கும் பாரித்த வித்தியாசம் உண்டு என்பதே. ஆகையால் குஷ்புவையும் உங்களையும் என்னையும் அல்லது குஷ்புவையும் ஜெயமோகனையும் (போகன் செய்வதைப் போல) ஒப்பிடுவது வேடிக்கையே.
ஒரு கட்சியின், மக்களின் கருத்துநிலை, உணர்வுநிலை பிரதிநிதிக்கு என ஒரு பொறுப்புணர்வு உண்டு. அதைக் கைவிடுவது எந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத துரோகம். தமிழகத்தில் எந்த பெரிய தலைவர் அடிக்கடி தன் கொள்கைகளை முன்னுக்குப் பின் முரணாக மாற்றி மக்கள் மத்தியில் பிரசித்தமாகி வெற்றி பெற்றிருக்கிறார்? அடிக்கடி கட்சி தாவுகிறவர்கள் கூட தம் கருத்துக்களை மக்கள் மத்தியில் பேசுகிறவர்கள் அல்ல. ஒரு தொகுதிக்குள் ஒரு கட்சியின், சாதியின் பிரதிநிதியாக இருப்பவர்கள். அல்லது திருநாவுக்கரசரைப் போல எல்லா கட்சியிலும் தொடர்பு வைத்திருக்கிற, சித்தாந்த அரசியலை வலுவாகப் பேசாதவர்கள். ஆனால் வலுவான கருத்து பிரதிநுத்துவம் கொண்ட அரசியல் தலைவர்கள் கண்டபடிக்கு கட்சி மாறும் போது மதிப்பிழக்கவே செய்திருக்கிறார்கள். வை.கோ ஒரு உதாரணம். சிலநேரம் தமிழ் தேசிய, தலித் கட்சிகளுக்கும் இந்த சறுக்கல் நேர்ந்திருக்கிறது.
மக்கள் வெறுமனே சித்தாந்தத்தை மட்டுமே பார்த்து வாக்களிப்பதில்லை என்பதை ஏற்கிறேன் - ஆனால் அரசியல் என்பது வெறுமனே வாக்கரசியல் மட்டுமே அல்லவே.
மனுஷ்யபுத்திரன் மீது போகன் வைக்கிற விமர்சனம் ஒன்றும் புதிதல்ல - அவர் திமுகவில் அதிகாரபூர்வமாய் இணையுமுன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை, செயல்பாடுகளைத் தாக்கி எழுதியிருக்கிறார்; அவர் அதை எப்போதும் மறைத்ததில்லை. அதற்கான உரிமை அவருக்கு அப்போது ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக இருந்தது. கட்சியின் பிரதிநிதி ஆன பின்னர் அவர் அதன் சித்தாந்தம் மற்றும் செயல்பாட்டுக்கும் பிரதிநிதி ஆகிறார். இப்போது அவர் கட்சிக்கு விசுவாசமாகவே தொடர்ந்து இருந்து வருகிறார். அவருக்கு மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் பொதுவெளியில் வைப்பதில்லை. அதுவே ஒரு கட்சிப்பிரதிநிதிக்கு, ஒரு மக்கள் திரளின் பிரதிநிதிக்கு அழகு.
குஷ்பு பண்ணுவது ஒரு வகை குழப்படி என்றால் போகனைப் போன்ற நண்பர்கள் அரசியல் நீக்க தொனியில் பண்ணுவது மற்றொருவகை குழப்படி - பொருத்தமில்லாதவற்றை ஒப்பிடுவதை, விதண்டாவாதம் செய்வது என கலங்கிய நீரில் மீன் பிடிக்கிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.
2) குஷ்பு செய்ததற்கு சொல்லப்படும் மற்றொரு நியாயம் அவருக்கு காங்கிரஸ் கட்சிக்குள் போதுமான வளர்ச்சி சாத்தியப்படவில்லை; காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளில் மேல்நோக்கி வளர்ச்சி சாத்தியமாகாதபடி ‘பழைய குந்தானிகள்’ இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. இதை சற்று ஆய்வு செய்வோம்.
இது சரியா? ஓரளவுக்கு மட்டுமே.
குஷ்பு காங்கிரஸில் போய் சேர்ந்த போது அவரை அவர்கள் அடிமட்டத் தொண்டராக நடத்தவில்லை. மாறாக, பெரிய பொறுப்பு ஒன்றை நல்கினார்கள். அதற்கான என்ன நியாயம் இருந்தது? அவர் அதற்கு முன் அரசியல் என்ன சாதித்திருந்தார்? ஒன்றுமில்லை. அவர் காங்கிரஸில் நீண்ட காலம் செயல்பட்டு கீழ்நிலையில் இருந்து போராடி, மக்களிடம் நன்மதிப்பை, நம்பிக்கையை பெற்று மேலெழுந்து வந்தாரா? இல்லை.
ஒரு சினிமா நட்சத்திரம் என்கிற காரணத்தினாலே ஒரு தேசிய கட்சிக்குப் போனதுமே அவருக்கு பெரிய பொறுப்பை எடுத்தளித்தார்கள் என்றால் அதற்கும் ஒரு கட்சித்தலைவரின் மகனுக்கு இளவயதில் ஒரு பெரும் பொறுப்பை வழங்குவதற்கும் என்ன வித்தியாசம்? பெரிதாக ஏதுமில்லை. ஆக எந்த காரணத்துக்காக தான் கட்சியில் இருந்து விலகுவதாய் குஷ்பு இன்று சொல்கிறாரோ அதே குற்றச்சாட்டை அவர் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பை பெற்ற போது அவருக்கு எதிராக காங்கிரஸின் அடிமட்டத் தொண்டர்களும் வைத்திருக்க முடியுமே? உங்களுக்கு வந்தால் மட்டும் தக்காளி சட்னியா?
என்னைப் பொறுத்தவரையில் குஷ்புவும் ஒரு குந்தாணி தான், சினிமா குந்தாணி.
2) அடுத்து குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளைப் பார்ப்போம் - அவர் காங்கிரசுக்குள் வந்த பிறகு முழுநேரமும் அரசியல் பணி ஆற்றினாரா? இல்லையே. அவர் தொடர்ந்து சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பு என பிஸியாக இருந்தார். அவர் ஏதாவது ஒரு பெரிய பிரச்சனைக்காக களத்தில் இறங்கி வேலை செய்தாரா? மக்களிடையே இறங்கி கட்சி பிரச்சார, கருத்துநிலை விலக்கப் பணிகளை செய்தாரா? (நான் தேர்தல் பிரச்சாரத்தைப் பற்றிப் பேசவில்லை.) இல்லை. அவர் செய்ததெல்லாம் டிவிட்டர் அரசியல் மட்டுமே. டிவி விவாதங்களில் முன்பு ஓரளவுக்கு பங்கேற்றார். பின்னர் அதையும் குறைத்துக் கொண்டு அலைபேசியின் வழியாகவே கருத்துக்களை பரப்பினார். அதுவும் ஒரு முக்கியப் பணியே. நான் மறுக்கவில்லை, ஆனால் அவர் முழுநேர அரசியல்வாதியாக ஏன் இல்லை?
அவர் அதிமுகவுடன் இணக்கமாக இருந்த போது, திமுகவில் சேர்ந்த போதும் இதே நிலைதான் - அவருக்கு முழுநேர அரசியலில், அதன் நடைமுறை சார்ந்த இடர்பாடுகளில் பட்டுக்கொள்ள வேண்டாம். தன் நட்சத்திர மதிப்பை பயன்படுத்தி பட்டும்படாமல் டிவிட்டர் பீரங்கியாக வேலை செய்து மாநிலத் தலைவராக ஒரேயடியாக அவர் உயர வேண்டுமென நினைத்தால் அது நியாயமா? சினிமா பின்னணி இல்லாமல், டிவிட்டரை விட்டு இறங்கி வந்து களத்தில் வேலை செய்து வருகிற பிற காங்கிரசாருக்கு என்ன தான் மதிப்பு?
குஷ்பு மட்டுமல்ல பல சினிமாக்காரர்களும் இப்படித்தான் ‘கட்சிப்பணி’ ஆற்றுகிறார்கள் - சினிமா அவர்களுக்கு புல் மீல்ஸ் என்றால் அரசியல் தொட்டுக்கொள்வதற்கான ஊறுகாய். சினிமாவில் தொடர்ந்து வேலை செய்து குறைந்த நேரத்தை கட்சிப்பணிக்கு கொடுத்து அதன் வழி ஒரே சமயம் நிறைய பணம், அதிகாரத்தை ஈட்ட முயல்கிறார்கள். ஆக, இவர்களை அரசியல் கட்சிகள் தமக்கான நட்சத்திர பிரச்சாரத்துக்கு மட்டும் பயன்படுத்துகின்றன என்ற குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை, அந்த நட்சத்திரங்களே அந்த நோக்கில் தான் உள்ளே வருகிறார்கள்.
மாறாக கடந்த இருபதாண்டுகளில், சினிமாவை குடிமுழுகி விட்டு அரசியலில் புகுந்து சாதித்த ‘மூன்றாவது அணித்’ தலைவர்கள் உண்டு. ஒரு விஜயகாந்துக்கோ சீமானுக்கோ கிடைப்பது குஷ்புவுக்கு ஒருநாளும் கிடைக்காது. ஏனென்றால் குஷ்புவுக்கு முழுநேர அன்றாட அரசியலில் அக்கறை இல்லை. அரசியலைப் பொறுத்தவரையில் அவர் அணியில் ஆடாமலே பேட்ஸ்மேனுக்கு தண்ணீர் கொடுப்பது, கொண்டாட்டங்களில் பங்குபெறுவது போன்ற காரியங்களைச் செய்யும் ரிசர்வ் வீரர்களைப் போன்றவர். “எனக்கு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் கொடு” என ஒருநாள் கேட்டால் அது என நியாயம்?
3) இறுதியாக காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் மட்டும் தான் இறுகிப் போயிருக்கின்றனவா? எனக்கு நேரடியாக கட்சிப்பணி அனுபவம் இல்லையென்றாலும் அதிமுகவில் அரசியல் பணி செய்யும் நண்பர்கள், உறவினர்களின் பழக்கம் உண்டு. அதிமுகவை எடுத்துக் கொண்டால் அதில் பல பத்தாண்டுகளாய் எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேங்கிக் கிடக்கும் எத்தனையோ ஆரம்பநிலைத் தலைவர்கள் உண்டு. அங்கு ஏதாவது ஒரு தலைவரின் அணுக்கத்தை பயன்படுத்தி, தலைமையை நெருங்கி பதவியைப் பெற வேண்டும். ஜெயலலிதா காலத்தில் அவரது கடைக்கண் பார்வைக்காக காத்திருக்க வேண்டும். கிடைத்த பதவியைக் காப்பாற்ற அந்த கடைக்கண் தன் மீதே நல்லவிதமாய் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஜெயாவுக்குப் பிறகு இது சசிகலா கோஷ்டியுடனான அணுக்கம், ஓ.பி.எஸ் குழுவில் இருப்பது, இப்போது எடப்பாடிக்கு அணுக்கமாய் சாதிக்குழுக்களில் இருப்பது, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு சாதகமான அணுக்கமான ஆளாக இருப்பது என மாறி வந்துள்ளது. அதிமுக தொண்டர்களின் இந்த நிலையின்மை இன்னும் கொடுமையானது என்பேன். என் உறவினர் ஒருவர் ஜெயாவின் கடைக்கண் பார்வை பட்ட ஒரு தலைவரின் கடைக்கண் பார்வை சற்றே கிடைத்து ஒரு நல்ல பதவியைப் பெறலாம் என கனவு கண்டிருந்த போது ஜெயா காலமாக எல்லா பார்வைகளும் இருண்டு விட்டன. அப்போது கட்சிக்குள் நிலைக்க வேறு குழுக்களின் கடைக்கண் பார்வையை நீங்கள் பெற வேண்டுமென ஆனது. இக்குழுக்களும் மாறியபடியே இருந்தன. அதிமுகவில் உழைக்கத் தயாராக இருக்கும் கீழ்நிலைத் தொண்டர்கள் சுலபத்தில் தலைவராகி அமைச்சராகலாம் என்பது ஒரு தொன்மம், உண்மை அல்ல.
பாஜகவில் இந்த கார்ப்பரேட் பாணி வளர்ச்சி நிச்சயம் உண்டு - ஆனால் அதுவும் நீங்கள் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களின் நன்னம்பிக்கையை பெற்றாலே முடியும். அப்படிப் பெற்றாலும் வாக்கரசியல் வெற்றியை உடனடியாய் சாதித்துக் காட்ட வேண்டும். இல்லாவிடில் உடனடியாய் பதவிப் பறிப்பு. இதன் அடுத்த பிரச்சனை சுதந்திரம் இல்லாமை. நிம்மி அக்காவை, சக்திகாந்த் தாஸைப் போன்ற எந்த தகுதியும் இல்லாதவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி ஆகியவற்றைக் கொடுத்து தம் கைப்பாவையாக்கி பயன்படுத்துவார்கள். பழி மட்டும் அவர்களுக்கு, பெருமை எப்போதுமே தலைமைக்கு.
மோடியைப் பற்றி ஒன்று சொல்வார்கள் - கட்சிக்குள் தனக்கு நிகராக வர சாத்தியமுள்ளவர்களை அவர் வேரோடு பிடுங்கி விடுவார் என. அவர் குஜராத் முதல்வராக இருந்த போதும் சரி, பிரதமர் ஆன பின்னரும் சரி அமைச்சரவையில் அவருக்கு இணையான பிரசித்தம் கொண்டவர்களோ நல்ல தகுதியானவர்களோ இடம்பெற முடியாது. அதுவும் குஜராத்திகளை மட்டுமே அவர் நம்புவார், கூட சேர்த்துக் கொள்வார். தன் கட்சித்தலைவர்களும் அமைச்சர்களும் சதா மோடி புகழை பாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பார். இல்லாவிட்டால் காலி. இதையெல்லாம் செய்துவிட்ட பிறகும் உங்கள் தலைவிதியை நாக்பூரில் உள்ள சில பிராமணர்களே தீர்மானிப்பார்கள் என்பது உச்சபட்சக் கொடுமை. ஏன் தமிழக பாஜக தலைவர்கள் சங்கர மடத்துக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார்கள், ஏன் ஜக்கியுடன், ஶ்ரீஶ்ரீயுடன் அணுக்கம் காட்டுகிறார்கள்? இதற்காகத் தான். ஏதோ “அண்ணாமலை” ரஜினி போல பாஜகவில் ஒரே பாட்டில் பணக்காரனாகி விடலாம் என்பது ஒரு கற்பனை - குஷ்பு அதை விரைவில் உணர்ந்து கொள்வார்.
அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஜனநாயகபூர்வமாய் செயல்படுகின்றன என்பது நமது பாமர மனத்தில் உள்ள மற்றொரு கற்பனை மட்டுமே. ஒரு கம்பெனியின் நேர்முகத்தில் கலந்து கொண்டு ரெஸ்யூமைக் காட்டி பேசி, வேலையில் சேர்ந்து சாதித்து பதவி உயர்வு பெறுவதைப் போல அரசியல் வாழ்வு இருக்க வேண்டும் என நாம் கற்பனை செய்கிறோம். (ஆனால் வேலையிடங்களிலேயே எத்தனை உள்ளடி அரசியல்கள்!). நடைமுறை உண்மை வேறு. அரசியல் கட்சிகளில் நாம் காத்திருக்க வேண்டும், குழு அரசியல், சாதி அரசியல் செய்ய வேண்டும், செய்கிற பணிக்கான சுதந்திரம், மரியாதை இல்லாமல் சுரணை கெட்டு இருக்க வேண்டும் அல்லது காங்கிரஸ் போல பணம், குடும்ப பின்னணி வேண்டும்.
பாஜக போன்ற கட்சிகளின் ஒரே சாதகம் அம்சம் வாழையடிவாழையாக சில குடும்பங்களை தழைக்க விட மாட்டார்கள், புதுப்புது “வாழைகள்” தோன்ற அனுமதிப்பார்கள் என்பது. ஆனால் ஜனநாயகம் சுத்தமாய் இல்லை. இக்கட்சிகளில் கூடுதல் வாய்ப்பு கொடுப்பார்கள், ஆனால் நிலைக்க முடியாது (“சிவாஜி” படத்தில் மொட்டை பாஸைப் போல பகலில் போகட்டும் என விட்டுவிட்டு ராத்திரி வந்து மீதத்தை பிடுங்கிக் கொள்வார்கள்.) திமுக, காங்கிரஸில் நிலைக்கலாம், வாய்ப்புகள் குறைவு.


கருத்துகள்