முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீரிழிவு: இன்சுலின் அளவை தீர்மானிப்பது எப்படி?



ஒரு type 1 நீரிழிவு நோயாளி ஒவ்வொரு முறை உணவை எடுக்கும் முன்பும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உணவுக்கும் ஏற்ப இன்சுலின் அளவும் இருக்க வேண்டும். இந்த இன்சுலின் அளவை எப்படி தீர்மானிப்பது என மருத்துவர்கள் பெரும்பாலும் சொல்லித் தருவதில்லை என்பதே என் அனுபவம். வெளிநாடுகளில் டயட் ஆலோசகர்கள் இருப்பார்கள். நீரிழிவு மருத்துவரை பார்த்த பின் உங்களை இந்த ஆலோசகரிடம் அனுப்புவார்கள். அவர்கள் இன்சுலின் அளவுக்கான பார்முலாவை சொல்லித் தருவார்கள். இந்தியாவில் என் அனுபவம் என்னவென்றால் மருத்துவர் ஒரு பொதுவான இன்சுலின் அளவை எழுதிக் கொடுப்பார். காலையில் 12 யூனிட்டுகள், மதியம் இவ்வளவு, இரவு இவ்வளவு என. அதற்கு ஏற்ப உனவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒவ்வொரு உடலிலும் இந்த இன்சுலினானது ஒவ்வொரு விதமாய் வேலை செய்யும். இதனாலே நோயாளிகள் தாம் எடுத்துக் கொள்ளும் உணவின் மாறுபாடுகள், உடம்பின் நிலையைப் பொறுத்து இந்த இன்சுலின் அளவை தம் அனுபவத்தின்படி மாற்றிக் கொள்வார்கள். மருத்துவர் ஒவ்வொரு முறை அவரை நீங்கள் சந்திக்கும் போது இந்த இன்சுலின் அளவைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார். இப்படி ஒரு அனுமானத்தின் படி இன்சுலின் எடுத்துக் கொள்வதன் ஒரு சிக்கல் டயட்டை சுலபத்தில் மாற்ற முடியாது என்பது. உ.தா., நீங்கள் காலையில் 3 இட்லிக்கு பதிலாக ஓட்ஸ் கஞ்சி சாப்பிட விரும்பினால் எவ்வளவு இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும்? மாலை இரண்டு சிறிய வாழைப்பழங்கள் அல்லது கொய்யாப் பழங்கள் சாப்பிட்டால் எவ்வளவு இன்சுலின் அதற்கு?


நான் நீண்ட காலமாய் இன்சுலின் எடுத்து வந்தேன். அளவெல்லாம் ஒரு அனுமானப்படி, என் அனுபவத்தின் படித்தான். இதன் விளைவாக சில நேரம் இன்சுலின் அளவு அதிகமாகி ரத்த சர்க்கரை மிகவும் குறைந்து போயுள்ளது. அப்படித்தான் எனக்கு ஒருநாள் வலிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இதைப் பற்றி விரிவாகப் படித்து எப்படி இன்சுலின் அளவை முடிவு செய்வது எனத் தெரிந்து கொண்டேன். சக நீரிழிவாளர்கள் மற்றும் நீரிழிவு கொண்ட வயதான பெற்றோர்களுக்கு இன்சுலின் ஊசி போட்டு விடும் பிறருக்கும் இது உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்: 


1) எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அதன் கலோரிகளை அல்ல carbs எனப்படும் மாவுச்சத்தின் அளவைத் தெரிந்து கொள்ளுங்கள். மாவுச்சத்து எவ்வளவு என்பதைப் பொறுத்தே இன்சுலினின் அளவு இருக்க வேண்டும். (நான் இங்கு குறிப்பிடுவது குறுகின நேரத்துக்கான short-acting insulin. அதாவது Actrapid போன்றவை. நீண்ட காலம் ரத்தத்தில் தங்கியிருக்கும் Lantus போன்றவை அல்ல. பின்னதன் அளவு மாறுவதில்லை.) 

2) மாவுச்சத்து எவ்வளவு என கூகிள் பண்ணி தெரிந்து கொண்ட பின் அதை பத்தால் வகுத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் இன்சுலின் யூனிட் அளவு. உ.தா., ஒரு சிறிய வாழைப்பழத்தில் 23 கிராம் மாவுச்சத்து உள்ளது. சற்றே பெரியது என்றால் 30 கிராம் என வைத்துக் கொள்ளுங்கள். இதை பத்தால் வகுத்தால் 2.5இல் இருந்து 3 யூனிட் இன்சுலின் என வருகிறது. இரண்டு சிறிய வாழைப்பழங்கள் என்றால் (46 அல்லது 60 என்பதை பத்தால் வகுத்தால்) 4.5 அல்லது 6 யூனிட் இன்சுலின் தேவைப்படலாம்.

 

3) ஒரு கப் காப்பி சாப்பிடுகிறீர்கள். இப்போது ஒரு கப் பாலில் (245 கிராம்) எவ்வளவு மாவுச்சத்து என கூகிள் பண்ணுங்கள். 12 கிராம் என வரும். இதை பத்தால் வகுத்தால் 1.2 யூனிட்டுகள் வருகின்றன. கூடவே ஒரு ஸ்பூன் சர்க்கரையின் மாவுச்சத்து. ஒரு கைக்கரண்டி (டீஸ்பூன்) அளவு சர்க்கரையில் 4 கிராம் மாவுச்சத்து உள்ளது. இதை வகுத்தால் கிட்டத்தட்ட அரை யூனிட் வருகிறது. மொத்தமாய் சேர்த்தால் கிட்டத்தட்ட இரண்டு யூனிட் இன்சுலின் போதும்.


4) இங்கு மூன்று விசயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் அருந்தும் கோப்பையின் அளவு, அதில் போடப்படும் சர்க்கரையின் அளவு முன்னே பின்னே இருக்கலாம். அதற்கு ஏற்ப இன்சுலினை முடிவு செய்யுங்கள். ஒவ்வொரு உணவில் உள்ள மாவுச்சத்தும் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் சர்க்கரையின் அளவு ஒவ்வொரு விதமாய் பாதிக்கும். அதனால் ஒருவருக்கு சற்று கூடுதலாக, மற்றொருவருக்கு குறைவாக இன்சுலின் தேவைப்படலாம். அடிப்படையான அளவு இதுதான் என்றாலும் பரீட்சித்து பார்த்து தேவைப்பட்டால் ஒரு கப் காப்பிக்கு மூன்று யூனிட் கூட எடுத்துக் கொள்ளலாம். உ.தா., என் வீட்டில் பெரிய மக்கில் காப்பி குடிக்கிறேன். அதற்கு எனக்கு ஐந்து யூனிட்டுகள் இன்சுலின் தேவைப்படுகிறது.


5) இது ரொம்ப முக்கியமான விசயம்: இயற்கையான உணவுகளில் உள்ள மாவுச்சத்தை வைத்து அது ரத்த சர்க்கரையை எப்படி பாதிக்கும் என கணிப்பதைப் போல இட்லி, சப்பாத்தி, சோறு போன்ற தானிய உணவுகளுக்கு முடியாது. உ.தா., ஒரு இட்லியில் உள்ள மாவுச்சத்து 8 கிராம். நான்கு இட்லிகள் சாப்பிட்டால் 32 கிராம். இதை பத்தால் வகுத்தால் மூன்று- மூன்றரை யூனிட் இன்சுலின் வரும். ஆனால் இந்தளவுக்கு குறைவாக இன்சுலின் போட்டால் ரத்த சர்க்கரை அதிகமாகும் என்பது என் அனுபவம். இது தானிய உணவுகள் அனைத்துக்கும் பொருந்துகிறது. ஏனெனத் தெரியவில்லை. ஆகையால் தானிய உணவுகளைப் பொறுத்தமட்டில் வெறுமனே மாவுச்சத்தை மட்டும் வைத்து கணக்கிட்டால் போதாது. அனுபவத்தை வைத்து முடிவு செய்யுங்கள்.


6) நீங்கள் பேலியோ டயட்டில் இருக்கிறீர்கள் அல்லது சாலட் மட்டுமே மூன்று வேளையும் சாப்பிடப் போகிறீர்கள் என்றால் அந்தந்த உணவில் என்னவிதமான காய்கறிகள், இறைச்சி வகைகள் சேர்க்கடுகின்றன, ஒவ்வொன்றிலும் மாவுச்சத்து எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு அவற்றை கூட்டி பத்தால் வகுத்து இன்சுலின் அளவைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுவொரு சள்ளை பிடித்த வேலைதான், ஆனால் வேறு வழியில்லை. பச்சை காய்கறியில் மாவுச்சத்தா இருக்கும் என நினைத்து இன்சுலின் போடாமல் இருக்காதீர்கள். தண்ணீரைத் தவிர வேறு எல்லாவற்றிலும் மாவுச்சத்து கொஞ்சமாவது இருக்க வாய்ப்புள்ளது. சிக்கன் மசாலா சாப்பிடுகிறீர்கள் என்றால் அதில் எவ்வளவு வெங்காயம், தக்காளி போன்றவை சேர்த்திருக்கிறார்கள், கறியின் அளவு எவ்வளவு எனத் தெரிந்து கொண்டு கூட்டிக் கழித்து இன்சுலின் அளவை அறியுங்கள். 


7) இரண்டு மணிநேரம் போல கடும் உடற்பயிற்சி செய்து விட்டு ரொம்ப லைட்டான உணவுகளை (சாலட், வேக வைத்த காய்கறிகள் போல) மட்டும் எடுத்துக் கொண்டால் அப்போது ஒருவேளை இன்சுலின் அதிகப்படியாய் வேலை செய்யலாம். இதைக் கணக்கில் கொண்டு இன்சுலின் அளவை முடிவு செய்யுங்கள்.


8) வீட்டில் ஒரு சிறிய எடை எந்திரம் (kitchen scale) வைத்து சமைக்குமுன் எந்த பொருளையும் அளந்து கொள்ளுங்கள். அதை வைத்தே மாவுச்சத்தை அளக்க வேண்டும் (சமைத்த பிறகல்ல). இதிலும் விதிவிலக்கு உண்டு - கருவாட்டுத் துண்டு மீன் துண்டை விட எடை குறைவாக இருக்கலாம். இங்கு கருவாட்டை ஒரு மீனின் சராசரியான எடையை வைத்து கணக்கிடுங்கள்.


9) எந்த புது உணவையும் உண்டு 2 மணிநேரங்களுக்குப் பிறகு ரத்த சர்க்கரையை ஒரு glucometer கொண்டு அளந்து பார்த்து இன்சுலின் அளவு சரியாக இருக்கிறதா என உறுதிப்படுத்துங்கள். அதைப் பொறுத்து உங்கள் உடல் இயல்புக்குத் தேவைப்படும் இன்சுலின் அளவை ஒரு அட்டவணையில் எழுதி வைத்துக் கொள்ளலாம். “இன்று ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமும் இவ்வளவு இன்சுலின் எடுத்துக் கொண்டேன், அது போதவில்லை, அல்லது சரியாக இருக்கிறது” என போனில் நோட்ஸ் ஆப்பில் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் எப்போதாவது ஐஸ்கிரீம் சாப்பிடத் தேவை வந்தால் அதில் தேடிப் பார்த்து சரியான இன்சுலின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். 


10) தினமும் இரண்டு வேளைகள் (காலை எழுந்ததும், இரவு தூங்கும் முன்) ரத்த சர்க்கரை அளவை சோதியுங்கள். ஒருவேளை அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் அதைப் பொறுத்து அன்றைக்கான இன்சுலினை கூட்டவோ குறைக்கவோ செய்து, அந்த அளவை உணவுக்கான இன்சுலினை கணக்கிடும் போது பரிசீலனை பண்ணுங்கள். எப்படி?

 உங்கள் ரத்த சர்க்கரை அளவு காலையில் 80 என இருக்கிறது. இது சராசரியான ரத்த சர்க்கரை அளவை விட 40 குறைவு. (இன்னும் 10-20 குறைந்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்.) ஒரு யூனிட் இன்சுலின் என் உடம்பில் 30 எனும் அளவில் சர்க்கரையை குறைக்கும். உங்கள் உடல் இயல்புப்படி உங்களுக்கு இது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். நீங்கள் இப்போது காலையில் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடப் போகிறீர்கள். 45 கிராம் ஓட்ஸை வேக வைத்து மோர் சேர்த்து காலை உணவைத் தயாரிக்கிறீர்கள். 16 கிராம் மாவுச்சத்து இதில் உள்ளது. ஒன்றரை யூனிட் இன்சுலின் இதற்குப் போதும். கூட கொஞ்சம் மோர் மற்றும் பாதி நறுக்கின வெங்காயம் (4 கிராம் மாவுச்சத்து) சேர்ப்பதால் இரண்டு யூனிட்டுகள் தேவை. ஆனால் ஏற்கனவே ரத்த சர்க்கரை அளவுக்கு 40 குறைவாக உள்ளதால், ஒரு யூனிட் இன்சுலின் 30 எனும் அளவில் என் ரத்த சர்க்கரையை குறைக்கும் என்பதால், அன்றைய காலை உணவுக்கான இன்சுலினை இரண்டில் இருந்து ஒரு யூனிட் என குறைத்துக் கொள்வேன். ஒருவேளை என் ரத்த சர்க்கரை காலையில் 200 என இருந்தால் அதை நான் 120-140ஆக குறைக்க வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு யூனிட்டுகள் உபரி இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது நான் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுமுன் என் இன்சுலினை வழக்கமான இரண்டு யூனிட்டுகளில் இருந்து நான்காக உயர்த்திக் கொள்வேன். 

 தலைசுற்றுகிறதா? வேறு வழியில்லை. இன்சுலின் மேலாண்மையில் இதை high / low blood sugar correction என்கிறார்கள். மருத்துவமனையில் நீங்கள் அட்மிட் ஆகி இருந்தால் இதை மருத்துவரே கணக்கிட்டு தினமும் உங்கள் ரத்த சர்க்கரைக்கு ஏற்ப மாற்றுவார். வீட்டில் இருக்கையில் நீங்களே செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். 


இரண்டு பொறுப்புத் துறப்புகள் (disclaimers):


1) ஜுரம் வந்தாலோ அல்லது முக்கியமாய் அஜீரணம் ஏற்பட்டு வாந்தி வந்தாலோ இந்த இன்சுலின் அளவு தலைக்கிழாகி விடலாம். இப்போது எடுப்பதற்கு பல மடங்கு அதிகமாய் எடுத்தால் மட்டுமே சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை வரும். தினமும் சர்க்கரை அளவை சோதியுங்கள். நோய்வாய்ப்படும் போது தவறாமல் சோதியுங்கள். அதை வைத்து இன்சுலின் அளவை அதிகப்படுத்துங்கள். உடல் சீரானதும் பழைய அளவுக்கு இன்சுலினை கொண்டு வரலாம்.


2) நான் மருத்துவன் அல்ல. ஆகையால் சந்தேகம் இருப்பின் உங்கள் நீரிழிவு சிறப்பு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு கீழ்வரும் சுட்டியை சொடுக்குங்கள்:


https://dtc.ucsf.edu/types-of-diabetes/type2/treatment-of-type-2-diabetes/medications-and-therapies/type-2-insulin-rx/calculating-insulin-dose/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...