Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரஜினியின் முற்றுப்பெறாத அரசியல் பிரவேசம்


அமித் பாயின் ஆட்கள் உருட்டி மிரட்டி இறுதியில் தலைவரை சம்மதிக்க வைத்தே விட்டார்கள். இது வேல் யாத்திரை, குஷ்பு vs திருமா போன்ற மத ரீதியான ஒருங்கிணைப்புகளில் பாஜக தலைமை மெல்ல மெல்ல நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. இனி மும்முரமாக அதிமுகவின் உட்கட்டமைப்பை பயன்படுத்தி வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் நின்று அதிமுக வாக்குகளை தம் வசப்படுத்தி எப்படியாவது பத்து இடங்களையாவது பெறுவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைக் கொண்டு சிறிய வித்தியாசத்தில் சில தொகுதிகளில் வெற்றி பெற்றதாக ஒரு நாடகத்தை நடத்தி, குறிப்பிட்ட இடங்களையாவது அதிமுகவும் பாஜகவும் பகிர்ந்து கொள்வது, இறுதியாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களில் டு மினிட் நூடுல்ஸ் கட்சிகளைக் கொண்டு வாக்குகளைப் பிரிப்பது மட்டுமே பாஜகவின் பிரதான வியூகமாக இருக்க முடியும். அதாவது, இப்போதைக்கு பாஜக நம்பியிருப்பது (1) அதிமுகவின் வாக்குவங்கி, (2) மின்னணு வாக்குப்பதிவு எந்திர மோசடி, மற்றும் (3) வாக்குகளை சிதறடிக்கும் திரை ஆளுமைகள். 

யாருடைய வாக்குகள் வரப்போகும் தேர்தலில் இவர்களால் சிதறப் போகின்றன என நாம் இங்கு கேட்க வேண்டும்:
வடமாநிலங்களில் பொதுவாக ஒவைஸ்ஸி போன்ற கறுப்பாடுகளை பயன்படுத்தி பொதுவான முற்போக்கு இந்து வாக்குகளை பாஜக தம் வசம் திருப்பியது, அதே போல காங்கிரஸின் வாக்காளர்களான இஸ்லாமியர் பலரையும் ஒவைஸியின் ஆட்களுக்கு வாக்களிக்க செய்தது. தமிழகத்தில் இந்த பொதுவான, நடுநிலை வாக்காளர்களை இந்துமயப்படுத்தலாம் எனும் முயற்சி தோற்ற நிலையில் அவர்களை திராவிட கட்சி-சார்பற்ற வேட்பாளர்கள் மற்றும் திரை ஆளுமைகள் நோக்கி சிதறடிக்கலாம் என பாஜக இப்போது கணக்குப் போடுகிறது. இதற்காகத் தான் தினமும் இருபது மாத்திரைகள் முழுங்கும் ரஜினியை, தேர்தல் அரசியலால் தன் திரை வாழ்க்கைக்கு பங்கம் வந்து விடக் கூடாதே என அஞ்சும் ரஜினியை கழுத்தில் கத்தி வைத்து இறக்கி விட்டிருக்கிறார்கள்.
 
இந்த வியூகத்தை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
1) அடுத்த சில மாதங்களில் ரஜினி நேரடியாக பயணித்து மக்களை சந்தித்து பேசுவார் என நான் நம்பவில்லை. அதற்குப் பதிலாக அவரது ஐடி விங் ஆட்கள் ரஜினி சார்பில் தினமும் சில ட்வீட்டுகளை போடுவார்கள். அதை நமது டிவி சேனல்கள் விழுந்து விழுந்து விவாதிக்க வேண்டும் என தில்லியில் இருந்து அமித் பாய் அசைன்மெண்டை கொடுத்து விடுவார். ரஜினியும் அவ்வப்போது தனக்கு எழுதி அளிக்கப்பட்ட அறிக்கைகளை மனப்பாடம் பண்ணி ஊடகத்திடம் ஒப்பிப்பார். இதையும் அவரது கட்சிப் பேச்சாளர்கள் விளக்குவார்கள். இது ஒரு உப-வியூகம் - அதாவது ஒட்டுமொத்த தேர்தல் உரையாடலையும் ரஜினி-கமல்-மூன்றாவது அணி நோக்கித் திருப்புவது. ஆனால் இந்த சதித்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலியாகக் கூடாது. ரஜினி, கமலை விமர்சிப்பது, அவர்களுக்கு பதில் அளிப்பது என மிகுதியான இடத்தை, நேரத்தை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அப்படியே புறக்கணித்து விட வேண்டும். 
2) நான்கைந்து மாதங்களில் ரஜினி கட்சிக்கான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தி, வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வது நடக்கிற கதை அல்ல. இந்த குறுகின இடைவெளியில் ஒரு தொகுதியில் நிற்கப் போகும் வேட்பாளரை அங்குள்ள மக்கள் பரிச்சயம் கொண்டு அவர்களின் கொள்கைகளைத் தெரிந்து கொண்டு நம்பிக்கை பெற்று ஓட்டுக்களை அளிப்பது நடக்காத காரியம். மேலும் இந்த கட்சி ஒரு வெளிப்புற அழுத்தத்தினால் உருவாகிற ஒன்று என்பதால், தலைமை சினிமாவில் ஒரு கால், பாஜக புழக்கடையில் ஒரு கால், ஐ.டி ரெய்டுக்கு தலை, பாஜக அளிக்கும் பணத்துக்கு வால் எனக் கொடுத்து தெளிவற்று இருப்பதால் அதன் தொண்டர்களும் மும்முரமாக பணி செய்யப் போவதில்லை. அதாவது தெமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்குக் கூட ஒரு முழுநேரத் தலைமை, தெளிவான நோக்கம், கொள்கை இருப்பது போல இந்த டூ மினிட் நூடுல்ஸ் கட்சிகளுக்கு இல்லை. ஆம் ஆத்மியினரைப் போல ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு தம்மை நிறுவவும் அவர்களுக்கு அவகாசமில்லை. (ஆம் ஆத்மிக்கே இங்கு கதவை மூடி விட்டார்கள் என்பது வேறு கதை.) ஆனாலும் ஊழல் எதிர்ப்பைக் கொண்டு அதிமுகவை தாக்கி அவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்தி ஒரு பி-டீமை பாஜக உருவாக்கியிருக்கலாம். (அது வேல் யாத்திரை, குஷ்பு யாத்திரையை விட பயன்பட்டிருக்கும்.) ஊழலற்ற ஆட்சி எனப் பேசுவதன் வழி அவர்களால் திராவிடக் கட்சிகளை ஒரு சிக்கலான இடத்துக்குத் தள்ளி திராவிட ஒவ்வாமை இல்லாத நடுநிலையாளர்களை, அரசியல் புரிதல் குறைவான மத்திய வர்க்கத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் அதிமுகவுக்கு எதிராக, சார்பாக, நடுநிலையாக இருப்பது என தகிடுதித்தம் செய்து இந்த சாத்தியத்தை பாஜக தவற விட்டது. இப்போது அவர்களுக்கு தமிழகத்தில் எந்த இடமும் இல்லை (அதிமுகவின் தோளில் ஏறி சவாரி செய்வதைத் தவிர.)
 திராவிடக் கொள்கையை விரும்பாத சிறுபான்மையினர் கூட இங்கு உ.பி., பீகாரில் உள்ள பொதுநிலை இந்துக்களைப் போல பெரும் தரப்பு அல்ல. இங்கு சாதி, முற்போக்கு, சமூகநீதி அரசியலே பெரும்பான்மை வாக்காளர்களைக் கவர்கிறது. இம்மூன்றுமே பாஜகவின், ரஜினியின் அரசியலுக்கு ஒவ்வாதவை. ஆகையால் பாஜகவின் பிற மாநிலங்களில் வெற்றிபெற்ற ஓட்டுப் பிரிப்பு வியூகத்தைக் கண்டு இத்தனை சதம் வாக்குகள் போய் விடும் திமுக கூட்டணியினர் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்லை. 
இதுவரையில் ஜெயலலிதாவுக்கு மூன்றாவது அணியாக இருந்து உதவியவர்கள் தமிழ் தேசிய அரசியலை எடுத்தும் கொண்டவர்கள். அதற்காக தயாராக இருந்த களத்தை பயன்படுத்தியவர்கள். ஒரு சில வருடங்களாவது களத்தில் நின்று பிரச்சாரம் செய்து நம்பிக்கையை ஏற்படுத்தியவர்கள். தெமுதிக, நாம் தமிழர், மே 17 இயக்கம் போன்ற கட்சிகளை இவ்விசயத்தில் கமல், ரஜினியின் கட்சிகளுடன் ஒப்பிடவே முடியாது. இதில் கமல் கூட ஓரளவுக்கு திராவிட மரபில் வருகிறவராக தன்னைக் காண்பித்து, சற்று முன்னதாகவே கட்சி ஆரம்பித்து தயாரிப்பு வேலைகளை செய்து வருகிறார். ரஜினியோ ஸ்கைப்பில் பெண் பார்த்து விமானத்தில் இருந்து இறங்கியதுமே திருமணம் செய்ய வருகிற அமெரிக்க மாப்பிள்ளை. 

 அதனாலே மூன்றாவது அணியின் வாக்குப் பிரிப்பு செயல்திட்ட வெற்றி வாய்ப்பு - மற்ற கட்சிகள் அளவுக்கு - இந்த நடிப்பாளுமைகளின் கட்சிகளுக்கு இருக்காது என நினைக்கிறேன். 

3) அதிமுகவைப் பொறுத்த வரையில் கடந்த சில ஆண்டுகளில் எடப்பாடியாரின் அணியினர் தம்மை நிலையான தரப்பாக காட்டியிருக்கிறார்கள். ஊடகப் பிராச்சாரத்தில் (மோடி பாணியில்) வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பாஜகவின் சொம்பு இவர்கள் என்பது மக்கள் மனத்தில் ஆழமாய் பதிந்திருப்பதால் வலுவற்ற கட்சி எனும் எண்ணமும் மக்களுக்கு உண்டு. திமுக தம் பிரச்சாரத்தின் போது இப்போதைய அதிமுக அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வரின் ஊழலை அம்பலபடுத்த முயற்சிக்க வேண்டும். அவர்கள் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்ட தருணங்களை வலுவாக முனைக்க வேண்டும். இவையிரண்டையும் விட முக்கியமாக - பீகாரில் தேஜஸ்வி யாதவ் செய்த பிரச்சாரத்தின் பாணியில் - எதிர்கால தமிழகத்தை திமுக எப்படி வழிநடத்தப் போகிறது, அதற்கான திட்டங்கள் என்ன என பிரச்சாரம் செய்ய வேண்டும். அதாவது எதிரணியின் ஓட்டைகளைப் பற்றி அதிகம் பேசாமல் (ஏனென்றால் மக்களுக்குக்குத் தான் அது தெரியுமே) தமது சிறப்புகளை, திட்டங்களை, தாம் கொண்டு வரவிருக்கும் மறுமலர்ச்சியைப் பற்றி அதிகம் பேச வேண்டும். எதிர்மறையாக அன்றி நேர்மறையான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். 

வாக்குகளை சிதறடிக்க மட்டுமல்ல, கவனத்தை சிதறடிக்கவும் தாம் மூன்றாவது அணியினர் அமைக்கப்படுகிறார்கள். அந்த பொறியில் விழுந்து விடக் கூடாது. ஏனென்றால் தேர்தல் முடிந்ததும் ஸ்டாலினுக்கு போன் போட்டு வாழ்த்துகிற முதல் ஆள் ரஜினியாகவே இருப்பார். அதைக் கருதி அவரை சீண்டாமல் விடுவதே சிறந்த அரசியலாக இருக்கும். கமல் தேர்தல் முடிவுகள் வரும் முன்னரே இன்னும் மூன்று எடுக்க சாத்தியமில்லாத படங்களுக்கான கதைகளை யோசித்துக் கொண்டிருப்பார். யாராவது ஞாபகப்படுத்தினால் மட்டுமே குழப்படியான அரசியல் ட்வீட்களைப் போடுவது, இரு பக்கமும் மேளமடிக்கும் அறிக்கை விடுவது, வெண்ணெய் போல வழவழா வெண்பா எழுதுவது என இருக்கும், எந்த மக்கள் போராட்டத்தையும் யாருக்கு எதிராகவும் ஒருங்கிணைக்காத அவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நடைமுறை அரசியலை மறந்துவிட்டு “உலக நாயகன்” பிம்பத்தில் கரைந்து விடுவார்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...