முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேளாண் சட்டங்களுக்கு முட்டுக்கொடுப்போரின் தயக்கம்



வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் இச்சட்டங்களின் கார்ப்பரேட் சார்பு நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிற கட்டுரைகளை, விளக்கங்களை பாஜக பக்கமிருந்து, நவதாராளத்துவ சிந்தனையாளர்கள் தரப்பில் இருந்தும் காணோம். இதுவே எனக்கு ஆச்சரியமளிக்கிறது - மாறாக, இது ஒரு நவதாராளாதவாத திட்டமல்ல, இது மக்கள் நலத்தை நோக்கமாக கொண்ட சட்டம் என முட்டுக் கொடுக்கிறார்கள். என்னதான் அதானியின் விமானத்தில் பறப்பவர் என்றாலும் தன்னை ஒரு ஏழைப்பின்புலத்தை சேர்ந்தவர் என காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. என்னதான் மத்திய வர்க்கத்தின் செண்டிமெண்டுகளை வெளிப்படுத்தினாலும் விளிம்புநிலையினருக்கான நலத்திட்டங்களை வடக்கே அதிகமும் கொண்டு வந்தே அவர் இரண்டாம் முறையும் பிரதமராக முடிந்தது.


பாஜக ஏன் பம்முகிறது என்றால், மக்கள் எதிர்ப்பு, விவசாயம், சிறுதொழில் வியாபாரம் எனும் பல கூர்முனைகள் கொண்ட ஒரு பெரும் ஆயுதத்தை பாஜக எதிர்கொண்டு “சத்தியமா வலிக்கல” என நடிக்கவும், நான் ஒரு சாத்வீகமான அன்பான ஆள் என வேடமணியவும் நேர்கிறது. இதனாலேயே பிரதமரும் அமைச்சர்களும் திரும்பத் திரும்ப சொன்னாலும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட மாட்டேன் என்கிறது. “இது உன் டயலாக் இல்லியே தம்பி” என பஞ்சாப், ஹரியானா வேளாண் மக்கள் சந்தேகிக்கிறார்கள்.


 சுவாரஸ்யம் இங்கு என்னதான் நமது கார்ப்பரேட் சார்பு அரசுகள் மொத்த நாட்டையும் சில பணக்காரர்களுக்கு விற்க விழைந்தாலும் இந்நாட்டின் பன்மையமான, பன்முகங்கள் கொண்ட நிலப்பரப்புகளும் ஜனங்களும் இன்னும் உயிருடன் இருக்கிற ஜனநாயகமும் இதை சுலபமாக்குவதில்லை. இந்த பின்னணியில் தான் “இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை சுலபத்தில் கொண்டு வர முடியாதபடிக்கு இங்கு ஜனநாயகம் ரொம்ப அதிகமாக உள்ளது” என நிதி ஆயோக்கின் அமிதாப் காண்ட் சொல்வதைப் பார்க்க வேண்டும்.


 யோசித்துப் பாருங்கள், இதுவே அமெரிக்கா என்றால் வேளாண் சட்டங்களை நவதாராளதாவ நவமணிகள் என அரசும் அரசின் ஆதரவாளர்களும் வெளிப்படையாக கொண்டாடி இருப்பார்கள்; அங்கு ஒரு சிறுபான்மை பெரும்பணக்காரர்கள் ஆவதே லட்சியம், இங்கோ பெரும்பகுதி மக்களின் இலக்கு நிம்மதியான, நிலையான வாழ்க்கை, பணத்துக்குப் பதிலாக விழுமியங்களை, பாரம்பரியத்தின் வேர்களை தழைக்க வைப்பது, குடும்பம், பிள்ளை, பேரப்பிள்ளைகள் பசியின்றி இருக்க ஒன்றாக சொந்த மண்ணில் வாழ்வது. நமக்கும் அமெரிக்கர்களுக்குமான முக்கிய வித்தியாசம் இது.


   அதனாலே இம்மண்னில் கார்ப்பரேட்டுகள் மீது ஒரு அவநம்பிக்கையும் அச்சமும் இன்னும் மக்களிடம் உள்ளது. அதனாலே கொரோனா காலத்தில் அமெரிக்காவில் மக்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அஞ்சி வீட்டிலேயே பதுங்கிக் கொள்ளும் அவலம் நிகழ்ந்த போது இந்தியாவால் மக்களுக்கு தரமான சிகிச்சையை அரசு மருத்துவமனைகளில் அளிக்க முடிந்தது; வேலையில்லாத மக்களுக்கு சில மாநிலங்களில் இலவசமாக அத்தியாவசிய தானியங்களை கொடுத்து சமாளிக்க உதவினார்கள்; ஆனால் அமெரிக்க நவதாராளாவாத அரசுக்கு இத்தகைய மக்கள் நல அணுகுமுறை இருக்கவில்லை. அங்கு டிரம்பைப் போன்ற ஒருவர் தன் பெரும்பணத்தை, கார்ப்பரேட் செல்வாக்கை விளம்பரப்படுத்தி அதிபர் ஆகும் போது இங்கு செல்வத்தில் திளைக்கும் மோடி கூட தன்னை ஏழைத்தாயின் மகன் என்று கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அழைப்பதும், சில வருடங்களிலேயே பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபராகி விட்ட எடப்பாடி தன்னை விவசாயி என முன்வைப்பதும் மட்டுமே தலைவராக நீடிக்க ஒரே வழியாக இருக்கிறது - இங்கு வெளிப்படையாக ஒருவர் தன்னை செல்வந்தர்களின் பிரதிநிதி என கோரிக்கொள்ள முடியாது; அதனாலே வெளிப்படையாக நீங்கள் மக்களின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் கொடுக்க, கீழ்த்தட்டு, கீழ்மத்திய வர்க்க மக்களின் வாழ்வுரிமைகளை பறித்தெடுத்து மத்திய மேற்தட்டு வர்க்கங்களை மட்டும் காப்பாற்றுகிற ஒரு அரசாக நீங்கள் இங்கு இருக்க முடியாது. அரசியலில் ஊழல் செய்து பெரும் சொத்துக்களை சம்பாதித்தாலும் அவற்றை பினாமிகளைக் கொண்டே கைக்கொள்ள முடியும். இந்த சின்ன தயக்கம் இருக்கும் வரை இந்தியா தப்பித்துக் கொள்ளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...